1 review for ஸீரோ டிகிரி
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல்.இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல்.இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
ஸீரோ டிகிரி
சாரு நிவேதிதா
சமீபத்தில் நண்பர் தனது பக்கத்தில் உங்களுக்கு அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்டு உங்களால் முழுதாக வாசிக்க முடியாத புத்தகம் எது என கேட்டிருந்தார். அதிகம் பேர் சொன்ன தாண்டவராயன் கதையை எளிமையாக வாசித்து முடித்திருந்தேன். அதே போலத்தான் மற்றவர்கள் குறிப்பிட்டுருந்த புத்தகங்களும். நான் எடுத்து வாசிக்க மனமின்றி பாதியில் வைத்த புத்தகம் என்றால் அது ஸீரோ டிகிரிதான். நான் செய்த தவறு சாருவினுடைய படைப்பில் முதலில் இப்புத்தகத்தை வாசிக்க தேர்வு செய்தது. அதன் பின் வருட கணக்காக இது உறங்கி கொண்டிருந்த்து. அவரது ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி என்ன புத்தகம் படித்தேன். பிடித்திருந்த்து. ராஸலீலா படித்தேன். மிரண்டு போனேன். சாருவின் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருந்த்து. அதன் பின் அவரது எழுத்துகளை தொடர்ந்து வாசித்தேன். அவரது உரைகளையும் பேட்டிகளையும் விடாமல் கவனிக்க துவங்கினேன். நேற்று “பேசும் புத்தகம்” பக்கத்தில் ஸீரோ டிகிரி விமர்சனம் பார்க்கவும் திரும்ப முயற்சிப்போம் என நினைத்துக் கொண்டிருந்தேன். சொந்த சிக்கல் காரணமாக நேற்று மாலை 7 மணிக்கு எடுத்து வைத்து அமர்ந்தேன். சாப்பிட கூட இல்லை, 3.30 மணி நேரம் முழுவதுமாக வாசித்து விட்டுத்தான் எழுந்தேன். இப்படி தொடர்ந்தாற் போல் வேறெந்த புத்தகத்தையும் வாசித்த நினைவில்லை. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமறையில் இருந்த போது விடிய தூங்க கூடாது என்பதற்காக உடையார் படித்தேன். ஆனால் அது வலுக்கட்டாயமாக படித்தது. இப்புத்தகம் உண்மையில் வேற லெவல்.
சாருவை படிக்க சாரு பற்றி அறிமுகம் கட்டாயம் தேவை. சாரு ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். பின்நவீனத்துவம் என்றால் ஆதிக்கத்திற்கு முழுவதும் எதிர்ப்பானது. அதாவது இங்கு நான் மேல் நீ கீழ் என் எதுவுமில்லை என்பது. சாருவை பலர் கேலி செய்வதும் அதனால்தான். எப்படியென்றால் எல்லாரையும் சமமாக பாராட்டுவார். அதே போல் சமமாக விமர்சிப்பார். பெரியவர் சிறியவர் என்றெல்லாம் பார்க்கவே மாட்டார். பின் டிரான்ஸ்கிரசிவ் வகை எழுத்தாளர். அப்படி என்றால் எழுத மற்றவர்கள் தயங்குவதை தைரியமாக எழுதவது. அதுவும் அவர் எழுத்து “Real truth” ஆக மட்டும் இருக்காது, “Brutal truth” ஆக இருக்கும். உண்மையில் அவர் எழுதும் விசயங்களை படித்து விட்டு நமக்கு குற்ற உணர்வு எழாமல் இருக்காது.
ஸீரோ டிகிரி எனப்படும் இப்புத்தகம் அனைத்தையும் கடந்து ஒரு பனி சிகரத்தில் இருந்து கொண்டு, தன்னால் காண இயலாத தன் செல்ல மகளுக்கு ஒரு தகப்பன் எழுதுவது, அவன் தன் வாழ்க்கையை தன் தரப்பு வாதத்தை தன் கண்ணீரை அவளுக்கு சமர்பிக்கிறான்.
