திருமணத்திற்கு முன்பே அதீத காதலால், களவியில் ஈடுபட்டு திருமணம் ஆகவில்லையென்று முதலில் வருந்தி பிறகு அதை கடந்து போகும் பிலோமி, தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் வாத்தியாரை சந்திக்க செல்லும் மரியம்மை, மகன் மேல் அவ்வளவு அக்கறையும் அன்பும் இருந்தும் அவன் கேட்கும் பணத்தை கொடுப்பதற்காக படகை விற்க முடியாமல் இருக்கும் குரூஸ் மைக்கேல், திருமணத்திற்கு பிறகும் செபஸ்தியின் மேல் ஒருவித அன்பில் இருக்கும் ரஞ்சி… இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்குள்ளேயே அன்பு, சோகம், கோபம் என எல்லா உணர்வுகளோடும் திரிவது நாவலின் மிகப்பெரிய பலம்.
மனித வாழ்வில் அன்பும் அக்கறையும் ஊற்றெடுக்கையில், எந்தவொரு சுயநலமும் பொறாமையும் அன்பின் முன் பொசுங்கியே தீரும். அந்த வகையில் இந்த நாவலின் ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் தனக்கான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், அன்பு என்ற அது எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி அனைவரையும் ஒன்றிணைப்பதாய் முடித்திருக்கும் நாவலில் இயல்புநிலை மீறாமல் இருப்பது, எழுத்தாளரின் மிகப்பெரிய திறமை.
– ஜான் பிரபு
vjsivasankar26 –
#கடல்புரத்தில்
#நற்றிணை_பதிப்பகம்
#வண்ணநிலவன்
கடலோரம்,
ஒரு குடும்பம்,
குடிப்பழக்கம் உள்ள தகப்பன்., அவ்வப்போது குடிக்கும் தாய், அதிகம் படித்து ஒரு உத்யோகத்தில் இருப்பதால் இருக்கும் வீட்டையும், எல்லோரையும் அவன் வீட்டுக்கு வரச்சொல்லும் அன்பான மகன், பின், அக்கை ஒருத்தி,
அப்புறம், பிலோமி என்னும் கடைசி மகள், இவள் தான், இவள் வார்த்தைகளில் நாம் இவளோடு கடலை பலமுறை உணர முடியும்.
பிலோமி, வாழ்வின் எல்லா தருணங்களிலும் கடலின் இரைச்சல் மூலம் ஒன்றை பெறுகிறாள்.
சிலசமயம், வெறுமையையும் அதிகமாய் உணர்கிறாள்.
இவ்வளவு தான் கதை,
இன்னும் சொல்ல வேண்டுமானால்,
வண்ணநிலவன், இவர் தன்னுடைய எழுத்துக்களால் ஒரு மீனவக் குடும்பத்தின் வழியே அவ்வளவு அழகாய், அற்புதமாய் ஒவ்வொன்றையும் அழகியல் குறையாமல் எழுதி முன்வைத்திருக்கிறார்.
நாவலில் எனக்கு பிடித்த நிறை அழகான தருணங்களில் சில,
‘ சில ஓலைகள் காற்றில் கிளம்பிக் கொண்டுவிட்டன. அந்த ஓட்டைகளில் ஒன்றினூடே சூரிய வெளிச்சம் அம்மையுடைய சிவப்பான கால்களில் வட்டாமாக விழுந்திருந்தது. அந்த வெளிச்சத்தில் கால் முடிகளெல்லாம் தெரிந்தது. ‘
‘ எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இரைச்சலில் தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்கு சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில் தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. ‘
என இந்நாவல் முழுதும் அழகியல் அம்சங்களோடு கதை கடலருகில் பயணிக்கிறது.
லாஞ்சியினால் வல்லங்களுக்கு வரும் இடர்பாடுகள், இதனால் அமைதி குலைந்து திரியும் கதாபாத்திரங்கள் என எழுதியிருப்பதை படிக்கையில் நம்மோடும் அது ஒட்டிக்கொள்கிறது.
பிலோமியும், இவள் அம்மாவும், இவள் தோழி ரஞ்சியும் அந்த பழைய நினைவுகளை, காதலை மறவாது ஒரு டிரங்கு பெட்டி போல் பத்திரமாய் வைப்பதில் ஒன்றிணைகிறார்கள்.
