முதல் ஆசிரியர்
அன்றைய சோவியத் நாட்டைச் சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி, குணநலன்கள் ஆகியவை பற்றி தூய்மையும், எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.
சீ.ப்பி. செல்வம் –
#துய்ஷேன்_சார்_இப்ப_எங்க_இருக்கீங்கே…?
“ஆண்டாண்டு காலமாக விவசாய வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். களைக்கொட்டு நமக்கு சோறு போடுது. நம் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ போறாங்க. அவங்களுக்கு படிப்பு என்ன கேடு. அதிகாரிகளுக்குத் தான் கல்வியறிவு எல்லாம் வேணும், நாம சாதாரண மக்கள். எங்க தலையை போட்டு உருட்டாதே” இப்படி கேட்கும் கல்வி அறிவே தெரியாத ஒரு சிறிய கிராமத்தில் எப்படியாவது இங்குள்ள இளம் தலைமுறைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற தீராத எண்ணம் கொண்ட துய்ஷேன் சார் எவ்வளவு பெருமைக்குரியவர்… துய்ஷேன் சார் போல இப்போது எங்கேயாவது ஆசிரியர் ஒருவர் இருப்பாரா? என்ற கேள்வி இந்த புத்தகத்தை வாசிக்கும் போதே வந்துவிடுகிறது. போராட்டத்தின் அடிப்படையிலாவது இந்த இளம் தலைமுறையினர் கல்வியை அடைய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் எப்போதும் புனிதத்திற்கு நிகரானது. “அனேகமாக நாங்கள் அனைவரும் எங்களுடைய ஆசிரியரை அவருடைய மனிதாபிமானத்திற்காக, நல்ல எண்ணங்களுக்காக, எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய கனவுகளுக்காக நேசித்தோம்” என்று சொல்லும் அல்தினாயின் வார்த்தைகளை போல இப்போது இருக்கின்ற குழந்தைகள் இப்படி பேசிக்கொள்வார்களா? இல்லையெனில் அவ்வாறு பேசுவதுபோலாவது நாம் அவர்களை உருவாக்கி இருப்போமா? என்ற வினாவை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வைக்கிறது. பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்த அந்த ஆசிரியரை பார்த்து கர்தன்பாய் என்ற ஒரு எளியவர் இவ்வாறு சொல்கிறார் “இது உன் கொள்கைக்கு சரிப்பட்டு வருமோ என்னவோ தெரியாது. சிலசமயம் நாம எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லைனு தோனுது, துய்ஷேன்.நான் என் வயசுக்கு ஏத்தபடி யோசிச்சேன்” என்றும் சொல்லும் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு நிரம்பி இருக்கிறது. இப்படி எளியோர்களின் பேரன்பில் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் நாம் காணமுடிகிறது. அல்தினாவை மேற்படிப்புக்காக நகரத்திற்கு அனுப்புவதற்காக புகைவண்டி நிலையத்தில் வழியனுப்பும்போது துய்ஷேன் அல்தினாயிடம் சொல்கிறார் “நாம நட்டோமே பாப்ளார் மரக்கன்றுகள், அவற்றை நான் பார்த்துக்கறேன். நீ பெரியவளாகி இங்கே வரும்போது அவை எவ்வளவு அழகானவையா இருக்குன்னு நீயே பார்ப்பே” என்று கூறுகிறார்… இப்படி போராட்ட குணமும் எப்போதும் தீர்ந்து போகாத அன்பும் வழிநெடுக இந்த நாவலில் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமே #முதல்_ஆசிரியர். இப்போது கூட எந்தப் பிரச்சினையும் இல்லை. துய்ஷேன் ஆசிரியர் வந்தால் அந்த இரண்டு பாப்ளார் மரங்களுக்கு இடையே அமர்ந்து பேசலாம். துய்ஷேன் சார் இப்ப எங்க இருக்கீங்கே…?
நூலின் பெயர்: முதல் ஆசிரியர்
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்