சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ரா வின் புதிய நாவலான ‘சஞ்சாரம்’ குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே இருந்தேன். எல்லாம் சேகரித்த பின்னர் இதை நாவலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், நாவலாக எழுத நாதஸ்வர இசை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் உண்டானது. சஞ்சாரம் நாவலுக்கு 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.
Muniya Samy –
ஆலயங்களை ஒட்டி வளர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையில், மங்கல இசைக்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருந்துவந்துள்ளது. அது கோவில் திருவிழாக்கள் இல்லத் திருவிழாக்கள் அல்லது எவ்விதமான மங்கலச் செயல்பாடுகளிலும் சரி நாதஸ்வரம் இல்லாமல் அந்த நிகழ்வு முழுமை பெறாது என்பது உண்மை. சிறப்பான சொற்கட்டுகள், கற்பனைச் ஸ்வரங்கள், வாசிப்பதில் ஒரு தனிச் சிறப்பு, சவால்கள், ஈர்ப்பு போன்ற பல பெருமைகள் நாதஸ்வரத்திற்க்கு உண்டு.
“நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி பேசப்படும் அளவுக்கு விருதுநகர், இராமநாதபுரம் போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படுவதில்லை. இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை, வாழ்க்கை இவர்களை அடிக்கும் அடியை இந்த நாவல் பேசுகிறது.
பக்கிரி மற்றும் ரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம் கரிசல் நில நாதஸ்வர கலைஞர்களின் இன்றைய நிலையை அடிப்படையாகக்கொண்டு கதை நகர்கிறது. நாவலின் ஒவ்வொரு அத்தியாயமாக கரிசலின் பண்பாடு, விவசாயம், வரட்சி,
சாதிய கொடுமைகள் நாதசுரக் கலையில் சிறந்த வித்வான்கள் என்று பெயர் பெற்றும் சமூகத்தால் மறக்கப்பட்ட கலைஞர்கள் என கரிசலின் வாழ்க்கை துயரங்களையும், அழிந்து போன சிறப்புக்களையும் தான் பார்த்து கேட்டறிந்த வற்றை நாவலாக எழுதியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
கி.பி.1311_ல் மாலிக்கஃபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனார் லட்சய்யா மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்துக்கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் கேட்டகாத அந்த இசை மாலிக்கபூரை வசீகரிக்கிறது. லட்சய்யாவின் வாசிப்பில் கல்லால்லான யானைச்சிலை தன் காதை அசைப்பதைப் பார்த்து மாலிக் கபூர் பிரமிக்கிறான். அவரைத் தன் அரசன் கில்ஜிக்குப் பரிசாக அளிக்க டெல்லிக்கு அழைத்துச் செல்கிறான். கபூரும் கில்ஜியும் நாதஸ்வர இசை ஒலிக்க சல்லாபிப்பதையும், பிறகு படிப்படியாக அந்த இசையே அவர்களை அழிப்பதையும், இதெற்கெல்லாம் காரணமான நாதஸ்வரம் இனி வடக்கே வரவே கூடாது என்று தடைவிதிக்கப்பட்டதையும், அதனால் இன்றுவரை எந்த வட மாநிலத்தவரும் நாதஸ்வரம் கற்காததையும் நாவலில் வாசிக்கையில் எது வரலாறு எது புனைவு என்று பிரித்தறிவது கடினம். எழுத்தாளர் அசோகமித்திரன் சொன்னதுபோல் புனைவுகள் அரை நிஜங்களைக் கொண்டது. அரை நிஜங்கள் நிஜங்களாகாது. ஆனால் அவைகளே புனைவுகளுக்கு உயிரூட்டுகின்றன.
திருமணங்களில் வாசிப்பது மட்டும் இன்றும் சம்பிரதாயமாகத் தொடர்ந்தாலும் வாழ்வையே அர்ப்பணித்துக் கற்றுக்கொண்ட ஒரு கலையை வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் நிகழ்த்த வேண்டியிருப்பதும், ஏதோ இதுவும் ஒரு சத்தம் என்று அங்கு அவரவர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பதும், சினிமாப்பாட்டு வாசிக்கச்சொல்லி வற்புறுத்தப்படுவதும் ஒரு கலைஞனுக்கு எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை நாவலில் உணரமுடிகிறது.