இது ஏற்படுத்திய தாக்கம், ” பேன்பின் வழி உயர்நிலை ” என்பது போல உயர்வானது.
நாவல் முடியும் தருவாயில் இருக்கும் போது,
பிலோமியை பார்க்க சாமிதாஸ் தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்,
பிலோமியோடு நாமும்
” வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானது தான் என்று நம்புவதற்குத் தயராகிவிட்டாள் ”
நாமும், இப்படி எல்லா கனங்களிலும் நம்புவோம்.
வாங்கி படியுங்கள், ஒவ்வொரு வார்த்தைகளிலும் நீங்கள் ஸ்பரிசிக்கப் படுவீர்கள், நெஞ்சில் ஈரம் ஏறி போகும்.
#சிவசங்கரன்
ந.ஜெகதீஷ் –
நாவல் : கடல்புரத்தில்
(வண்ணநிலவன்)
1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடலோர வாழ் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது இந்த நாவல்.
வாசிப்பின் முதல் பக்கத்திலேயே உள்ளிழுத்துக் கொள்கிறது வண்ணநிலவன் அவர்களின் எழுத்து. காதல் வயப்பட்ட, மனோதிடம் கொண்ட, வாழ்க்கையை உணரத் தொடங்கிய மீனவ பெண்மணியை நாயகியாக படைத்திருக்கிறார். அவளைச் சுற்றித்தான் கதை நடக்கிறது.
நெய்தல் நில மக்களின் காதல், வாழ்க்கை முறை, சமூக நிலை, வழிபாட்டு முறை மற்றும் தொழிற் போட்டிகளை சிறப்பாக சொல்லியிருக்கிறார்.எந்திர படகின் வரவு நாட்டுப் படகுகளை பயன்படுத்தும் மக்களின் வாழ்க்கையை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை எவ்வாறு சொந்த மண்ணிலிருந்து குடிபெயர செய்தது என்பது வரை உணர்வு பூர்வமாக உணரமுடிகிறது.
‘கடல்புரத்தில்’
அலைகள்
இன்னும் ஓயவில்லை…
ப.தாணப்பன் –
#கடல்புரத்தில்…
#வண்ணநிலவன்….
நானெல்லாம் பிறக்கிறதற்கு முன்பு எழுதின ஒரு புதினம் இன்னமும் அதே உயிர்ப்புடன் இருப்பது என்பது எத்தனை ஆச்சரியம். அதுவும் வாசிக்கத்துவங்கிய முதல் இரண்டு பக்கங்களிலே நம்மை கூடவே பயணிக்க வைப்பதென்பதெல்லாம்….
நிச்சயம் #வண்ணநிலவனால் மட்டுமே இயலும். அது சாத்தியப்பட்டிருக்கிறது.
பிலோமிக்குட்டி, சாமிதாஸ், செபஸ்தி, குருஸ் மிக்கேல்,மரியன்னை அமலோற்பவம் மற்றும் ரஞ்சி, அந்த பாட்டையா, அருகருகே வசிக்கும் மாந்தர்கள்..என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேர்த்தியாகச் செதுக்கி உலவவிட்டிருக்கிறார். அதுவும் அந்த வாத்தியார் கதாபாத்திரம்…
கிறித்துவர்கள் வாழும் பகுதியில் வசித்திருக்கிறேன்..அவர்களது வாழ்வு முறை தெரிந்திருக்கிறது என்கிறார் வணணநிலவன்.
எனக்கொரு ஆச்சரியம்… அப்படியே பரதவர் சொல்லாடல் கூட பயணிக்கும் சாயுபுவின் சொல்லாடல் என அனைத்தும் அவர்களது பேச்சுமொழியிலேயே…அதிசயித்து நிற்கிறேன்… நீண்ட நாட்கள் பழகினால் தவிர அப்படி இயல்பாய், நேர்த்தியாய் கொண்டு வர இயலாது.
