கருஞ்சட்டைப் பெண்கள் :
நாட்டின் விடுதலைக்காகத் தலைவர்கள் முழங்கியதைக் கேட்டுக்கொண்டிருந்த பெண்களை தங்களுடைய சுயமரியாதை மேடைகளில் ஏற்றி விடுதலை, அரசியல், பாலினச் சமத்துவம் ஆகியவற்றைப் பேசவைத்தவர் பெரியார். அவரது சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் களத்தில் துணிந்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள் பெண்கள்.
அடுப்படியே கதியென நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார் பெரியார். இப்படி கட்டுப்பாடுகளைத் தகர்த்து களம்கண்ட பெண்கள் குறித்து ‘கருஞ்சட்டைப் பெண்கள்’ எனும் தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார் பெரியாரியக் கொள்கையில் வளர்ந்தவரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஓவியா.
பெண் ஏன் இரண்டாம்தரமாக நடத்தப்படுகிறாள், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே பெண், ஆணுக்கு அடிமையாக இருந்துவருகிறாளா, பெண் எப்போது ஆணின் சொத்தாக மாற்றப்பட்டாள் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மாமேதை ஏங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலை அடிப்படையாகக்கொண்டு பதில் சொல்லியிருக்கிறார் ஓவியா.
‘தொல்காப்பியமும் மனுதர்மமும்’ எனும் பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இவ்விரு நூல்களிலும் பெண்ணடிமைத்தனக் கருத்துகள் எப்படிக் கூறப்பட்டுள்ளன, அவை சமூகத்தில் பெண்கள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
மது ஒழிப்புப் போராட்டத்தின் முன்னோடிகள்
ஆண்கள் சூழ் அரசியல் களத்தில் பெண்களை முதன்முதலில் தன்னுடைய குடும்பத்திலிருந்து முன்னிறுத்தியவர் பெரியார். சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கி நாகம்மையாரை அரசியல் தளத்துக்கு பெரியார் கொண்டுவந்தார். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற கண்ணோட்டத்துடன் வளர்ந்த நாகம்மையார்தான், பிற்காலத்தில் பெரியார் சிறையிலிருந்தபோது கள்ளுக்கடை மறியலை வீரத்துடன் முன்னின்று நடத்தினார்.
1920-களில் நாகம்மையாரும் பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் தொடங்கிய மது ஒழிப்புப் போராட்டம்தான் இன்றளவும் நடைபெறும் டாஸ்மாக் கடைப் போராட்டங்களுக்கு முன்னோடியாக உள்ளது. கள்ளுக்கடைப் போராட்டத்தோடு மட்டும் நாகம்மையாரின் பங்கு முடிந்துவிடவில்லை. பெரியாரின் வழியில் தன்னையும் சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு, அதைத் தலைமையேற்று நடத்தியவர் நாகம்மையார். பெரியாரின் தங்கை கண்ணம்மாள், பத்திரிகையாளராக இருந்து சிறை சென்ற முதல் பெண். ‘குடி அரசு’ ஏட்டின் பதிப்பாசிரியராக இருந்த கண்ணம்மாள், பெயரளவுக்கு மட்டும் செயல்படாமல் ‘குடி அரசு’, ‘ரிவோல்ட்’ ஆங்கில நாளிதழ் போன்றவற்றில் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் சடங்குகளை எதிர்த்தும் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுயமரியாதை மேடைகளில் முக்கியப் பேச்சாளராகவும் இருந்துள்ளார்.
கைக்குழந்தையுடன்
சிறை சென்றவர்கள்
தேவதாசி முறை ஒழிப்புக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 60 வயதிலும் 577 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்.
இந்தப் போராட்டத்தின்போது 38 பெண்கள் கைக்குழந்தையுடன் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடியைப் புடவையாக அணிந்துகொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டவர் ராமாமிர்தம் அம்மையார்.
போராளிப் பெண்கள்
பழமைவாதம் வேரோடிப்போயிருந்த காலத்தில் தாலி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் குஞ்சிதம் குருசாமி. சிறந்த பேச்சாளரான குஞ்சிதம் குருசாமி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தேசிய மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பூ, பொட்டு வைக்காமல் தாலி அணியாமல் இருந்த காரணத்துக்காகவே ஆசிரியர் வேலையை இழக்க நேரிட்டது.
சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த மீனாம்பாள் சிவராஜ். இவர், அந்தக் காலத்திலேயே ஆதி திராவிட மக்களுக்கான இயக்கங்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்துள்ளார்.
திருச்சிக்கு எப்போது சென்றாலும் பெரியார் வரச்சொல்லி பார்க்கிற முக்கிய நபராக இருந்துள்ளார் வீரம்மாள். காரணம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரம்மாள் படிப்பில் ஆர்வம் கொண்டவர். ஆனால், ஒடுக்கப்பட்டவர் என்ற காரணத்துக்காகவே அவர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
ஆனால், மனம்கலங்காத வீரம்மாள் தினமும் எட்டு கி.மீ. தொலைவுக்கு நடந்துசென்று பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இவர் 1943-ல் தொடங்கிய ஆதி திராவிடர் நலத் தொடக்கப்பள்ளி தற்போதும் செயல்பட்டுவருகிறது.
அந்தக் காலத்தில் சாதி மறுப்புத் திருமணமும் மறுமணமும் மிகப்பெரும் சமூக மறுமலர்ச்சி செயல்பாடுகளாகக் கருதப்பட்டன. சித்த மருத்துவரான தருமாம்பாள் தன்னுடைய வீட்டு வாசலில், ‘இங்கு சாதி மறுப்பு, கைம்பெண் மறுமணம் செய்துவைக்கப்படும்’ எனப் பலகையில் எழுதிவைத்திருந்தார்.
பெரியாருக்குபிறகு திராவிடர் கழகத்தை வழிநடத்திய மணியம்மையார், நீலாவதி அம்மையார், தோழர் மிரண்டா கஜேந்திரன், சத்தியவாணி முத்து என எண்ணற்ற கருஞ்சட்டைப் பெண்களின் வரலாற்றை இந்தப் புத்தகம் சுமந்துவந்துள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள், பெண்ணியத்தையும் பெரியாரியத்தையும் வெறும் பேச்சுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அவற்றைத் தங்கள் வாழ்க்கை நெறியாகவும் கடைப்பிடித்தவர்கள் என்பதாலேயே இந்நூல் கவனத்தை ஈர்க்கிறது.
நன்றி – இந்து தமிழ் திசை
Hari –
அருமையான நூல் .. தோழர் ஓவியா அவர்களுக்கு வாழ்த்துகள்..
P Nagarajan –
இது என்னுரை 62
*********************
கருஞ்சட்டைப் பெண்கள் – ஓவியா – கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியீடு.
● திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் சமூக நீதியும் பெண் விடுதலையுமாகும். சமூக நீதிக்கான போராட்டங்களை பெரியாரே தலைமையேற்று நடத்திக் காட்டினார். பெண் விடுதலைக்கான போராட்டங்களை, திராவிட கொள்கை குன்றுகளாக இருந்த மகளிர்களைக் கொண்டே தலைமை ஏற்க செய்யவும், போராடவும், சிறை செல்லவும் பெரியார் தளங்களை அமைத்து தந்தார். அதில் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்த பல பெண்கள் சிறப்பாக தங்கள் பங்கை செய்திருக்கின்றார்கள்.
சென்ற நூற்றாண்டின் போராட்டங்களில் திராவிட இயக்கப் பெண்களின் பங்களிப்பு அபாரமானது.
● இந்த நூலின் ஆசிரியர் வழக்கறிஞர் ஓவியா. திராவிடர் கழக பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர். ‘ நானும் ஒரு கருப்பு சட்டைக்காரி ‘ என தன்னை பெருமையாக சொல்லிக் கொள்பவர். பெரியார் திடலில் ஆண்டு முழுவதும் ( 2016 -17) குறிப்பிட்ட நாட்களில், தொடர் சொற் பொழிவுகளாக ‘ திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு ‘ என்ற தலைப்பில், சுயமரியாதை வீராங்கனைகளின் வரலாற்றை வெளி உலகிற்கு கொண்டு வந்தார். தொடர் சொற்பொழிவை ஒரு தொகுப்பாக இணைத்து மேலும் பல செய்திகளோடு இந்த நூலை சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார்.
