2 reviews for தேசாந்திரி
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹275.00 Original price was: ₹275.00.₹260.00Current price is: ₹260.00.
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Mubarak –
#எஸ்_ராமகிருஷ்ணன் அவர்களின் #தேசாந்திரி.
தமிழில் பிடித்த சொற்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் இந்த தேசாந்திரி என்னும் சொல் மட்டும் மனதில், ஏதோ ஒருவகையில் முன்னேறி வந்து கொண்டே இருக்கிறது.
கதை இல்ல பயணக் கட்டுரை. நான் முதன்முதலாக வாசித்த பயணக் கட்டுரை தேசாந்திரி. பள்ளி நாட்களில் தேர்வுக்காக படித்த பயணக் கட்டுரைகளுக்கும் இதற்கும் நிறையவே வேறுபாடு.
கன்னியாகுமரி முதல் இமயமலைத்தொடர் வரை பறந்து விரிந்த இந்த இந்திய துணைக் கண்டத்தில் அவர் பயணம் செய்த இடங்களையும், செல்லும் வழிகளில் சந்தித்த இயற்கை காட்சிகளையும், பார்த்த இடங்களின் சிறப்புகளையும் அழகாக தொகுத்து கூறியிருக்கிறார்.
தூரமாக பயணம் செய்வது மட்டும் பயணமில்லை. அடுத்த ஊரில் உள்ள கோவில் சிற்பம், ஓவியம் என அந்த சிறப்பை உணர பயணிப்பதை பற்றி எடுத்துக்கூறுகிறார். பயணத்தின்போது நாம் பார்க்கத் தவறிய பலவற்றையும் அவர் பார்த்த பார்வையின் ஊடே நமக்கு ஊட்டுகிறார்.
இவரது இந்த நூல் வாசித்த பின் வாசகர்களின் பயணங்கள், கண்டிப்பாக அதற்கு முன்பு இருந்தது போல இருக்காது. பல இடங்களில், வறலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் கேட்பாரற்று இருப்பதையும், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஒடுக்கப்படுவதையும் சமூக அவலங்கள், மற்றும் கல்வி எனும் பிரம்மாண்ட வணிகம் இப்படி பல சமூக அவலங்களையும் அவர் தனது பயணத்தின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.
நான் வேற மாதிரி புத்தகம் இருக்கும் நினைத்து வாசித்தேன். நான் நினைத்தது இல்லாவிடினும், என் பார்வையின் சில குறைகளை டேய்! முதலில் இப்படி பார்ப்பதை மாற்றிக்கொள், அப்புறமா பயணக்கட்டுரையில் உன் எதிர்பார்ப்பை பாருனு நடு மண்டையில நச்சுனு ஒரு கொட்டு வெச்சுட்டாரு!
பயண விரும்பிகளும், சமூகத்தின் மீதான பல குற்றச்சாட்டுகளோடு இருப்பவர்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்கனும்.
-நன்றி
#Muba
சீ.ப்பி. செல்வம் –
#நல்லதங்காள்_கிணறு_பார்க்க_யாரு_வாரீங்க…?
“பொம்பள பட்ட கஷ்டத்தை கேட்க யாரும் வரலை. அவ தலைமுடி தெரியுதா, புடவை தெரியுதான்னு பாக்க வந்துட்டீங்க. கிணத்துல விழுந்து செத்தது நல்லதங்காள் மட்டும்தானா? ஒவ்வொரு ஊர்லயும் எத்தனை பொம்பளைக கிணற்றில் விழுந்து செத்துப் போயிருக்காங்க. கிணறு வத்திப் போனா, கைதவறவிட்டுத் துருப்பிடித்துக் கிடக்குற வாளி, செம்பைக்கூட பார்த்து புடலாம். ஆனா, அதுல செத்த பொம்பளையோட வலியை அறிய முடியுமா சொல்லுங்க? பெத்த பிள்ளையைக்கூட நாலஞ்சு வயசுல இடுப்பிலிருந்து இறங்கிவிட்ருவோம். ஆனா, தண்ணீர் குடத்தை சாகுற வரைக்கும் இடுப்பில் தூக்கிட்டுத்தானே திரிய வேண்டியிருக்கு” என்று ஒரு பெண் பேசிவிட்டு செல்வதற்கு காரணம், எஸ் ரா வின் நண்பரான பஞ்சாயத்து கிளார்க் ஒருவர் விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கிணற்றை பற்றி சொன்னதும், அதனை எஸ்ரா அவர்கள் பார்த்தபோது நடந்த நிகழ்வுதான் இது. அந்தக் காலத்தில் நல்லதங்காளும் அவளுடைய குழந்தைகளும் கிணற்றில் விழுந்து இறந்ததாகவும், நல்லதங்காளின் கூந்தல் அந்த இடத்தில் அலைந்து கொண்டு இருப்பதாகவும் சொன்ன செய்தி ஒன்று தான் எஸ்.ரா வின் அந்த இடத்திற்கான பயணமும் பார்த்த நிகழ்விற்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஒரு பயணம் என்ன தந்து விடப் போகிறது என்று சாதாரணமாக கேட்டுப்போகும் பலபேருக்கான கேள்விகளுக்கு பதில் இங்கே இருக்கிறது.
