1 review for கோபத்தின் கனிகள்
Add a review
You must be logged in to post a review.
₹595.00
அமெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல்.
அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (1902 — 1968) அவர்களால் எழுதப்பட்டது. தேசிய புத்தக விருது, புலிட்சர் பரிசு என பல பரிசுகளைப் பெற்ற நூல்;
ஜான் ஸ்டீன்பெக்கிற்கு 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது அவர் குறித்த விவரணத்தில் அதிகம் விதந்தோதப்பட்ட நூல். 1940 ஆம் ஆண்டிலேயே புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான ஹென்றி ஃபோண்டா நடித்து, ஜான் ஃபோர்டு இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்து புகழ் பெற்றது.
Delivery: Items will be delivered within 2-7 days
Prasannan –
#வாசிப்பனுபவம் :
#கோபத்தின்_கனிகள்
#ஜான்_ஸ்டீன்பெக்
#பாரதி_புத்தகாலயம்
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் பொழுதெல்லாம் அதை அமெரிக்காவின் 1930 ல் வந்த “பெரும் பொருளாதார சரிவுடன்” (Great Depression) ஒப்பிடுவது இயல்பு. அந்தச் சரிவு அப்படிப்பட்டது. பங்குச்சந்தையில் ஏற்றக் குறியிடு வரலாறு காணாத அளவு மைனஸைத் தொட்டது. விவசாயம் அழிந்தது. விவசாயிகள் கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்தனர். இதன் பின்ணனியில் பரந்து விரிந்த கதை இது.
இதை எழுதிய ஆண்டு 1939, பெரும் பொருளாதார வீழ்ச்சி நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர். இந்த நாவலுக்கு அடுத்த ஆண்டிலேயே 1940 ல் புலிட்ஸர் பரிசு கிடைத்தது. 1962 ல் நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டீன்பெக் பாராட்டுரையில் இந்த நாவலைப் பற்றிய குறிப்புகளே அதிகம் இருந்தன.
மொழி பெயர்த்த கி. ரமேஷ் மிகுந்த உழைப்புடன் மொழிபெயர்த்திருப்பது தெரிகிறது. ஆனால் மொழிபெயர்ப்பாளரைப் பற்றிய குறிப்புகள் நூலில் ஏதும் இல்லை என்பது ஏனென்று தெரியவில்லை.
ஒக்லஹாமா என்ற நகரம். குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த குடியானவர்கள், கடன் கொடுத்த வங்கிகளின் மிரட்டல்களால் கடன் கட்ட முடியாமல் போக, டிராக்டர்களால் வீடுகள் இடிக்கப்பட்டு, நிலங்கள் பறிக்கப் பட்டு ஒரே நாளில் அனாதையாகிறார்கள். நிலம் என்பது பணம் என்றாகி, பணம் இருப்பவர்களுக்காக வங்கிகள் என்றான சூழலில் புலம் பெயர்வு இன்றியமையாததாகிறது.
ஒரு கொலை செய்து, நான்கு வருடங்கள் சிறையில் இருந்த பின் வீட்டை நோக்கி வரும் ஜோட் ஜுனியர். தங்கள் நிலம் களையிழந்து கிடப்பதைக் காண்கிறான். நண்பன் ஒருவனை சந்திக்க, அப்பா ஜோட் குடும்பம் கலிஃபோர்னியா நோக்கி செல்லவிருப்பதாகவும், அவனுடைய மாமா ஜான் வீட்டில் இருப்பதாகவும் கூறுகிறான். தன் இளவயதில் ஞானஸ்னானம் தந்த ஃபாதர் கேஸியையும் அழைத்துக் கொண்டு மாமா வீட்டிற்குச் செல்கிறான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது அவர்களின் கலிஃபோர்னாயாவை நோக்கிய புலம் பெயர்வு. அப்பா ஜோட், அம்மா ஜோட் (இவர் நாவல் முழுவதும் அம்மா என்றே அழைக்கப் படுகிறார்), ஜோட்டின் இரு தம்பிகள் நோவா மற்றும் அல்ஜோட், தங்கை ஷரான் ரோஸ், அவளுடைய கணவன் கோனி, ஜோட்டின் தாத்தா, பாட்டி. ஒரு சிறுவன், சிறுமி கூட ஒரு நாய். ஒரு ட்ரக்கில் பயணம். கிட்டத்தட்ட 3000 கி. மீ. பயணம். வேலை தேடிய நெடும் பயணம். அங்கே வேலைக்கு ஆட்கள் தேவை என்ற ஒரே ஒரு நோட்டீஸை வைத்துக் கொண்டு….
போகும் வழியில் நாய் மரணிக்கிறது. தாத்தாவிற்கு ஸ்ட்ரோக் வந்து வழியிலேயே இறக்க, வழிப்பயணிகள் வில்சன் குடும்பத்தினர் உதவி மூலம் இறுதிச் சடங்கு நடக்கிறது. கூட வந்த போதகர், தான் தொழிலை விட்டு விட்டதாகச் சொன்னாலும் ப்ரேயர் பாட ஒரு குழியில் இறக்கி வைக்கப் படுகிறார். வில்சன் கார் ரிப்பேராக, அல் ஜோட் சரி செய்ய, இரண்டு குடும்பங்களும் இணைந்து நகர்கிறார்கள். நான் என்பதை விட நாம் என்பது சிறந்ததல்லவா என்று அப்பா ஜோட் கூறுகிறார்.
