சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்
Publisher:
சிக்ஸ்த் சென்ஸ் Author:
முகில்
₹177.00 Original price was: ₹177.00.₹170.00Current price is: ₹170.00.
ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் ‘தாய் உள்ளம்’ படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!
சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவார்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.
மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.
Delivery: Items will be delivered within 2-7 days
Poonkodi Balamurugan –
புத்தகம்: சந்திரபாபு.
கண்ணீரும் புன்னகையும்
ஆசிரியர் : முகில்.
என் அப்பாவுக்கு மிகப் பிடித்த நடிகர் சந்திரபாபு. அவருடைய பாடல்களைத்தான் அவர் அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பார்.அதனால் எனக்கும் சந்திரபாபு மிகவும்பிடிக்கும்.அவரைப்பற்றிய புத்தகம் கிண்டிலில் வெளியாகிறது என்றதும் அதைப் படிக்க மனம் ஆர்வமாய் இருந்தது. அவர் நல்ல கலைஞர் , நகைச்சுவையாளர் என்பதுதான் தெரியும். எம்.ஜீ.ஆரை வைத்து படம் தயாரித்து அந்த படம் கைவிடப்பட்டதால் கடன் சுமை அதிகரித்து அதனால் மொடாக்குடிகாரானாக மாறிவிட்டார் என்ற தகவல் மட்டும் தெரியும். இந்த நூலின் மூலம் அவரைப்பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். சந்திரபாபுவை பற்றிய முதல் நூல் இதுதான். அந்த வகையில் ஆசிரியர் முகிலுக்கு மிக்க நன்றிகள் .
வெள்ளையனே வெளியேறு, அந்நிய துணிகளுக்கு தீ வைப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களுக்கு ராஜாஜி அவர்களுக்கு தொண்டர் படைத் தலைவனாக இருந்தவர்தான் சந்திரபாபுவின் தந்தை. அவர் தாய் ரோசலினும் விடுதலை போராட்டங்களில்பங்கு கொண்டவர் தாம். அந்த தம்பதியினரின் 13 குழந்தைகளில் 7 வது குழந்தை பனிமயதாசன். பிறந்த சில நாட்களில் வந்த விஷக்காய்ச்சலால் அவதியுற்ற குழந்தைக்காக தூத்துகுடியிலுள்ள பனிமயமாதா ஆலயத்தில் வேண்டி , குழந்தை பிழைத்தது. அந்த குழந்தையை செல்லமாக பாபு என்ற அழைத்தனர்.பின்னாளில் தன் குலமான சந்திர குலத்தைச் சேர்த்து சந்திரபாபு என்ற பெயரை மாற்றிக்கொண்டார்.
நிறைய போராட்டங்களில் சிறை சென்ற இவர்கள் குடும்பத்தை இலங்கைக்கு பிரிட்டிஷார்நாடு கடத்தினா். அங்குதான் சந்திரபாபு படிப்பில் ஓரளவுகவனம் செலுத்தினார். பின்பு 1942 ல் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். வரும் போதே தன் சிறுவயது கனவான சினிமாவில் சேர்வதை லட்சியமாக கொண்டு காலடி வைத்திருக்கிறார்.
திறமையும் ஆர்வமும்இருந்தால்கூட சினிமாவில் அவரால் எளிதில் நுழைய முடியவில்லை. விரக்தியில் ஒருமுறை மயில்துத்தம் குடித்து தற்கொலை செய்ய பார்த்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டார்.அதைக் கேள்விப்பட்ட இயக்குநர் வாசன் தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அப்படிசிறிது சிறிதாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கினார். சினிமா உலகம் அவரை ஏற்றுக் கொண்டது..படிப்படியாக உயரத் தொடங்கி ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசனை விட சம்பளம் வாங்கும் அளவுக்கு புகழ் பெற்றார்.
வாழ்க்கை அப்படியே ஏணியில் ஏற்றிக் கொண்டு போய் விடுமா என்ன ? திருமண வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவரை குடிப்பழக்கத்தை அதிகப்படுத்தியது. இருந்தாலும்நடிப்பில் தன்னிகரற்று திகழ்ந்துகொண்டு தான்இருந்தார். சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாய் அவரதுகனவு இல்லத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது மாடி வீட்டு ஏழை என்று எம்ஜீ.ஆரை வைத்து ஒரு படத்தை இயக்கத்தொடங்கினார். எம்ஜீ.ஆரின் . கால்ஷீட் பிரச்சனையில் படம் பாதியில் நின்றது. கிட்டத்தட்ட நாலரை லட்சம் கடன் சுமையால் தன் கனவு இல்லத்தை விற்றுவிட்டார் . அந்த நிகழ்வுக்கு பிறகு குடிப்பழக்கம்மிகவும் அதிகரித்தது.