#பயணம், மனிதனின் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள என்ற பொதுப்புத்தி இருந்து நம் பார்வையை மாற்றி, ஒரு பயணம் மலையின் கம்பீரத்தை, கடலின் மௌனத்தை, மேகத்தின் அழகினை, வெயிலின் வெம்மையை, இயற்கையின் பேராற்றலை, மழையின் கரிசனத்தை, ஆற்றின் வளமையை, சாரலின் சிலிர்ப்பை, சிற்பங்களின் தடத்தை, சிலைகளின் வரலாற்றினை, உறவுகளின் உன்னதத்தை, நட்புகளின் புனிதத்தை, எளிய மக்களின் பேரன்பை… இப்படி இன்னும் இன்னும் பல அற்புதங்களை வழங்கிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு தன்னுடைய அலாதியான பயணமே இதற்கு சான்று என்று பல்வேறு நிகழ்வுகளுடன் பல செய்திகளை #எழுத்தாளர்_எஸ்_ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய #தேசாந்திரி என்னும் புத்தகம் நமக்கு தருகிறது.
பெளத்தத்தின் அமைதியை தேடி #சாரநாத் திற்கு ஆரம்பித்த பயணம் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக நேபாளத்தின் #நாகர்கோட்டிற்கு சென்று வந்தது வரை, கிட்டத்தட்ட 41 கட்டுரைகளை கதம்பங்களாக நம் கையில் சேருவதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் #எஸ்_ரா அவர்கள்.
நல்லதங்காள் கிணற்றை பார்க்க #அர்ச்சுனாபுரத்திற்கும், மலைச்சாரலை உடல் முழுவதும் வாங்கிக்கொள்ள #லோனாவாலாவிற்கும், சரித்திரம் எழுதி சென்ற #மணியாச்சி_ரயில்வே_நிலையத்திருக்கும், படிக்கட்டுகளின் மேலே இருக்கிற #புனித_தாமஸ்_மலைக்கும், காந்தள் மலரை பார்க்க #செண்பகத்தோப்பிற்கும், வரலாற்றின் பொக்கிஷங்களை சேமித்து வைத்த #சரஸ்வதி_மஹாலுக்கும், அருவியின் சாரலை உணர்ந்துகொள்ள #குற்றாலத்திற்கும், சமணத்தை அறிய #நார்த்தாமலைக்கும், திருநங்கைகளின் சுதந்திர முகத்தை அறிந்துகொள்ள #கூவாகத்திற்கும்… இப்படி ஏராளமான இடங்களில் தன் கால்களை நடக்க விட்ட எஸ்.ரா அவர்கள், வெறும் பயணத்தை மேற்கொண்டார் என்று சுருக்கிவிட முடியாது. புத்தகம் முழுவதும் வரலாற்றின் உன்னதத்தை, இயற்கையின் பேரழகை பேரன்பை உள்ளம் முழுதும் சேர்த்தணைத்துக்கொள்ள ஏதுவாகிறது இவரது பயணங்களும் குறிப்புகளும்.
நம் குழந்தைகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் சொல்லித்தராத பல விஷயங்களை இந்த புத்தகம் நமக்கு அறிந்து கொள்ள வைக்கிறது.
அதில்…
#மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனையும், கொலைப்பிண்ணனிக்கு காரணமாக இருந்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த நீலகண்ட பிரம்மச்சாரி செங்கோட்டையில் இருந்து புறப்படும் போது தனது மஞ்சள் பையை செட்டியார் கடை ஒன்றில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆஷ் கொலைக்கு பிறகு போலீஸ் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போது அந்த பையிலிருந்தவை யாவும் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் என்று அறிந்த செட்டியார், தன்னையும் வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்ட செய்தியை நாம் இதுவரை அறிந்து கொள்ளவே இல்லை.
#தாம்பரம் புனித தாமஸ் தேவாலயம் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் அந்த மலைக்கு ஒரு பெருமை இருக்கிறது. அது உலகில் மிக உயர்ந்த சிகரம் மௌண்ட் எவரஸ்ட் என்று கண்டுபிடிக்கப்பட்ட இந்திய நில அளவைப் பணி இந்த மலையில் இருந்துதான் துவங்கி இருக்கிறது. தி கிரேட் இந்தியன் ஆர்க் எனப்படும் மகத்தான நில அளவைப் பணியை கர்னல் வில்லியம் லாம்டன் இந்த மலையின் மீதிருந்து 1802 ஆம் ஆண்டு துவக்கியிருக்கிறார் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
#தஞ்சை சரஸ்வதி மகாலை அமைத்தவர் மன்னர் இரண்டாம் சரபோஜி என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இரண்டாம் சரபோஜி, கண்புரை வைத்தியத்தில் மிகுந்த ஈடுபாடு வைத்திருந்திருக்கிறார். கண்புரை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்து இருக்கிறார். 1752 இல் பிரெஞ்சு தேசத்தில் டாக்டர் ழாக் டேவில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து காட்டி மருத்துவ சாதனை செய்த போது அன்றைய மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது. ஆனால் அதே காலகட்டத்தில் எந்த விதமான முறையான உபகரணங்களும் இல்லாமல் சரபோஜி மன்னர் கண்புரை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து இருக்கிறார். இது மருத்துவ சரித்திரத்தில் பதிவு செய்யாத செய்தியாக இங்கே குறிப்பிடப்படுகிறது.