சாரு ஒரு சமத்துவ வாதி, சமத்துவம் என்றால் சாதியில்லை, மதமில்லை என்றில்லை, பொதுவாகவே எந்த காரணத்தாலும் மனிதர்களுக்கிடையே வேறுபாடோ வன்முறையோ இருக்க கூடாது. மு.வ ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுருப்பார் எல்லையை காக்கும் தேசபக்திதான் மனிதனின் சமத்துவத்துக்கு முதல் எதிரி. மனிதர்களுக்கிடையே தேசத்தின் பெயரால் எதற்கு பிரிவினை. உலகம் முழுக்க ஒரே தேசமாக இருப்பதில் என்னதான் பிரச்சனை என்று. அப்படி பொது மனிதனாக இருந்து பார்க்கும் பார்வை தாகூரிடம் அதிகம் கண்டதுண்டு. சாருவிடமும் காண்கிறேன்.
உலகம் முழுக்க நிகழ்த்தப்படும் வன்முறையை ஒரு பறவை பார்வையில் சொல்ல துவங்குகிறார். ஆனால் அதை சொல்லும் பாணி தான் சாருவிடம் வித்தியாசமாகிறது. ஏனெனில் அவர் ஒரு கதை சொல்லியாக நின்று பேசமாட்டார். அவர்தான் சூர்யா, அவர்தான் முனியான்டி, அவர்தான், நேநோ, அவர்தான் மிஸ்ரா, அவர்தான் ஆர்த்தி, அவர்தான் சாரு. எழுத்துகளை பற்றி அவரே இதில் குறிப்பிட்டுருப்பார்,
“எழுத்தை எழுத்தால் எழுதிக் கொட்டிருக்கிறது எழுத்து”
மனிதர்களின் மீதான மனிதர்களின் வன்முறைகளை சொல்லிக் கொண்டே வருவார். அவர் சொல்வதை எல்லாம் நாம் கேள்வி பட்டிருப்போம், படித்திருப்போம், ஆனால் அதன் பெயரை மாற்றியிருப்பார். அதனால் புதுக்கதையை போல் படிப்போம். ஆனால் அத்தகைய கொடுரங்களை எளிதாக கடந்துதான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பது அவர் சொல்லி முடித்த பின்தான் புரியும்.
உதாரணத்திற்கு ஒரு பக்கத்தை இரண்டாக பிரித்து நக்சலைட் வேட்டை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறலை ஒரு பக்கமும் மறுபக்கத்தில் ஒரு நடிகை பன்றி வளர்ப்பதை பற்றியும் போட்டிருப்பார். இது செய்திதாள் என்று வைத்து கொண்டால் நம் கவனம் எதை நோக்கி இருக்கும் என்பதை நாம் இந்த பக்கத்தை கடக்கும் போது நமக்கே உணரும். நம்மை அடித்த செருப்பை கீழே போட்டிருப்பார்.
அடுத்த பக்கத்தில் நந்தி விருது வாங்கும் நடிகையை பற்றியும், சுட்டுக்கொல்லப்பட்ட இயக்க தலைவர் பற்றியும் செய்தியை ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பார். ஒரு வரிக்கு அடுத்து வரி என்று துவங்கி முடிகையில் ஒரு வார்த்தைக்கு அடுத்து இன்னொரு செய்தியின் வார்த்தை என இருக்கும். பென்சிலால் பிராக்கெட் போட்டோ, அல்லது ஏதேனும் ஒரு செய்தியை ஹைலைட் செய்தாலோதான் நமக்கு புரிய வரும். இந்த வார்த்தை விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். ஏனென்றால் நம்ம அந்த பக்கதிலே கட்டி போட்டு விடுவார்.
பின்னர் முனியான்டி எழுதும் கதை பற்றி வரும். அதாவது சுதந்திர போராட்ட முன்னோடியான சந்தேலர்கள் கலகத்துடன் ஒப்பிட்டு ஒரு வங்கி கொள்ளையை நாவலாக எழுதுவது போல் இருக்கும். அப்போது படித்த பொது எனக்கு சந்தேலர்களை பற்றியும் தெரியாது, இவர் குறிப்பிடும் வங்கி கொள்ளை பற்றியும் தெரியாது, அதனால் குழம்பி இருந்தேன். இப்போது சந்தேலர்கள் பற்றியும் தெரியும், இவர் குறிப்பிடும் வங்கி கொள்ளை பற்றி “தோழர் சோழன்” நாவல் மூலமாகவும் அறிந்திருந்த்தால் தெளிவாக உள்வாங்க முடிந்தது. அதை விட சுவாரசியம் இதில் புதுமைப்பித்தன் கதாபாத்திரமான பால்வண்ணம்பிள்ளையை கூட்டி வந்தது. உண்மையில் வாசிப்பில் கொஞ்சம் அனுபவம் இருப்பவர்களுக்கு இந்த நூல் கொண்டாட்டமாக இருக்க காரணம் இதுவரையிலான இலக்கிய பாத்திரங்களை அங்கங்கு கூட்டி வந்து விடுவதுதான்.
