ஆதலினால்
சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்லை செல்பேசிகளில் உரையாடிய படியும், தினசரி பேப்பர்களை வாசித்தபடியும் மக்கள் இயல்பாக பயணம் செய்கிறார்கள். குழுந்தையின் கிராமத்து தாய் தண்ணீரை சுமந்து வர மறந்து போனவளாக விழிக்கிறாள். குரல் சோர்ந்த குழுந்தை அழுகையை நிறுத்தி விம்மிக் கொண்டு மட்டும் இருந்தது. குடி தண்ணீரை விலைக்கு வாங்கி பாதுகாப்பாக அடுத்தவர் அருந்தி விடாமல் கொண்டு செல்லும் இந்த அரிய மனிதர்களோடுதான் சேர்ந்து வசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் குற்றவுணர்வுதான் என்னை எழுதச் செய்கிறது. என்னை சுற்றிய உலகம் ஆயிரக்கணக்கான மனிதர்களை அவர்களின் அடையாளத்தை அழித்து கழிப்பறை புழுக்கள் போல அலைந்து திரிய விட்டிருக்கிறது. பிழைப்பிற்காக வந்தேறியவர்கள் தங்கள் அவமானங்களையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு கவிழ்ந்ந்த தலையோடு ஏதாவது செய்து வாழ்ந்துவிட முடியும் என்று முட்டிமோதுகிறார்கள். நம்மைச் சுற்றிய மனிதர்களில் நம் கவனம் செல்லாத சிலரின் மீதான என் அக்கறைகளே இந்தக் கட்டுரைகள்.
Reviews
There are no reviews yet.