சென்னையில் கூவம் ஆற்றின் கரையில் இருந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு காவிரிக்கரை ஊரான சாயாவனம் குறித்து நாவல் எழுதினேன். சாயாவனம் என்றால் கதிரவன் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழைய முடியாத வனம் என்பது பொருள். சாயாவனத்தை ஒட்டிச் செல்லும் ராஜபாட்டையில் கோவலனும் கண்ணகியும் கால் பதித்து மதுரைக்கு நடந்து சென்றதன் சுவடுகள் பதிந்திருக்கும் ஊர்.
சாயாவனத்தின் முன்னே புகார் செல்லும் நெடுஞ்சாலை. பின்னால் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இரண்டிற்கும் இடையில் வனமொத்த பெருந்தோட்டம். செம்போத்துகள் கூவிக்கொண்டு தாழப் பறந்து போகின்றன. பச்சைக் கிளிகள், சிறகடித்தபடி செல்கின்றன.
உயரமான இலுப்பை மரங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டு இருக்கும் புன்னை மரங்கள். சாய்ந்த மூங்கில்கள். குறிஞ்சா செடிகள், ஓணான் கொடிகள் படர்ந்த கள்ளிச் சப்பாத்திகள். அதன் கீழே ஊர்ந்து போகும் பாம்புகள், இனிப்பும் புளிப்புமாகப் பழங்கள் கொண்ட புளிய மரங்கள். நெல் விளையும் கழனிகள். குளங்கள். நீரோடும் ஓடைகள் இவற்றோடு இணைந்து வாழும் மக்கள் அமைதியான வாழ்க்கை தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கையை எல்லோர்க்கும் எல்லோரும் பொதுவான எழுதும் முயற்சி. ஒரு கிராமத்து வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளாவதை, சுற்றுப்புறச் சூழல் மாறுவதை, விளை நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்படுவதை, மக்கள் உணவு பழக்கங்கள் ருசி எல்லாம் தன்னளவில் மாற்றப்படுவதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதும் அதனைக் காப்பாற்றிக்கொள்ளத் தூண்டுவதும் அவசியம் என்பதுதான் நாவல்.
சாயாவனம் எழுதும்போது அங்கே சென்று கள ஆய்வு எதுவும் செய்யவில்லை. பத்துப் பன்னிரண்டு வயதில் கண்டதையும், கேட்டதையும், படித்ததையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதினேன். நாவல் நான்காண்டுகள் கழித்து வெளிவந்தது. படித்துப் பார்த்துவிட்டு சாயாவனம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கச் சென்றேன்.
வனம் அப்படியே இருந்தது. பெரிதாக அழிப்பு வேலைகள் ஒன்றும் நடைபெற்று இருக்கவில்லை. அது ஆறுதலாக இருந்தது. ஆனால் சாயாவனம் சென்ற வழியெல்லாம் அப்படி இல்லை. நிறைய மாறுதல்கள். சுற்றுப்புறச் சூழல் மாறிவிட்டது.
இந்த ஐம்பதாண்டுகளில் பல முறைகள் புகார், சாயாவனம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்னால் சாயாவனத்தில் கால் பதித்து நடந்து சாயனேஸ்வரரையும், குயிலினும் இனிய நன்மொழி அம்மையையும் தரிசித்துவிட்டு வந்தேன். சில செடிகள் வெட்டப்பட்டிருந்தன. பல மரங்கள் சாய்ந்து கிடந்தன. ஆனால் சாயாவனம் இருக்கிறது. அதன் இருப்பும், கற்பனையான அழிப்பும் இரண்டற நாவலில் இணைந்து போகிறது. சொல்லப்பட்டதும், சொல்லப்படாததும் அதுவே என்பது சாயாவனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
Kmkarthi kn –
சாயாவனம்
சா.கந்தசாமி
நற்றிணை பதிப்பகம்
1968ல் எழுதப்பட்ட இந்த நாவலானது #இயற்கை மற்றும் #சூழியல் சார்ந்து தமிழில் வந்த முதல் நாவல். தனிமனிதன் ஒருவனின் பேராசையால் ஒரு வனம் உயிருடன் வதைக்கப்படுவதைப் பேசுகிறது நாவல். அது வாசிக்கும் நம்மையும் வதைக்கிறது என்பது தான் சா.கந்தசாமி அவர்களின் வெற்றி. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடிய அளவில் தான் இருக்கிறது புத்தகம். ஆனால் இது ஏற்படுத்தும் தாக்கம் பெரும் குற்றவுணர்வைப் பிரசவிக்கும் என்பதே என் திண்ணம்.
