மார்க்சியம் என்பது குழப்பகரமான சொல் அடுக்குகள் என்றும், புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான தத்துவம் என்பதைப் போன்றும் பொதுபுத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழல் ஒரு பக்கமென்றால், மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டே மார்க்சியத்தை திரித்துக் கூறும் ‘அறிவுஜீவிகள்’ இன்னொரு பக்கம். இந்த இரு தரப்பையும் தவிர, குழப்பமான மொழிக்கட்டுமானத்தோடும், சுற்றிச் சுழலும் திருகலான எழுத்து நடையிலும், வறட்சியான புரிதலோடும் கண்ணோட்டத்தோடும் மார்க்சியத்தை விளக்க முன் வரும் ஒரு கூட்டமும் உள்ளது. இவர்கள் எந்தவகையான நடைமுறையிலும் இல்லாதவர்கள். இவர்களின் எழுத்துகளை எதேச்சையாகக் கடந்து செல்ல நேரிடும் எவருக்கும் மார்க்சியம் என்பது புரிந்து கொள்ளவே முடியாத ஏதோவொரு அமானுஷ்ய சக்தி என்பதைப் போன்ற பிம்பம் தோன்றுவது இயற்கை தான்.
இவர்களுக்கிடையில் எந்தவிதமான பாண்டித்ய மொழிப் பாசாங்குகளும் இன்றி எளிமையான மொழிநடையில் பொருத்தமான உதாரணங்களோடு மார்க்சிய மூல நூல்களை அறிமுகம் செய்கிறார் மாரிஸ் கார்ன் ஃபோர்த். உயிரோட்டமான மார்க்சியம் என்பது நடைமுறையில் பற்றி நிற்கும் ஒருவரிடம் இருந்து மட்டுமே வெளிப்பட முடியும்; அந்த வகையில் மாரிஸ் தனது வாழ்நாள் முழுவதும் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளோடு ஒரு இயங்கியல் ரீதியிலான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தவர். மார்க்சியத்தை நேர்மறையில் கற்றுக் கொள்ள நினைக்கும் எவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
Reviews
There are no reviews yet.