இடையில் இன்னொரு மரணம். பாட்டி மரணிக்கிறார். வில்சன் மனைவி உடல் நிலை மோசமாக, ஜோட் குடும்பம் மட்டும் மேலே பயணத்தைத் தொடர்கிறது. ஒரு முகாமில் தங்கும் போது கோனி தன் சொந்த வழியைத் தேடி, ஷரான் ரோஸை விட்டுச் சென்று விடுகிறான். நோவா ஜோட் குடும்பத்திலிருந்து விலகி, ஒரு கரையோரம் மீன்களுடன் தங்கி விடுகிறான். அங்கிருந்து கிளம்பி ஒரு அரசினர் முகாமில் தங்குகிறார்கள். அந்த முகாமை ஒரு சோசலிச முகமாகவே காண்பிக்கிறார் எழுத்தாளர். மற்ற முகாம் போல ஏச்சு பேச்சுகள் இல்லை. கம்யூனிட்டி வாழ்க்கை என்ற கமிட்டிகளின் கண்காணிப்பில், அனைவரும் பங்கேற்கும் வகையில் நிர்வாகம். இருப்பினும் வடக்கே வேலை உள்ளது என்பதால் அங்கிருந்து கிளம்பி ஒரு தோட்டத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். இடையில் போலீஸால் பிடித்துப் போகப்பட்ட கேஸி, போதகரைக் காண்கிறான் ஜோட். அவர் ஒரு சிவப்புச் சிந்தனை அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவர்களின் ரகசியக் கூட்டத்தில், அங்கே வேலை செய்யும் கூலிகளின் வேலைநிறுத்தத்தை உடைக்கவே இவர்களுக்கு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிகிறான் ஜோட். இரவு கேஸி போலீஸால் கொல்லப்பட, எதிர்பாராமல் அவருக்காக இன்னொரு கொலை செய்கிறான் ஜோட். பதிலுக்கு ஜோட்டின் முகம் தாக்கப் படுகிறது. அடையாளம் கண்டு பிடித்தால் மீண்டும் சிறை என்ற காரணத்தால் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை. ஜோட்டைக் காப்பாற்ற, அவனை பாதுகாப்பாக ஒரு பாலத்தின் அருகில் இறக்கி விட்டு, மற்றவர்கள் ஒரு பருத்தி விளைநிலத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். ஓரிரவு மாபெரும் மழை… அல் ஜோட் அகி வைன்ரைட் என்ற பெண்ணைக் காதலித்தல், ஷரான் ரோஸிற்கு குழந்தை இறந்து பிறத்தல்… மழையிலிருந்து தப்பிக்க அம்மா ஜோட்டுடன், குழந்தைகளுடன் ஒரு மேட்டு நிலத்தில் உள்ள குடிசைக்குள் செல்கிறார்கள். அங்கே பசியால் தன் தந்தையை இழந்து கொண்டிருக்கும் சிறுவன்.. யாராவது கொஞ்சம் பால் கொடுங்கள் என்ற கதறல்…
அம்மாவின் மனம் அறிந்து ஷரான் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, தன் மார்பின் மூலம் அவனுக்கு உயிர் கொடுக்கிறாள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மனிதம் தழைக்கும் என்ற படிமத்துடன் நாவல் முடிகிறது.
கதை முழுவதும் அந்த அம்மா ஜோட் பாத்திரம் அருமையாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஜோட் தன் தாயின் முடிவிற்கு கட்டுப்படுத்தும், இக்கட்டான சூழ்நிலையில் எல்லாம் அவள் வீறு கொண்டு எழுதலும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டி இறக்கும் தருவாயில் ஒரு குழு விடையனுப்புப் பாடல்கள் பாட வருவதும், அவர்களை விரட்டுதலும், மற்றொரு இடத்தில் தங்கள் குலத்தை இகழ்வாகப் பேசும் காவலர்களை எதிர்த்துப் பேசும் நிகழ்வும், இறந்த பாட்டியின் பிணத்தை சமயோசிதமாக செக்போஸ்ட்டிலிருந்து சாதூர்யமாகப் பேசி மறைப்பதிலும், நாவலின் இறுதியில் முடிவுகள் எடுப்பதிலும் அந்த விவசாயக் குடும்பத்திற்கே உரிய தைரியத்துடன், உறுதியுடன் அந்தப் பாத்திரப் படைப்பு இருக்கிறது.
நாவல் முழுவதும் அக்காலத்திய புலம் பெயரும் அகதிகளின் மனக் குறைகள், மற்றவர்கள் இகழ்வாக நோக்குதல் போன்றவை நன்கு வெளிப்பட்டுள்ளது.
நாவல் சற்று பெரியதாகையால், விமர்சனம் நீண்டு விட்டது.
#Prasannan