இந்த நாவலோட உயிர்ப்புத்தன்மைக்கு காரணம்னு நான் நினைக்கிறது இந்த நாவல்ல சொல்லப்பட்டிருக்கும் டீடெய்லிங் தான். வெறுமனே கதையை மட்டுமே சுவாரஸ்யமா சொல்லிட்டு போயிருக்கலாம் ஆனால் அதைச் செய்யாம அந்த வனத்திற்குள் இருக்கும் சிறு புல்லில் தொடங்கி வானுயர்ந்த மரங்கள் வரை அனைத்துத் தாவரங்களின் பெயர்களையும் அதன் குணங்களையும் இவர் விவரித்திருக்கும் விதத்திலேயே தெரிகிறது ஆசிரியர் எத்தனை பெரிய வனப்பிரியர் என்று. பாட்ஷா படத்துல ஒரு வசனம் வருமே நாடி, நரம்பு, ரத்தம் எல்லாத்துலயும் ஒரு ரவுடியிச வெறி ஊறிப்போனவனால மட்டும் தான் இப்படி அடிக்க முடியும்னு அதேபோல இயற்கையின் மீது தீராக்காதல் கொண்டவர்களால் மட்டுமே இப்படி ஒரு நாவலைப் படைக்க முடியும்.
கதை நிகழும் காலகட்டம் 1906. பணம் என்ற சாத்தான் பிறந்திடாத காலகட்டம் அது. பண்டமாற்று முறை தான். 500 ரூபாய் மதிப்புக்கான தங்கத்தை குடுத்து அந்த மிகப்பெரிய வனத்தை வாங்குகிறான் சிதம்பரம். அவனது எண்ணம் அந்த வனத்தை அழித்து ஒரு கரும்பு ஆலை கட்ட வேண்டுமென்பதே. அதற்கு அவனது மாமா சிவனான்டி உறுதுணையாக இருக்கிறார். இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டம். வென்றது யார் என்பதே கதை.
அந்த வனத்தை ஆசிரியர் வர்ணித்திருக்கும் விதமே அந்த வனத்தின் வளம் என்ன என்பதை பறை சாற்றுகிறது. வனத்தின் மையத்தில் நின்று அண்ணாந்து பார்த்தால் வானமே தெரியவில்லை அல்லது வனமே வானமாக இருக்கிறது. அந்த வனத்தின் மரங்களின் அமைப்பு வானத்திலிருந்து பூமி வரை கயிறு கட்டி தொங்க விட்டது போல இருக்கிறது என்ற இரண்டு உவமைகளின் வழியே அந்த வனத்தின் மொத்தக் காட்சியையும் நம் விழிகளுக்குள் விரிக்கிறார்.
நாவலின் மொழி மற்றும் எழுத்து நடையைப் பற்றி மட்டுமே தனிக்கட்டுரை எழுத வேண்டும் அத்தனை சிறப்பு.
சிதம்பரம் முதல் முறை அருவாளை எடுத்துக்கொண்டு வனத்திற்குள் செல்லும் போது அங்கிருக்கும் இலுப்பை மரத்தில் கொத்துவான். அப்போது இலுப்பை மரத்தின் பால் அவன் முகத்தில் தெறிக்கும். நான் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். அந்தளவுக்கு அந்த எழுத்து உங்களை தன்வயப்படுத்திக் கொள்ளும்.
ஏற்கனவே சொன்ன மாதிரி டீடெய்லிங். வனத்தைப் பற்றி மட்டுமே டீடெய்லிங் குடுக்காம அந்த கிராமத்தில் ஒரு திருமணம் நடக்கும். அந்தத் திருமணத்தைப் பற்றிய டீடெய்லிங் எல்லாம் பொக்கிஷமாக பாதுகாக்கப் பட வேண்டியவை. நீங்களே அந்த திருமணத்துக்குப் போய் மணக்களை வாழ்த்திட்டு வந்தது மாதிரி உணர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
IPS, IAS மற்றும் IT வேலைய விட்டுட்டு விவசாயத்துக்கு வந்தவங்க, தோள்ல ஆட்டுக்குட்டிய போட்டுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் குடுக்கறவங்க, திடீர் விவசாயம், இயற்கை பத்திலாம் கிளாஸ் எடுக்கறவங்க என எல்லாருமே இந்த புத்தகத்தை ஒருமுறையாவது படித்து விடுவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
#Kmkarthikeyan_2020-51