அப்படியே திடிரென உலக அரசியல், ஆப்பிரிக்காவில் முனியான்டி, இந்திய அரசியல், அமெரிக்க அதிபரை கிழித்து விட்டு திடிரென சொந்த கதை சொல்ல துவங்கி இருப்பார். கதை சொல்வது சூர்யாவா முனியான்டியா என சரிபார்த்து கொள்ள வேண்டும். இருவருமே சுவாரசியமான கதை சொல்லிகள்தான். இடையில் ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை வேறு வருவான். அவனுக்காக 108 முறை ஆரிய அல்குள் சொல்ல வேண்டும். ஆத்தி, நானும் சாருவை போல் புரியாமல் எழுதுகிறேனோ? சரி சரி புத்தகத்திற்கு வருவோம்.
உலகம் முழுவதுமான மனித உரிமை மீறலை சொல்லிவிட்டு பெண்கள் மீதான குழந்தைகள் மீதான ஆண்களின் வன்முறையை சொல்ல துவங்குவார். கதையாகத்தான். ஆனால் அந்த கதையை பிடிப்பது ஓடும் பூனையை எட்டி பிடிப்பது போல சிரமமானது. பிடித்து விட்டால் வருடி கொண்டே இருக்கலாம். அதிலும் முகலாயர்கள் காலத்து நாட்டியக்காரி கதை வேறு லெவல். அவரின் நாகூர் பின்னனி இதற்கு உதவியாய் இருந்துருக்க கூடும். காலை அதை பற்றி தேட சாருவின் தயவால் வேறு இரண்டு புத்தகங்கள் கிடைத்துள்ளன, அவற்றையும் பின்னால் வாசிக்க வேண்டும்.
அடுத்து வரும் சூர்யாவின் கதை, முதலில் மனப்பிறழ்வு கொண்டவன் போல் அவனது செய்கைகள் தெரியும். ஆனால் கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழி இருந்திருக்காது. அதை ஆர்த்தி வந்து நம்மிடம் சொல்லும் போதுதான் நமக்கு புரியும். இப்புத்தகத்திற்கு முன்னர் வந்த எக்ஸ்டன்சியும் பேன்சி பனியனும் படித்தவர்களுக்கு ஆர்த்தியை தெரிந்திருக்கலாம். ஆனால் நான் வாசித்ததில்லை, நான் அவரின் படைப்புகளை பின்னோக்கி வாசித்து கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக வரும் ஆர்த்தி கதை பதைக்க செய்கிறது என்றால் சாருவின் மனைவி அவந்திகாவின் கதை அழ வைக்கிறது. உண்மையில் அழுகையை கட்டுப்படுத்துவது சிரம மாக இருக்கும்.
அங்கு தப்பித்தால் கூட மகள் “ஜெனிசிஸ்” க்கு எழுதிய கடிதங்களும் கவிதைகளும் விடாது. அந்த அம்மை பகுதி கண்ணை கலங்கடிக்க செய்து விட்டது.
இறுதியாக சில பக்கங்களில் சாருவின் கவிதைகள். பலமுறை திரும்ப திரும்ப படித்தேன். மகள் மீதான பாசத்தில் உருக செய்கிறார்.
பல இடங்களில் விமர்சனம் எழுதும் போது இதை குறிப்பிட வேண்டும் என சிலவற்றை நினைத்திருந்தேன். ஆனால் அதை பார்க்க புத்தகத்தை எடுத்தால் மீண்டும் துவக்கத்தில் இருந்து படிக்க அமர்ந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்.
அனைவராலும் வாசிக்க இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அது அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழின் முக்கியமான பின்நவீனத்துவ நாவல். நான் மீண்டும் ஒரு முறை வாசிப்பேன்.