● தோழர் ஓவியா இந்த நூலில் குறிப்பிட்டுள்ளபடி, திராவிட இயக்கத்தின் முதற்தலைமுறை பெண்களை, முன்னோடி பெண்கள் பற்றிய தகவல்களை தந்துள்ளார். ஏனெனில் அவர்களைப் பற்றிய விவரங்கள் கூட இன்னமும் பொது சமூகத்தில் அறியப்பட வில்லை. திராவிட இயக்கம், தந்தை பெரியார், இயக்கத்தின் முன்னோடிகள் போன்ற வற்றைப் பற்றிய தகவல்களை, எப்போதுமே இருட்டடிப்பு செய்து கொண்டே வருவது இங்கே வழக்கமாகி விட்டது.. ஆகவே இயக்கத்தை சேர்ந்த தோழர் ஓவியா, அந்த இருளைப் போக்க இந்த நூலை எழுதியுள்ளார்.
● திராவிட இயக்கத்தின் வீர மங்கைகளைப் பற்றிய அரிய தகவல்கள் இந்த கருஞ்சட்டைப் பெண்களைப் பற்றியதாகும்.
பட்டியல் நீளமானது:
அன்னை நாகம்மையார் | பெரியாரின் தங்கை கண்ணம்மாள் | மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் | டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் | குஞ்சிதம் குருசாமி | மீனாம்பாள் சிவராஜ் | வீரம்மாள் | டாக்டர் எஸ். தருமாம்பாள் | நீலாவதி அம்மையார் | பொற்செல்வி இளமுருகு | மலர் முகத்தம்மையார் | திருவரங்க நீலாம்பிகை | சத்தியவாணி முத்து | மஞ்சுளா பாய் | மிராண்டா கஜேந்திரன் | இறை இலட்சுமி அம்மையார் | பரிபூர்ணத்தம்மையார் | சிவகாமி அம்மையார் | அலமேலு அப்பாத்துரை | அன்னை மணியம்மையார் |
● பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் பொது வாழ்க்கை 1920களில் நடந்த கள்ளுக்கடைகளை மூடக்கோரிய போராட்டத்திலேயே தீவிர மடைகின்றது. அவர் கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் பங்கு பெற்றார். பின்பு 1924ல் பெரியாருக்கு பெருமையை தேடிதந்த வைக்கம் போராட்டத்திலும், பெரியார் சிறை சென்ற பின்பு போராட்டத்தை பொறுப்பேற்று நடத்தினார். பெரியார் காங்கிரசில் இருந்த போது இவரும் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி நாகம்மையார் என்ற தகவலை இன்றைய காங்கிரஸ் காரர்களாவது அறிந்திருப்பாராகளா ?
● மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு இணையான ஆளுமையை பார்ப்பது மிகவும் கடினம் என்கிறார் ஓவியா. பெரியாருடன் இணைந்து முதலில் காங்கிரசிலும் பின்பு சுயமரியாதை இயக்கத்திலும் அதன் பின்னர் திராவிடர் கழகத்திலும் தீவிர பணியாற்றியிருக்கின்றார். தேவதாசி முறையை தமிழகத்தில் ஒழிக்க பாடுபட்ட முதல் பெண்மணியாவார். இவரது சமூக போராட்டத்தின் பின்னணியில், இவரது வேண்டுகோளின் படியே, தேவதாசி ஒழிப்பு மசோதாவை தமிழக சட்ட மன்றத்தில் முன் மொழிந்தார் டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார்.
● இந்த கருஞ்சட்டைப் பெண்கள் – சாத்திரத்தால் அரண் அமைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த தேவதாசி முறை, குழந்தை திருமணம், விதவைகளின் அவல நிலை போன்றவைகளை தீவிரமாக எதிர்த்து நின்ற வீராங்கனைகள்.
அவர்களை வெளிச்சத்திற்கு
கொண்டு வந்த படைப்பு இது !
தோழர் ஓவியாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
பொ.நாகராஜன். சென்னை.
06.08.2021.
*************************************