வெறும் பெயரைத் தவிர வேறு அனைத்தையும் இழந்துபோன ஒரு ஜமீன் பக்கிரியையும் ரத்தினத்தையும் தன் வீட்டிற்கு வரவழைத்து நாதஸ்வரத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்டுப் பாராட்டிவிட்டு, என்னிடம் மிச்சமிருப்பது இதுதான் என்று வெள்ளைக்காரர்கள் ஒருகாலத்தில் அளித்த பதக்கங்களை அக்கலைஞர்களுக்கு அணிவித்துக் கைச்செலவுக்குக் காசுகொடுத்து அனுப்புவது நாவலில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
மண்சார்ந்த வாழ்விலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் பெறும் வெற்றிக்கு ஈடுகொடுக்கும் வேகத்தில் கிராமங்கள் நகரங்களாக மாற்றம்பெற முடியாமல் போவதால், நகர மக்களின் அடர்த்தியை சமாளிக்க முடியாத வேகத்தில் வளர்வது ஒருபுறம், கிராமங்கள் கைவிடப்படுவது மறுபுறம். நாவலில் பொம்மக்காபுரம் என்ற கிராமம் கிட்டத்தட்ட முழுமையாகவே கைவிடப்பட்டுக் கிடக்கும் காட்சி என்னை போன்ற கிராமப்பின்ணணியுடைய வாசகரையும் அசைத்துவிடக்கூடியது.
கலைகளில் சாதிய கட்டுப்பாடுகள் இருப்பதென்பது நம் தமிழ் சமூகத்தில் அன்று தொடங்கி இன்று வரை உள்ள விடயம். முருகன் கோவிலில் வாசிக்கப்பட்ட நாதஸ்வர இசையினால் ஈர்க்கப்பட்டு சாதியையும் மதத்தையும் கடந்து கால் ஊனமுற்ற இஸ்லாமியரான அபு இப்ராஹீம் சாஹிப் நாதஸ்வர இசை கற்றுத்தேர்ந்து வெளிநாடுகளில் எல்லாம் சென்று புகழ் பெற்றிருந்தாலும் நாதஸ்வர இசையின் மீதான காதலுக்கு அடித்தளமாக இருந்த முருகன் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்க ஏங்கியது நெகிழ்ச்சியான இருந்தது. இதுவரை வெளிப்படுத்தப்படாத இக்கலைஞர்களின் வாழ்வை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
சஞ்சாரம் நாவல் கரிசல் நாதஸ்வர இசை கலைஞர்களின் வாழ்க்கை முறையை பற்றிய நாவலே ஒழிய நாதஸ்வர இசையை பற்றிய நாவல் இல்லை என்று எழுத்தாளர் எஸ்.ரா_வே கூறியுள்ளார் எனவே நாதஸ்வர இசை பற்றிய நுணுக்கங்கள் குறிப்புகள் விரிவாக இல்லை என்று விமர்சிப்பதோ கருத்து தெரிவிப்பதோ சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. நாதஸ்வர இசையை கேட்டு ரசித்திருந்தவர்கள் நாவலை வாசித்தவுடன் மீண்டும் அந்த இசை மயக்கத்தில் ஒருமுறை சஞ்சாரம் செய்ய விரும்புவார்கள் என்பதற்கு உத்தரவாதமுண்டு.
ART Nagarajan –
சஞ்சாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்.
அருப்புக்கோட்டை அருகே,
மூதூர்க் காரர்களுக்கும், பனங்குளத்துக்
காரர்களுக்கும்
சூலக் கருப்பசாமிக்கு
யார் வில் எடுத்துக் கொடுப்பது என்கிற தகராறு!
அரட்டானம் லட்சய்யாவின் நாதத்திற்கு கல்யானை
தன் காதுகளை அசைத்ததால் படையெடுத்து வந்த மாலிக்காபூர் ஊரைக் கொள்ளையடிக்காமல் திரும்பி விடுகிறான்.
