1 review for கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
Add a review
You must be logged in to post a review.
₹80.00
விஞ்ஞானப்பூர்வமான பகுத்தறிவை வெகுமக்களிடையே பரப்புவது, உலகமும் உயிர்களும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை விவரிக்கும் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தையும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது, இந்துமதம் என்கிற ஒன்று இல்லை, அது பலதையும் கலந்து கட்டிய கலவை என்கிற உண்மையை உரத்துச் சொல்வது, அப்படி சொல்வதனாால் எவருடைய மனமாவது புண்படுமானால் உடனே மருந்து வாங்கிவர ஓடாமல் இருப்பது, காவி பயங்கரவாதத்திற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுப்பது… என்று நம்முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா?
Delivery: Items will be delivered within 2-7 days
சீ.ப்பி. செல்வம் –
#கடுகளவேனும்_செய்து_கொண்டிருக்கிறோமா…?
ஒரு புத்தகத்தினை வாசிப்பதன் மூலம் நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற அல்லது நம்மை நம்ப வைத்திருக்கின்ற மிக மோசமான புறச்சூழல்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஒருவிதமான கருத்தியலை நெஞ்சுக்கு நெருக்கமாக புரிந்துகொள்வதற்கு இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையிலே #தமிழ்நாடு_முற்போக்கு_எழுத்தாளர்_கலைஞர்கள்_சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் #ஆதவன்_தீட்சண்யா அவர்களுடைய 18 தலைப்புகளை உள்ளடக்கி இருக்கிற “#கடவுளுக்கும்_முன்பிருந்தே_உலகம்_இருக்கிறது” என்ற #கட்டுரை வடிவிலான புத்தகம் நாம் ஒவ்வொருவரும் வாசிக்கக்கூடிய அவசியமான ஒரு நூலாக கருத வேண்டியிருக்கிறது.
பழங்காலந்தொட்டே இந்த உலகம் எவ்வாறு இயங்கிக்கொண்டிருந்தது? அதன் பின்னாளில் நம்பிக்கையும் அதனையொட்டி கலந்துவிடப்பட்ட சில மார்க்கங்களும் மனிதர்களை மதம், சாதி, நிறம், மொழி, எல்லை என எவ்வாறு பிரித்துப் போட்டது என்பதையும் இக்கட்டுரைகளில் பல இடங்களில் கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறார் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள். ஒரு செல் உயிரியான அமீபாவைக் கூட உருவாக்க முடியாத மனிதர்கள் சர்வ வல்லமை பொருந்திய கோடிக்கணக்கான கடவுள்களை எவ்வாறு உருவாக்கி இருப்பார்கள் என்பதனை இங்கே ஒரு கட்டுரையின் இறுதியில் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார். இவற்றோடு இங்கே இருக்கக்கூடிய பல்வேறு விதமான மூட பழக்க வழக்கங்களையும் அறிவுக்கு ஒவ்வாத செயல்பாடுகளையும் பார்த்து “இனிமேல் நூறு பெரியார் வந்தால்தான் எல்லாம் சரியாகும்” என்று நாமும் நம் முன்னால் நிற்கிறவர்களும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் “நான் தெரியாமல்தான் கேட்கிறேன் பகுத்தறிவு பரம்பல், சாதி ஒழிப்பு போன்ற வேலைகளை எல்லாம் மறுபடியும் பெரியார் தலையிலேயே கட்டி விட்டு, நீங்களும் நானும் அப்படி என்ன அதிஉன்னத புல்புடுங்க போகிறோம்? என்கிற கேள்வி உண்மையில் நியாயமானதாகவே உரைக்கிறது.
“அதிர வருவதோர் நோய்” என்ற தலைப்பிலான கட்டுரையில் அரசாங்கப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது என்று இருக்கும் மக்களின் அவநம்பிக்கையையும், வேலைவாய்ப்பு அருகி வரும் இக்காலத்தில் தன் பிள்ளையை போட்டிக்கு தகுதிப்படுத்த வேண்டும் என்ற பெற்றோரின் பதைப்பையும் மூலதனமாகக் கொண்டு செயல்படுகின்ற சில கட்டண பள்ளிகள் நடத்தும் மாணவர்கள் மீதான உளவியல் சிக்கல்களை இங்கே எடுத்து வைத்திருக்கிறார். தொடர்ந்து குறிப்பிடும்போது எதிர்பார்த்தபடியே இறுதியாக அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் தான் மிகக் கூடுதலான மதிப்பெண்கள் பெறுகின்றனர். இத்தகைய மதிப்பெண் உயர்வானது ஊளைச்சதை போன்றது தானே ஒழிய உண்மையான பலமல்ல என்றும், படிப்புக் காலம் முழுவதும் சக மாணவர்கள் உள்ளிட்ட புறவுலகுடனும் தனது அகவுலகுடனும் முற்றாக துண்டிக்கப்பட்டு பாடப்புத்தகங்களோடு மட்டுமே உழல அனுமதிக்கப்பட்ட அந்த மாணவர்களிடம் இருந்து இந்த சமூகம் பெறப்போவது எதை? இவர்கள் தான் எதிர்கால சமூகம் என்றால் அப்படி ஒன்று உருவாவதை அனுமதிக்கும் எல்லோருமே குற்றத்தின் பங்குதாரர்கள்தானே? என்று நம் மனசாட்சியை இறுக்கி பிடித்து ஒரு கேள்வியை எழுப்புகிறார் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள்.
“சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையில், சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி இருக்கிறது என்பதனை முதலில் ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது எப்படி இயங்குகிறது? எவ்வாறாக சமூகத்தையும் தனிமனிதர்களின் கட்டுப்படுத்தி இயக்குகிறது? என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றதன் அடிப்படையில், சாதியைப் பற்றிய புரிதலையும், அதனை புறந்தள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதுமான அவசியத்தினை இந்த கட்டுரை நமக்கு தெளிவுபடுத்துகிறது நண்பர்களே..
இந்த புத்தகத்தில் குறிப்பாக நாம் படிக்கவேண்டிய தலைப்புகளாக “கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது”, “என்னதான் செய்யப்போகிறோம் அம்பேத்கரை”, “தலித்துகளும் முஸ்லிம்களும்”, “சாதிமறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள்” போன்ற இன்னும் பிற தலைப்புகள் மீண்டும் மீண்டும் நம்மை படிக்கத் தூண்டுகின்றன. படித்த பின்பு நம்மை நிறைய சிந்திக்க வைக்கின்றன. அந்த சிந்தனைகள் குறைந்தபட்சமாவது நம் செயல்வழி நின்று பார்க்கின்ற நிலை ஏற்படும் என்ற அடிப்படையில்தான், நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன; கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா? என்ற வினாவோடு இறுதிபடுத்திருக்கிறார் தோழர். மலையளவு செய்யமுடியவில்லை என்றால் கூட கடுகளவாவது நம்முடைய சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில் சமுதாயத்தில் புரையோடி கொண்டிருக்கின்ற பல்வேறுவிதமான குறைபாடுகளை களைவதற்கான ஒரு சிறிய கருவியாக கூட நமது சிந்தனை மாற்றம் அமைய வேண்டும் என்பதே இந்த புத்தகம் நமக்கு சொல்கின்ற செய்தியாக இருக்கிறது. அவசியம் வாசியுங்கள் நண்பர்களே.
நூலின் பெயர்: #கடவுளுக்கும்_முன்பிருந்தே_உலகம்_இருக்கிறது
ஆசிரியர்: #ஆதவன்_தீட்சண்யா
வெளியீடு: #நூல்_வனம்