ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் அவர்களின் பங்குபாத்திரம் பற்றி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இப்பிரதி. மனிதனை மானுடப்படுத்தி ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் இலக்கியம் வகிக்கின்ற மகத்தான பாத்திரத்தை நமக்கு உணர்த்துகிறது. கலைநயமிக்க மிக நுட்பமான கருத்துப் பதிவு. இது உழைக்கும் மக்கள் அனைவரது நெஞ்சங்களிலும் தனது ஆழமான வேர்களைப் பதித்துள்ளது. கார்க்கி அதையும் ஒரு தாயின் குரலாகப் பதிவு செய்திருப்பது தான் நாவலின் வெற்றியின் ரகசியமாகும். அதனால்தான் இது காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கிறது.
தாய்
Author: மக்சீம் கார்க்கி (தமிழில்: தொ.மு.சி. ரகுநாதன்)₹195.00
விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைக் தீட்டியிருக்கிறார்.
Delivery: Items will be delivered within 2-7 days
விடுதலை வேந்தன் –
ரஷ்யப் புரட்சிக்கு அடிநாதமாக இருந்த “தாய்” நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்..
Amudhan Devendiran –
தாய் இன்றைய தேவை
அந்த மகத்தான கலைஞனுக்கு நாம் செய்ய வேண்டியது அவரது படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது தான்.மக்களிடமிருந்தே கற்றுக்கொண்டு மக்களுக்காகவே எழுதிய, வாழ்ந்த எழுத்தாளர்கள் ஒரு சிலரே. அதில் என்றென்றும் மாக்சிம் கார்க்கிக்கு ஒரு தனி இடம் உண்டு.
உலக இலக்கியங்களில் ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை பட்டியலிட்டால் அதில் மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல் நிச்சயம் இடம்பெறும். உலக இலக்கியங்களை தேடித்தேடி வாசிப்பவர்கள் சோவித் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்த “தாய்” நாவலை அவசியம் ஒரு முறை வாசித்து விடுங்கள். குறிப்பாக உழைக்கும் வர்க்கமும், அரசியல் அபிமானிகளும் கட்டாயம் வாசிக்க வேண்டிய உன்னதமான நாவல் தான் இந்த “தாய்”.
இன்று மீண்டும் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிய போது…
நாவலிலிருந்து ஒரு சில வார்த்தைகள் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்….
“முதலில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்து தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்!”
“மனிதர்கள் மோசமாய் நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணமல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்று விட்டது..”
“பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.! நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே, அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியம் சாதிக்கிறார்கள். மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்”.
“தோழர்களே! தேவாலயங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்; கை விலங்குகளையும் காசுகளையும் உருவாக்குவதும் நாம்தான். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொருவரின் உணவுக்கும், களிப்பிற்கும் ஆதார சக்தியாய்த் திகழ்வது நாம்!”
“எங்கு பார்த்தாலும் சரி, எப்போது பார்த்தாலும் சரி. நாம் தான் உழைப்பதில் முன்னணியில் நிற்கிறோம்; வாழ்க்கையிலோ நாம் தான் பின்னணியில் நிற்கிறோம். நம்மைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நமது நன்மைக்காக, யாராவது நம்மை மனித பிறவிகள் என்றாவது மதிக்கிறார்களா? இல்லை. ஒருவருமே இல்லை.”
“நமது உரிமைகளுக்காகப் போராடும் ஆகையால் ஒன்று திரண்டு ஒருவரோடு ஒருவர் பிணைந்து நின்று நாமெல்லாம் நண்பர்கள் என்கிற உண்மையை உணர்ந்தாலன்றி, நமது வாழ்க்வை நாம் போராடிப் பெற முடியாது”.
“தோழர்களே நமக்கு உதவி செய்வதற்கு, நம்மைத் தவிர யாருமே கிடையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒவ்வொருவரின் நன்மைக்காக நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். எல்லோருடைய நன்மைக்காகவும் ஒவ்வொருவரும் ஒன்றாக வேண்டும்.