மிகவும் நேர்த்தியான உடைகள் அணிவாராம் எப்போதும் . மிடுக்கான அவரது பேச்சு எல்லாரையும்கட்டிவிடும். எதற்கும் பயப்படாமல் தன் மனதில் உள்ளவற்றை தைரியமாய் சொல்ல கூடியவர். ஒரு முறை ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்க சிவாஜி தலைமையில் கலைக்குழு டெல்லி சென்றது. கூடியிருந்த மக்கள் ஹிந்தி பாடல்களை பாடச் செல்ல கூச்சலிட்டப்போது தைரியமாக மேடை ஏறி பேசி நிலமையை சமாளித்தாராம். அப்போது குடியரசு தலைவர் கலைஞர்களுக்கு அளித்த விருந்தில் யாராவது ஒருவரைப் பாடச் சொல்லி இருக்கிறார். சந்திரபாபு பிறக்கும் போது அழுகின்றாய் என்று பாடலைப் பாடியதை ராதாகிருஷ்ணன் ரசித்து கேட்டிருந்திருக்கிறார். உடனே ஓடிச்சென்று அவர் மடியில் அமர்ந்து நீ ரசிகன் டா என்று அவரின் மேவாயை பிடித்து கொஞ்சியிருக்கிறார். மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே குழந்தையைப் போல வெளிப்படுத்தக் கூடியவர். படப்பிடிப்புகளில் ஒவ்வொரு காட்சிக்கும் அவரது மெனக்கெடல்களைப்படிக்கும் போது நாம் பிரமித்து விடுவோம். அவரது கடின காலங்களில் எம்.எஸ்.வி , தேங்காய் சீனிவாசன் போன்றோர்தான் அவருக்கு அதிகம் உதவியிருக்கிறார்கள்.
கடைசியில் மஞ்சக்காமலையில் அவதியுற்று இறக்கும் போது வயது 42..குங்குமப்பூவே கொஞ்சிப்புறாவே , பம்பரக்கண்ணாலே , நான் ஒரு முட்டாளுங்க , புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றிக் கண்பது இல்லை பாடல்கள் எல்லாம் வெகு பிரபலம். இன்றைய தலைமுறையினர் கூட அறிந்த பாடல்கள். இந்த நூலில்ஒவ்வொரு பாடல்கள்உருவான விதம் , சந்திரபாபுவின் ஏற்ற இறக்கங்கள் , வலிகள் , ஏமாற்றங்கள் , துரோகங்கள் எல்லாவற்றையும் அறியலாம். இந்த புத்தகம் படித்த இரண்டு நாட்களாக சந்திரபாபுவின் நகைச்சுவை , பாடல்கள் அதிகம் என்பொழுதுகளை ஆக்ரமித்து இருக்கிறது. அவரது நகைச்சுவை புன்னகையையும், அவரது வாழ்வு நமக்கு கண்ணீரையும் கண்டிப்பாய் வரவழைத்து விடும்.
Book My Book –
உங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி.!
Kodee –
கண்ணீரும் புன்னகையும் (முகில்)
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற அடிப்படையில் இந்த உலகம் பல மாறுதல்களை கண்டுள்ளது. ஆனால், அந்த மாறுதலுடனே போட்டி போடும் அளவுக்கு மனிதர்களின் சில எண்ணங்கள் மாறாமல் அன்றும்..இன்றும்.. என்றும்.. பாடம் செய்த மம்மி போல அப்படியே இருக்கின்றது. அவற்றில் முக்கியமானது.. ஒரு மனிதன் உண்மையானவனாக, எதையும் வெளிப்படையாக யார் என்னவென்று பாராமல் பேசுபவனாக, எந்தவொரு கசப்பான அனுபவங்களுக்கும் தன் புன்னகையை மட்டுமே பதிலாக தருபவனாக இருந்தால்.. “திமிர்ப்பிடித்தவன், கெட்டவன்” என்று முத்திரை குத்தி அவனிடம் இருக்கும் சிறு கெட்ட பழக்கத்தைகூட பெரிதுபடுத்தி, ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைஞனின் உண்மை சரித்திரம்தான் “கண்ணீரும் புன்னகையும்”.
இந்த புத்தகத்தை பல தருணங்களில் வாங்க நினைத்து, ஏதோ ஒரு காரணத்தினால் வாங்கவே முடியாமல் தள்ளிப்போனது. அதனால், கிண்டிலில் இலவசமாக வந்த உடனே பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர் முகில் அவர்களின் முதல் புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம் சேர்ந்துகொண்டது. முகில் அவர்கள் எந்த ஒரு சம்பவத்தை விவரிக்கும் போதும் வாசிபவர்களுக்கு ஒரு சிறு புன்னகையேனும் அரும்பும். ஆனால், இந்த புத்தகம் ஒரு மாபெரும் நகைச்சுவை மன்னனின் வரலாறு என்றபோதும் நமக்கு கண்ணீர் மட்டுமே சுரக்கிறது.
ஜே.பி.சந்திரபாபு.. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. கிட்டத்தட்ட, இன்றைய கமல்ஹாசன் போல சினிமா உலகின் பல்கலைக்கழகம் போல வாழ்ந்தவர். ஆனால், அவரது கல்லம்கபடம் இல்லாத வெள்ளேந்தி குணத்தால் வறுமையின் அடி ஆழத்திற்கே சென்று இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.
மனதில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே, தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. ஒரு நல்லவனை பற்றிய கெட்ட புரளிகளையும், ஒரு சுயநலகாரனின் மேல் வரும் போலியான நல்ல பிம்பங்களையும் நம்பும் மக்கள் உள்ளவரை.. இங்கே மனிதமும், மனிதம் உள்ள கலைஞனும் மெல்ல சாவார்கள் என்பது சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லி தரும் ஞானம்.
ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு போல ரொம்ப நல்லவனாக இருந்தால், ஏறிமிதித்து விட்டு போய் விடுவார்கள் கட்டிய மனைவி உள்பட.
ஜே.பி.சந்திரபாபுவின் வார்த்தைகளிலிருந்து :
என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
✍️ கோடி