#அலாவுதீன்_கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூர் ஒரு திருநங்கை என்று நமக்கு தெரியும். ஆனால் டெல்லியில் முக்கியமான பதவிகளை திருநங்கைகளுக்கே அவர் வழங்கியவர் மட்டுமல்ல, அவருடைய காதல் பெண்களாக இருந்தவர்கள் அனைவருமே திருநங்கைகள் என்பது புதிய செய்தியாக இந்த புத்தகத்தில் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
#கொற்கை முத்துக்கு பெயர் பெற்றது என்று தெரியும். ஆனால் கொற்கையிலிருந்து கிடைத்த முத்துக்களை கிளியோபட்ரா அணிந்து இருந்தார் எனவும், விலை உயர்ந்த முத்து ஒன்று கிரேக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி நாம் இதுவரை அறியாதவை.
#கயத்தாறில் கட்டபொம்மனுக்கு சிலை இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜிகணேசன் நடித்து அந்த படத்தின் வெற்றியின் காரணமாகவே கயத்தாரில் உள்ள அந்த இடத்தை விலைக்கு வாங்கி, தன் சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை எடுத்து நினைவு ஸ்தூபி அமைத்து இருக்கிறார் என்ற செய்தியை நமக்குத் தெரியவில்லை.
#கட்டபொம்மன் மறைந்திருந்த இடம் நமக்கு தெரியும். ஆனால் கட்டபொம்மன் மறைந்திருந்த குமாரபட்டி என்னும் காட்டில் இருக்கக்கூடிய ஒரு மரத்தின் கிளையையோ அல்லது இலைகளையோ நாம் தொடவே முடியாது என்ற செய்தியும், அந்த செய்தியின் வாயிலாக இயற்கையை அதன் மீது அந்த மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
#நாலந்தா பல்கலைக்கழகம் நமக்கு தெரியும். ஆனால் 10,000 மாணவர்களும், 1000 ஆசிரியர்களும், மூன்று மிகப்பெரிய நூலகங்களும், 9 தளங்களும் கொண்டு நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கி இருக்கிறது.
இப்படி ஏராளமான செய்திகளை பயணத்தின் அடிப்படையில் நாம் அறிந்திடாத சரித்திரத்தின் பக்கங்களை புரட்டுவதற்கு நம்மை தயார்படுத்துகிறார் எஸ்.ரா அவர்கள். எனக்கும் பயணத்தின் மீது சிறுவயதிலிருந்தே அவா. தாத்தாவின் வீட்டிற்கு கோடை விடுமுறை சென்ற பயணத்திலிருந்து துவங்கி இருக்கிறது. தாத்தா ஊரில் நான் அறியாத விளையாட்டு, ஆற்று நீச்சல் பயிற்சி, வயதொத்த நண்பர்களின் நட்பு, உறவுகளின் அரவணைப்பில் கரைந்து போன அன்பு, சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒற்றை பனைமர நொங்கின் சுவை, பாலத்தடி கடையின் இட்லி வாசம் என பால்யத்தில் பயணம் தந்தவை இன்னும் அப்படியே இருக்கிறது. அவற்றையெல்லாம் கிளறி விடுகிறது இந்த புத்தகம்.
எஸ்.ரா அவர்கள் தன்னுடைய பயணத்தின் மூலம் அவர் பார்த்த இடங்களுக்கு நம்மை பார்க்க அழைக்கிறார். அவர் பார்த்த இடங்களோ வரலாற்றின் மகத்துவத்தையும், இயற்கையின் பொக்கிஷத்தையும் நாம் பார்க்க அது ஆசைப்படுகிறது. நல்லதங்காள் கிணறையும் நார்த்தாமலை சமணக் கோயிலையும் எஸ்.ரா அவர்கள் பார்த்திருக்கிறார். ஆனால் நாம் பார்க்கவேண்டும் அல்லவா. வாசியுங்கள் நண்பர்களே…. எஸ்.ரா அவர்கள் பார்த்த இடத்திற்கே சென்று வந்துவிடுவோம், நாமும் இந்த புத்தகத்தினை வாசித்தால்….
நூலின் பெயர்: தேசாந்திரி