கிட்டத்தட்ட 15 நாட்களில் எழுதிமுடிக்கப்பட்ட புதினம்.கல்யாண்ஜிக்கும் கலாப்ரியாவிற்கும் அனுப்பி கருத்து கேட்டிருக்கிறார்.. இப்போதுள்ளது மாதிரி மின்னஞ்சல் இல்லா காலம். எல்லாமே கடிதப்போக்குவரத்து. கோவில்பட்டியில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. கிரா அவர்களிடம் வாசிக்கக்கொடுத்ததது என நிறைவாக நான்கு பக்கங்களில் அனுபவ ஊர்வலம்..
மணப்பாட்டில் வசிக்கும் நெய்தல் நிலமக்களின் வாழ்வாதாரம் படகு. அதிலும் லாஞ்ச், வல்லம் என… கடலன்னை, மோதல், கூடல். கடலை தாயாக பாவிக்கும் மனப்பாங்கு, ரெளத்திரம், அன்பு, நேசம் என..
வட்டிக்குப் பணம்கொடுத்தாலும் அதிலும் ஒரு நேர்மை, ண்டியல் காலங்களில் விருந்தோம்பல், சுகதுக்கங்களில் பங்களிப்பு சாயுபுக்கும் கிறித்துவுக்குமான நட்பு என….வாசிப்பையும் தாண்டி சில புதினங்கள் நம்மை ஆளும்.. இது அப்படி என்னை ஆள்கிறது.. வாசிப்பிற்கு இடைஞ்சலாக இருந்த வீட்டு வேலைகளை முணுமுணுப்புடன் செய்ய வைத்தது..
ஒரு ரசிகனாய் #வண்ணநிலவனுக்கு வாழ்த்துகளும் நன்றியும்…
#நற்றிணைப்பதிப்பகம்
விலை: ரூ.90.
Poonkodi Balamurugan –
புத்தகம் : கடல்புரத்தில்
ஆசிரியர் : வண்ணநிலவன்.
நம் முன்னோர்கள் திரைக்கடல் ஓடி திரவியம் தேடினர். ஆனால் இன்று அந்த ஆர்ப்பரிக்கும் அந்த அலைகடலில் தினமும் அலைவது மீனவர்கள் வீட்டு அடுப்பு எரியத்தான். அந்த கடல்தான் அவர்ளின் அன்னை. ” அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு, வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை அநாதி காலந்தொட்டு கடலுடனே பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கடல் அம்மையை அவர்களுடைய சேசுவுக்கும் மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். அவள் பதிலுக்குத் தன்னுடைய பெரிய மடியிலிருந்து மீன்களை வாரி வாரி அவர்களுக்கு வழங்குகிறாள்” .
மணப்பாடு என்ற அழகிய காயல் கிராமத்தில் வாழும் முரட்டு மனிதன்
குடும்பஸ்தன் குரூஸ். அவருடைய மனைவி மரியம்மை. மகள்கள் அமலோற்பலம், பிலோமி. மகன் செபஸ்தி. பிலோமியைத் தவிர ஏனைய இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வேறு வேறு ஊருக்குச் சென்றுவிட்டவர்கள். பண்டிகைகள் மற்றும் இதர விஷேசங்களுக்குப் பிறந்த வீட்டிற்கு வந்து செல்வர். பெற்றவர்களுடன் பிலோமி வசிக்கிறாள். அவளுக்கு அந்த ஊரில் வசிக்கும் சாமிதாஸ் என்ற இளைஞனிடம் ஆழமான காதல்.இவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஐசக்கிற்கு தன் மனைவியைத் துரத்திவிட்டு பிலோமியை இரண்டாம் மணமுடிக்க ஆசை.