நம் எதிரிகளை ஒழிப்பதற்கு இதுவே நமது தாரக மந்திரம்!”.
“முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களை சிறையில் தள்ளினார்கள்; இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால்,உள்ளே போடுகிறார்கள்”.
“நீங்கள் நன்றாக வாழத்தான் முடியாது போயிற்று ; ஆனால், வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு படு மோசமானது என்பதை உணர்ந்து கொண்டீர்கள். நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினால், எத்தனை ஆயிரம் பேரானாலும் நல்வாழ்வு வாழ முடியும். ஆனால், அவர்களோ மிருகங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல அந்த வாழ்க்கையைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். நாளைக்கும் உண்பான், உழைப்பான். இப்படியே என்றென்றைக்கும் அவனது வாழ்நாள் முழுவதும் – தினம் தினம் உண்பதும் உழைப்பதுமாகவே அவன் வாழ்ந்தால் அதனால் என்ன லாபம்? இதற்கிடையில் பிள்ளைகளை வேறு பெற்றுப் போடுகிறான். குழந்தைப் பருவத்தில் அவை அவனுக்கு குதூகலம் அளிக்கின்றன. கொஞ்சம் வளர்ந்து வயிற்றுக்கு அதிக உணவு கேட்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள் பெரிதாகி விட்டால், உடனே அவனுக்குக் கோபம் பொங்குகிறது; தன் குழந்தைகளையே திட்ட ஆரம்பிக்கிறான்; ஏ பன்றிக் குட்டிகளா! சீக்கிரம் வளர்ந்து பெரிசாகி எங்கேயாவது பிழைக்க வழி தேடுங்கள் என்று கூறுகிறான். அவனோ தன் பிள்ளைகளை வீட்டிலுள்ள ஆடு மாடுகள் மாதிரி மாற்றிவிட முனைகிறான்; அவர்களோ தங்கள் கும்பியை நிரப்பிக் கொள்ளத்தான் உழைக்க முனைகிறார்கள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை இழுபடுகிறது. மனிதச் சிந்தனையைத் தளையிட்டுக் கட்டிய விலங்குகளை எல்லாம் தறித்தெறிய வேண்டும் என்கிற காரணத்துக்காக எவனொருவன் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்கிறானோ, அவனே மனித குலத்தில் உயர்ந்தவன். அம்மா, உங்கள் சக்திக்கு இயன்றவரை நீங்கள் இந்த பணியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்”.
“அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேட முனைய வேண்டும். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்கள் வழியை தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பது தான் என் வேலை. அவர்கள் தம்மைத் தாமே நம்ப வேண்டும். அவர்களுக்கு உதவுவது எல்லாம் அவர்களது சொந்த அறிவுதான். ஆமாம்!”.
இறுதியாக…..
“வறுமை, பசி, பிணி – தங்களது உழைப்புக்குப் பிரதியாக, மக்களுக்கு இவைதான் கிடைக்கின்றன. சகல விஷயங்களுமே நமக்கு எதிராக இயங்குகின்றன. நமது வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சு வரை, இறுதி பலத்தையும் நமது உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் எப்போதும் நாம் அழுக்கடைந்து அவர்களால் ஏமாற்றவும் படுகிறோம். நாம் பெறவேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தியுள்ளார்கள். நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படுகிறோம். நாம் எதையும் தெரிந்து கொள்ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது”.
நாவலின் ஒரு சில பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களை தான் இங்கே பதிவு செய்துள்ளேன். நாவலை முழுமையாக படிப்பவருக்கு அது தரும் அனுபவம் வார்த்தைகளால் சொல்வதை விட நாம் படித்து உணர்வதே சாலச்சிறந்தது.
மீண்டும் சொல்கிறேன் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய மிகச்சிறந்த நாவல். வாசிக்காதவர்கள் ஒருமுறையேனும் வாசித்து விடுங்கள் அதுவே நாம் மாக்சிம் கார்க்கிக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலி.
மிகவும் அழகாக தமிழில் மொழிபெயர்த்தவர்
தொ.மு.சி. ரகுநாதன்.