EZHU THALAIMURAIKAL
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாகப் பிப்ரவரி மாதம் அனுசரிக்கப்படுகிறது. கறுப்பின மக்கள் அடிமையாக நடத்தப்பட்ட கொடுமைகள் பற்றி உலகுக்கு முதலில் சொன்ன நாவல் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய ‘டாம் மாமாவின் குடிசை’. அதேநேரம், மிகவும் பிரபலமான நாவல் அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘வேர்கள்’ (Roots) அல்லது ‘ஏழு தலைமுறைகள்’. ஏழு தலைமுறைகள் கதை என்ன? பார்ப்போம்:
இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய கதை இது. ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் காம்பியா நாட்டில் ஜப்பூர் என்ற குட்டி கிராமம். அங்குப் பெரும்பாலோர் விவசாயிகள்; சிறுவர்கள் ஆடு மேய்ப்பார்கள். அந்த ஊரைச் சேர்ந்த சிறுவன்தான் குண்ட்டா. அவனுடைய குடும்பத்தில் முதல் குழந்தை. ஐந்து வயதில் அவனும் ஆடு மேய்க்கப் போனான்.
காட்டில் ஆடு மேய்க்கும்போது சிங்கம், புலி எல்லாம் திடீர் திடீரென வந்துவிடும் என சேக்காளிச் சிறுவர்கள் குண்ட்டாவைப் பயமுறுத்துவார்கள். சிங்கம் புலியைவிடவும் மோசமானவர்கள் வெள்ளைப் பூச்சாண்டிகள். இந்த வெள்ளைப் பூச்சாண்டிகள், அவர்களைக் கப்பலில் கடத்தி கொண்டு போய்விடுவார்கள் என்றும் அந்தச் சிறுவர்கள் அச்சுறுத்தினார்கள். அதைப் பற்றி அப்பாவிடம் குண்ட்டா கேட்டபோது, தனியாகக் காட்டுக்குள் போக வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
குண்ட்டா பெரியவனானதும், இளைஞனுக்குரிய கிராமப் பயிற்சிக்காக சக இளைஞர்களுடன் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். நீண்ட தூரம் ஓடுவது, நட்சத்திரங்களைப் பார்த்து நேரத்தைக் கண்டுபிடிப்பது, வேட்டையாடும் தந்திரங்கள், சண்டை போடும் முறைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான். ஒரு சுரைக்குடுவையில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குண்ட்டா ஒரு கல்லைப் போட்டு வந்தான். ஒவ்வொரு கல்லும் ஒரு மாதம். ஒரு வருடத்தில் இளைஞனாக மாறுவதற்கான பயிற்சி முடிந்தது.
அதன் பிறகு குண்ட்டாவுக்குத் தனிக் குடிசை வேயப்பட்டது. தனி நிலத்தையும் அப்பா தந்தார். கறுப்பின மக்கள் இசைக்கவும் நடனம் ஆடவும் மத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். குண்ட்டாவுக்கும் மத்தளம் செய்ய வேண்டுமென்று ஆசை. மரம் வெட்டக் கோடாரி, வில்லுடன் காட்டுக்குப் புறப்பட்டான்.
காட்டுக்குள் போய், மரத்தைத் தேர்ந்தெடுத்து அவன் வெட்ட ஆரம்பித்தபோது, ஒரு வெள்ளைப் பூச்சாண்டி வந்தது. கூடவே இரண்டு கறுப்பினத்தவரும் வந்தார்கள். அவர்கள் தடியால் அடித்து அவனை மயங்க வைத்து, இழுத்துச் சென்றுவிட்டார்கள். ஒரு கப்பலில் ஆடு, மாடுகளைப் போலக் கறுப்பின மக்களை அடைத்து வைத்துக் கடலில் மேற்கு திசையில் அழைத்துப் போனார்கள் வெள்ளைக்காரர்கள்.
கப்பலின் கீழ்த்தளத்தில் தாங்க முடியாத வலியுடன் குண்ட்டா மற்ற கறுப்பின மக்களுடன் படுத்துக் கிடந்தான். சுற்றிலும் கும்மிருட்டு. ஒழுங்காகச் சாப்பிட முடியாது, கழிப்பறையும் கிடையாது. வெள்ளைக்காரர்களின் கொடுமைப்படுத்துதல் கப்பலிலேயே தொடங்கிவிட்டது. கறுப்பின மக்கள் தங்கள் மொழியில் பேசி, வெள்ளைக்காரர்களைத் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்தார்கள். அதற்குள் ஒரு கறுப்பினத்தவன் அவசரப்பட, திட்டம் தவிடு பொடியாகி வெள்ளையர்களை எதிர்க்க முடியாமல் போனது. கடலுக்குள் குதித்தாலோ, மீன்கள் தின்றுவிடும்.
நாவலாசிரியர் அலெக்ஸ் ஹேலி
இப்படிப் பல்வேறு கொடுமைகளைக் கடந்து கடைசியாகக் கப்பல் சென்று சேர்ந்த இடம் அமெரிக்கா. அதற்குப் பிறகு நடக்கப்போவதுதான், ஏற்கெனவே நடந்ததைவிட மிக மோசமானது. சந்தையில் ஆடு, மாடுகளைப் போல ஏலம் விடப்பட்டுக் கறுப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். குண்ட்டாவும் விற்கப்பட்டான். அவன் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. போகும் வழியெல்லாம் கறுப்பின மக்கள் வயலில் வேலை செய்வதை அவன் பார்த்தான். அவர்களுடைய கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. குதிரையில் சவுக்குடன் உட்கார்ந்து வெள்ளைக்காரர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். யாரும் தப்பிச் செல்ல முடியாது.