பிலோமியின்வாயிலாக தான் ஆசிரியர் இந்த கதையைச்சொல்கிறார். பிலோமியின் அண்ணன் படித்து பக்கத்து டவுனில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அவனுக்கு இன்னும் பணம் சம்பாதிக்க ஆசை. அதனால் கிராமத்திலுள்ள தனது வீட்டையும் , வல்லத்தையும் விற்று பணத்தை போட்டு நண்பருடன் தொழில் ஆரம்பிக்க ஆசைப்படுகிறான். அதற்காக சொத்துக்களை விற்றுத்தர சொல்லி தன் தந்தையிடம் கேட்பதாக கதை ஆரம்பிக்கிறது. தன் முன்னோர்களின் வழியாக வந்த அந்த வல்லத்தை உயிராக நேசிக்கிறார் குரூஸ். மறுப்பு சொல்லி விடுகிறார்.தாய் மரியம்மை மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பிலோமிக்கோ அந்த கிராமத்தை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ஏனென்றால் அவள் உயிருக்கு நிகரான சாமிதாஸ் அங்குதானேஇருக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்குள் உடல்ரீதியான உறவு முடிந்து விடுகிறது. சாமிதாஸின் தந்தை இயந்திரபடகு வைத்து மீன் பிடிப்பவர். சாதாரண படகில் மீன்பிடிக்கும் குடும்பத்தில் பெண் எடுப்பாரா ? அந்தஸ்து உள்ள மற்றொரு இடத்தில் மகனுக்கு மணம் முடிக்க பேசுகிறார். மனம் உடைந்த நிலையில் இருக்கும் பிலோமியை சிறிது நாளில் தன் தாய் மரியம்மையை இழக்கிறாள். காதல் தோல்வி , அன்னையின் பிரிவுத் துயரம் இரண்டிலிருந்தும் அவளை அவளது தோழி ரஞ்சி தேற்றுகிறாள். ரஞ்சி பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்து தோற்றவள்.
அவர்கள் நட்பு எப்படிப்பட்டது என்பதை ” ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன? ரஞ்சியுடைய மடியில் உரிமையுடன் பிலோமி தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். அவர்களுடைய பேச்சில் சோகம் இருந்தது; பிரிவு இருந்தது; சந்தோஷம் இருந்தது; நீண்ட நாட்களுக்குப் பின்னால் சந்தித்துக் கொள்கிறபோது இருக்கிற தவிப்பும் இருந்தது.” என்ற ஆசிரியரின் வார்த்தைகளில் அறியலாம்.
மனம் தேறிய பிலோமியின் வாழ்வு எப்படி நகர்கிறது? அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ; அவளால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதுதான் கதை.
இந்த கதையின் நாயகி பிலோமி என்றாலும் சிறிது நேரம் வரும் ரஞ்சியும் , வாத்தியாரும் கண்டிப்பாக மனதில் நிற்பார்கள். இருவரும் தங்களின் செயல்கள் மூலம் பேச்சின் மூலம் அன்பை அனைவருக்குள்ளும் விதைப்பவர்கள்.
சாதராண படகுகளில் மீன்பிடிப்பவர்கள் இயந்திரபடகுகள் வந்ததன் மூலம் பாதிக்கப்பட்டது , மீனவக்குடும்பங்களின் வாழ்வியல் , அவர்கள் வாழ்வின் துயரங்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள இந்நூல் கண்டிப்பாக உதவும் .
Kathir Rath –
#கடல்புரத்தில்
வண்ணநிலவன்
நாவல் கலை புத்தகத்தில் சி.மோகன் குறிப்பிட்டுள்ள புத்தகம் கிண்டில் அன்லிமிட்டட் பிளானில் கிடைக்கிறதா என்று தேடியதில் இப்புதினம் கிடைத்தது. 150 பக்கங்களுக்குள்ளான அழகியலான இந்நூல் கட்டாயம் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருக்கும்.
நெய்தல் நிலத்தில் உள்ள ஒரு கிராமம், அங்கு காலங்காலமாக வல்லத்தில் சென்று மீன் பிடிக்கும் எளிய மக்கள், அவர்களின் வாழ்க்கை, போட்டிக்கு லாஞ்ச் வருவதால் ஏற்படும் மாறுதல்கள், சொல்லப்போனால் பாதிப்புகள், அத்தோட மனிதர்களின் குறிப்பாக பெண்களின் உணர்வுகள் பற்றி பேசுகிறது.
பரம்பரை பரம்பரையாக வல்லத்தில் மீன் பிடிக்கும் குருஸ், அவரது படித்த மகன் வீட்டையும் படகையும் விற்று விட்டு தான் வாத்தியார் வேலை பார்க்கும் ஊருக்கே வந்துவிடுமாறு கூப்பிடுவதில் கதை துவங்குகிறது. குருஸின் மகள் பிலோமி வழியாகத்தான் மொத்த கதையும் சொல்லப்படுகிறது.