லட்சய்யாவை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறான்.
நாதசுரம் வட இந்தியாவில்
இன்று வரை மங்கள நிகழ்வுகளில் மட்டுமல்ல,
எந்த நிகழ்வுகளுக்கும்
பயன்படுத்துவதில்லை,
அது ஏன் என்பதையும்
இந்த நூலில் காண முடிகிறது.
கல்யானை காதுகளை அசைத்ததோ என்னவோ?
இந்த சாக்கில் மனிதர்களின் காதுகளை அசைக்க முயற்சி செய்கிறார் எஸ்ரா.
நாதசுரம் அசுர வாத்தியம். யானை மாதிரி.
பயத்துக்குக் கட்டுப் படறதில்லே. பழக்கத்துக்குத்தான் கட்டுப்படும்
அக்கா கேட்பாள்…“எதுக்குடா உனக்கு இந்த வேலை. ரெண்டு வருஷம் போட்டுருவாங்களாமே” என்கிறாள்.
பக்கிரி சொல்வான்…
“சோத்துல உப்பு போட்டு சாப்புடுறோமில்ல”.
இது வெறும் “ரோஷம்” சம்பந்தப் பட்ட விஷயமில்ல அக்கா,
காலமெல்லாம் “கீழ்ச்சாதி” என்று குத்தப்பட்ட முத்திரையின் கொடூரமான பகுதியைத் தோலுரித்துக் காட்டுகிற ரௌத்திரம்.
சாமிக்கு அருகில் நாதஸ்வரம் வாசித்தாலும்
சாப்பிடும்போது தெருவில்
உட்கார வைக்கிறது
ஆதிக்க சமூகம்.
நாதசுர மேண்மையை விட
நாயனம் வாசிப்பவர்களின்
துயரம், தனிமை,
கடந்த காலப் பெருமைகள், மறக்கமுடியாத அலைக்கழிப்புகள், இவைகளை பதிவு செய்வதே “சஞ்சாரம்”.
நாயனம் அசுர வாத்தியம்!
எஸ்ரா அசுர கதை சொல்லி!!
வாசிப்பு வரலாற்றை அறியத்தரும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.
Sumi Hari –
நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்வை ஒட்டியே பயணிக்கிறது கதை.
பக்கரி,ரத்தினம் இணைந்து வாசிக்கும் கலைஞர்கள்.வயதில் பெரியவர் ரத்தினம் ,சாதிய அவமானங்களை பொறுத்துக்கொண்டு ,மனதில் மட்டுமே கோபத்தை உடையவர்.பக்கிரியின் வயதிற்கு அதைத் தாங்க முடியாமல் செய்யும் ஒரு செயல் இருவரையும் ஊரை விட்டே தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளுகிறது.
அப்படி அவர்களின் செல்லும் பயணத்தில் ,இடைச்செருகலாய் ஒவ்வொரு ஊரின் கதைகளையும்,அங்கு வாழ்ந்த கலைஞர்கள் பற்றியும் சுவாரசியமாய் சொல்லிக்கொண்டே செல்கிறது நாவல்.
ஊரோடிப்பறவைகளின் சாபம்,லட்சய்யாவின் நாதஸ்வர இசைக்கு காதை அசைக்கும் கல்லால் ஆன யானைசிலை,வட இந்தியாவில் யாரும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ளாத காரணம்,சவரன் இருபது ரூபாய்க்கு விற்ற காலத்தில், ஆயிரம் ரூபாய் சன்மானம் வாங்கிய கலைஞர்கள், திருடனுக்கு ஏழு வீட்டு சோறு தண்டனை,இப்படி நிறைய கதைகளும்,கதைமாந்தர்களும்.
2018 ம் ஆண்டின் சாகித்ய அகாடமி பரிசை வென்ற இந்த நாவல் கரிசல் மண்ணைச் சார்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இன்னல்களை நெகிழ்வோடு சொல்லியிருக்கிறது.நல்ல வாசிப்பனுபவம்.
Srinivasan –
சஞ்சாரம் நாவல் விமர்சனம்
https://youtu.be/RuFITcyKf5c