குண்ட்டாவை வாங்கிய வெள்ளைக்காரனின் வீடு வந்தவுடன் கைவிலங்கு அவிழ்க்கப்பட்டதுதான் தாமதம், குண்ட்டா ஓட ஆரம்பித்தான். வேட்டை நாய்கள் அவிழ்த்துவிடப்பட்டு, அவன் விரட்டிப் பிடிக்கப்பட்டான். தலைகீழாகத் தொங்கவிட்டுச் சவுக்கால் அடித்தார்கள். குண்ட்டாவின் காலின் ஒரு பகுதியை வெட்டிவிட்டார்கள். குண்ட்டா மயங்கிச் சரிந்தான். குண்ட்டாவை வாங்கிய வெள்ளைக்காரனின் அண்ணன் ஒரு டாக்டர், அவன் குண்ட்டாவுக்கு சிகிச்சையளித்துத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான்.
டாக்டரின் வீட்டில் பெல் என்ற கறுப்பினச் சமையல்காரி இருந்தாள். அவள் குண்ட்டாவைப் பார்த்துக் கொண்டாள்.
பெல்லிடம் இருந்துதான் குண்ட்டா பல விஷயங்களைத் தெரிந்துகொண்டான். கறுப்பின மக்கள் தப்பிக்க நினைப்பது முட்டாள்தனம். அன்றைய அமெரிக்கச் சட்டப்படி மனிதர்களாக இருந்தாலும் கறுப்பின மக்களை வெள்ளைக்காரர்கள் அடிமையாக விற்கலாம், வாங்கலாம். தப்பிக்க முயல்பவர்களைச் சுட்டுவிடலாம். கனடாவுக்குப் போனால் மட்டும் தப்பிக்கலாம். அங்கே அடிமைச் சட்டம் கிடையாது. ஆனால், அது ரொம்ப கஷ்டம். ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் போவது பற்றிக் கனவிலும் நினைக்க முடியாது.
குண்ட்டாவுக்கு வேறு வழியில்லை. அவனைக் காப்பாற்றிய டாக்டரின் வண்டியோட்டியாக மாறினான். வண்டியோட்டுவதன் மூலம் நாலு இடத்துக்குப் போகலாம் என்றாலும், அவன் அடிமை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. போகும் இடமெல்லாம் கறுப்பின மக்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதுபோல அவர்களை சுற்றி வந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பில் வெள்ளைக்காரர்கள் செல்வத்தைச் சேர்த்துக்கொண்டிருந்தனர்.
சுரைக்குடுவையில் தொடர்ந்து போட்டுவந்த கற்களைக் குண்ட்டா ஒரு நாள் எண்ண ஆரம்பித்தான். ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவனுடைய வயது 17. இப்போது இரண்டு மடங்காகி 34 வயதாகி இருந்தது. பெல்லைத் திருமணம் செய்துகொண்டான். கறுப்பர்கள் எழுதப் படிக்கத் தடை இருந்தது; புத்தகங்களையும் வைத்திருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் கறுப்பர்கள் தங்களுக்குள் ஆப்பிரிக்க மொழியைப் பேசிக்கொள்ளக் கூடாது. குண்ட்டாவுக்கும் பெல்லுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவளுக்கு ஆப்பிரிக்கப் பெயர் வைப்பதற்குக்கூடத் தடை இருந்தது. கடைசியில் கிஜ்ஜி என்று மகளுக்குப் பெயர் வைத்தார்கள்.
கிஜ்ஜி வளர வளர, அவளுக்குத் தன்னுடைய கதையை, தன்னுடைய மூதாதையர்களின் கதையைக் குண்ட்டா கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னான். ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுத் தான் பட்ட கஷ்டங்களைச் சொன்னான். அடிமைகளின் வாழ்க்கை விதிமுறைகளுக்கு ஏற்ப கிஜ்ஜியும் அப்பா, அம்மாவுடன் தொடர்ந்து வாழ முடியவில்லை. வலிந்து பிரிக்கப்பட்டு, வேறிடத்தில் அடிமையாக அவள் விற்கப்பட்டாள்.
அவளுக்குப் பிறந்த மகன் ஜார்ஜ் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவன். அவனுக்கும் தன்னுடைய மூதாதையர்களின் ஆப்பிரிக்க வம்ச வரலாற்றைச் சொன்னாள் கிஜ்ஜி. ஜார்ஜின் மகன் டாம், நான்காவது தலைமுறை. அந்தத் தலைமுறை பிறந்த பிறகு, அமெரிக்க அதிபராக ஆப்ரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார். அவர் காலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. இருந்தாலும் வம்ச வரலாற்றைச் சொல்வதை மட்டும் குண்ட்டா வம்சத்தினர் நிறுத்தவேயில்லை.
அடுத்தடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்திக்கொண்டே இருந்தார்கள். டாமின் மகள் சிந்தியா ஐந்தாவது தலைமுறை, சிந்தியாவின் மகன் பெர்த்தா ஆறாவது தலைமுறை, பெர்த்தாவின் மகன் அலெக்ஸ் ஹேலி ஏழாவது தலைமுறை. அவர்தான் இந்த நூலின் ஆசிரியர். தன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்திலிருந்து, தொடர்ந்து வரும் தன் வம்ச வரலாற்றைத்தான் அவர் நாவலாக வடித்துள்ளார்.
நன்றி – இந்து தமிழ் திசை
Reviews
There are no reviews yet.