பிலோமிக்கு அந்த ஊரிலேயே இருந்து விட ஆசை. காரணம் அவளது ஆசை சாமிதாஸ். அதனை தெரிந்து கொண்டு எரிந்து விழும் அவள் அம்மா மரியம்மாளுக்கு அந்த ஊர் வாத்தியாருடன் தொடர்பு. தன் அண்ணனை காதலித்து ஏமாந்து அசலூருக்கு வாக்கப்பட்டு போன தன் தோழி ரஞ்சி, அவ்வளவுதான் பிலோமியின் உலகம். ஆனால் அந்த ஊரில் மற்ற மனிதர்களும் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோருக்கு கடலையும் கடலோர பெண்களையும் கிடைக்கும் வரை ஆண்டு அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணம்.
ஆசை வைத்த சாமிதாஸ் பதிலுக்கு ஆசையுடன் அத்தனையையும் தீர்த்து கொண்டு விலகினாலும் அவன் மீது அன்பாகத்தான் இருக்கிறாள். துளி கூட அவன் மீது வருத்தமின்றி, அழுகையிலும் அவனை நேசிக்கிறாள் பிலோமி. இந்த பெண்களால் எப்படித்தான் இப்படி காதலிக்க முடிகிறதோ தெரியவில்லை.
அவள் தாய் மரியம்மையை யாருக்குமே பிடிக்காது. அந்த வாத்தியாரை தவிர அவளுக்கும் யாரையும் பிடிக்காது. ஆனால் அவள் மரித்த பின்னர்தான் அவள் மீது வைத்த நேசத்தை அனைவரும் கொட்டி அழுகிறார்கள். இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இருக்கும் போதே காட்டி தொலையலாமே என்றால் அவர்களுக்கு தெரியாதே, தங்களுக்குள் இப்படி பாசம் இருக்கிறது என்று தெரிந்தால் எவனாவது வீம்பு காட்டிக் கொண்டிருப்பானா?
இங்கு ஒழுக்க விதிகளெல்லாம் பெரிதாய் எதுவுமில்லை. அது ஒரு பக்கம் புரளி பேச இருந்து கொள்ள, மக்கள் அவரவர்களுக்கு கிடைத்த வண்ணம் வாழ்க்கையை இஷ்டப்படி வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் கடந்து விடத்தான் குடி இருக்கிறதே…
லாஞ்சுகளின் வருகை எப்படி அந்த மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது? எப்படி அவர்களது எதிர்கால திட்டங்களை திசை திருப்புகிறது என்பதெல்லாம் கதையோடு சென்னதில் சிறப்பு.
தனது இழப்பினை தன் தாயின் காதலனோடான அன்பின் மூலம் ஈடு செய்யும் பிலோமிக்கு வாழ்க்கையில் நேசம் மட்டும்தான் மீதம் என்பதும் அது இன்னார் மீதுதான் ஏற்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதும் புரிகிறது.
சோகத்தை சிரித்து கடக்கும் ரஞ்சி, செல்லும் வீட்டிலெல்லாம் குடும்பத்தில் ஒருவராகி விடும் தரகு முஸ்ல்மான், இவர்களை போன்றோர்களால்தானே இன்னும் பாதி பேர் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?
இங்கு எதுவும் சரி தவறு என்றெல்லாம் பேசாதீர்கள், முடிந்த வரை அன்பு காட்டிவிட்டு சென்று வாருங்கள்.
கட்டாயம் வாசிக்க வேண்டிய புதினம்.
ஓவியர்: கே.விக்னேஷ்வரன் –
கடல்புரத்தில் – வண்ணநிலவன்
கடல்புரத்தில் நாவல் படிப்பதற்கு முன்பே நாவல் உருவான களத்தை ஒரு காணொளியில் எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்கள் பேச கேட்டிருந்தேன்.
கடல் பிடி மீனவர்களில் வல்லம் மற்றும் விசைப்படகு வைத்திருப்போர் இடையே ஏற்பட்ட தொடர் சண்டை கடைசியில் சக மீனவருடைய குருதியை வெளியே எடுத்து உயிரை பறித்தது இதுவே கதையின் மையம். இது ஒரு உண்மை கதை.
