இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
மருதன்
₹235.00
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம். ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழிந்து போயிருக்கிறது.மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால். நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. மொத்தம் இரண்டே ஜாதி. உயிர் வாழ விரும்புபவர்கள். உயிரை அழிக்க விரும்புபவர்கள். எதற்கும் கணக்குத் தெரியப்போவதில்லை. இறந்தவர்கள். தொலைந்தவர்கள். குழந்தைகளைத் தொலைத்த தாய்கள். சகோதரர்களைத் தொலைத்த சகோதரிகள். பிரிந்த நண்பர்கள். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த நிமிடம் வரை துடித்துக்கொண்டிருப்பவர்கள். துயர் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள். மனச்சிதைவுக்கு ஆளாகி இறந்துபோனவர்கள். இறந்து பிறந்த குழந்தைகள். பிறந்து இறந்த சிசுக்கள். இது அரசியல் வரலாறு மட்டுமல்ல. மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
இந்தியப் பிரிவினை
மருதன்
எழுத்தாளர் மருதனின் நூல்களை வாசிக்காதவர்கள் இருப்பது கடினம். ஏனெனில் பிரபலங்களின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழில் அதிகம் எழுதியது இவர்தான். அதே போல் பல வரலாற்று சம்பவங்களையும் தொகுத்துள்ளார். அந்த வகையில் இந்திய – பாகிஸ்தான் பிரிவினை குறித்த விவரங்களை இந்நூலில் தனது பாணியில் விவரித்துள்ளார்.
எடுத்ததும் பஞ்சாப் இரயில் நிலைய அதிகாரி பார்வையில் பிரிவினையின் பாதிப்பை சொல்லி விட்டு, அப்படியே ஒரு பக்கம் பிரிவினை நிகழ்வுகளையும் அவ்வபோது இதன் ஆரம்ப நிகழ்வுகளையும் கலந்து நான் லீனியர் பாணியில் கொடுத்துள்ளார்.
இந்த புத்தகத்தில் நான் புதிதாக தெரிந்துக் கொண்டது முகமது அலி ஜின்னாவினை பற்றி. பாடங்களில் அவரால்தான் பாகிஸ்தான் உருவானது என்றும் இந்தியாவின் தேசத்தந்தையாக மகாத்மா கொண்டாடப் படுவதை போல, பாகிஸ்தானில் கொண்டாட படுபவர் என்றும் படித்ததோடு சரி. தற்போது விடுதலை போராட்டங்கள் குறித்து அதிகம் வாசிக்கையில் அவரது வக்கீல் தொழிலின் திறமை தெரிய வந்தது. ஆனால் இப்புத்தகத்தில்தான் காந்தியை மிஞ்சிய பிடிவாதக்காரர் என்பது தெரிந்தது.
அடுத்து சுதந்திரத்திற்கு பிறகு, மூன்று வாரங்கள் கடந்த பின், நாட்டில் கலவரங்களை அடக்க முடியாமல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடமே நேருவும் படேலும் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்ததாக சொல்லப் படுவதும் புதுத் தகவலே.
ஆனால் என்னதான் பிரிவினையை மையமாக கொண்டு எழுதிய நூலாக இருந்தாலும் அதன் பாதிப்பை முழுமையாக சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் “இந்தியா-காந்திக்கு பிறகு” நூலில் துல்லியமாக படித்த பிறகு இதில் படிப்பது பெரிதாய் சுவாரசியம் தரவில்லை.
ஆனால் அதில் இல்லாத நிறைய தகவல்கள் பின்னனிகளும் இப்புத்தகத்தில் உள்ளன. நாம யாருக்கும் பகையில்லாம போயிருவோம் என்பது போல, காங்கிரஸ் பக்கமும் நிற்காமல், ஆர்எஸ்எஸ் பக்கமும் நிற்காமல் பொதுவாக அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிட்டுவிட்டு நகர்கிறார். இருந்தாலும் சவார்க்கருக்கு வீர சாவர்க்கர் என்று பட்டமளித்ததை நகைமுரண் என்று ஒப்புக் கொண்டு விடுகிறார்.
தேசப் பிரிவினை பற்றி தமிழில் இதை விட ஆழமான விளக்கமாக புத்தகம் வேறு இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல்.