(அன்று) இளம் எழுத்தாளர் வண்ணநிலவன் வேலை இல்லாமல் இருக்கும் சூழலில் அந்த ஊரில் மீனவர்களின் பேச்சு மொழிகளையும் சண்டை சச்சரவுகளும் கவனித்த வண்ணம் இருந்தார், திடீரென ஒரு நாள் சண்டையில் கைகலப்பு ஏற்பட்டு கடைசியில் கொலை சம்பவம் நிகழ்ந்தது. இதனை அறிந்த அந்த இளம் எழுத்தாளரின் மனது மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.
அதன் விளைவே கடல்புரத்தில் நாவல் தோன்றியது. இந்தக் கதையில் உண்மை சம்பவத்தையும் சில கற்பனை கதாபாத்திரங்கள் பாத்திரங்களையும் சேர்த்து வாசகர்களுக்கு இலக்கியச் சுவையை தருகிறார் எழுத்தாளர் வண்ணநிலவன்.
பிலோமி குட்டி,ரஐ்ஜி,சாமி தாசன், க்ரூஸ் மிக்கேல், போன்ற கதாபாத்திரங்களில் ஒரு சிலராவது நம் அனைவருடைய வீட்டிலும் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் இலக்கியம் தரமானது,அலாதியானது. ஏனென்றால் இந்த உண்மை சம்பவமே வாசகர்களுக்கு பரிபூரணத்தை தரும்
ஆனால் கற்பனை கதாபாத்திரங்களுக்கு இதில் சேர்த்திருப்பது இரு பட்டாம்பூச்சிகள் ஒரே பூவில் அமர்ந்து இருப்பது போல எண்ணுகிறேன்.
இரு நாவல்கள் சேர்ந்து ஒரு நாவலை உருவாக்கியது போன்று தான் எனக்கு ௭ண்ண தோன்றுகிறது.
மீனவர்களுடைய பழக்க வழக்கங்கள், பேச்சுமொழி, கருவாட்டு வாடையினுடன் அவர்களின் வாழ்வியல் மற்றும் காய்ந்த தேகம், கடல் காற்று போன்றவற்றை கதாபாத்திரங்களின் வாயிலாக அழகாக வெளிப்படுகிறது.
நாவலின் முடிவில் மெழுகுவர்த்தி ஏற்றிய உடன் எப்படி பிரகாசமாக எரிந்து போகப்போக மெழுகு கரைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் போவது போல் கரைந்து போகிறாள் ‘பிலோமி குட்டி”..
இந்த நாவலைப் படித்த வாசக நண்பர்களுக்கு மீண்டும் அதை நினைவுபடுத்துகிறேன், படிக்காத வாசக நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்….
ஓவியர்: கே.விக்னேஷ்வரன்…
Prabhu mahalingam –
கடல்புரத்தில் – வண்ணநிலவன்
நான் படிக்கும் வண்ணநிலவன் அவர்களின் முதல் நாவல்
பிலோமி என்ற பெண்ணின் ஆழமான மனஉணர்வுகளை அற்புதமாக சொல்லியிருக்கிறார் வண்ணநிலவன், பிலோமியை சுற்றி உள்ளவர்களின் செயல்களும் பருவமடைந்த அப்பெண்ணின் மனநிலைகளும் நமக்குள் ஒரு பாசத்தை ஏற்படுத்தி விடும்
ஒரு பெண்ணிற்கு வாழ்வில் விரக்தியான பிடிப்பு ஏற்பட்டாலும் அந்த வாழ்க்கை மீதான பக்குவம் விரைவில் வந்துவிடும் என்பதை அற்புதமாக சொல்லியிருப்பார், தன் காதலரான சாமிதாஸை விட்டுவிட்டு வாழ்க்கையை யோசிக்கவே முடியாத இடத்தில் இருக்கும் பிலோமிக்கு, சாமிதாஸ் தனக்கு வீட்டில் பெண் பார்த்துள்ளதாக வந்து சொல்லும் இடத்தில் பிலோமி மனதில் உள்ள வலியை மறைத்து அதை எளிதாக எடுத்தது போல் பேசி செல்லும் நிகழ்வு அற்புதம்
பிலோமி ஜெயகாந்தனின் கதாநாயகிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்
சிறந்த நாவல்