ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்
காலத்தை வென்றக் கதைவேந்தர்
இலக்கிய உலகில் உள்ள பெரும்பான்மையினரைக் கவர்ந்தப் பெருமைக்குரியவர் ஆன்டன் செக்காவ். படைப்பாளர்கள் மட்டுமின்றி கதைகளைச் சுவைக்கும் எவரையும் எளிதில் ஈர்க்கும் ஆற்றலுடைய எழுத்துக்கலை வித்தகர். ரஷ்யாவில் பிறந்தவராயினும், மொழித்தடை கடந்து, கால இடைவெளியினை வென்று, பண்பாட்டு வேறுபாடுகளை மீறி ,உலகளவில் அதிக வாசகர்களைப் பெற்ற எழுத்தாளராக விளங்க அவருடையக் கதைகளில் மிளிரும் எதார்த்தம், மனிதம் ஆகியவை முக்கியக் காரணமாகும்.
எளிமையானத் தோற்றத்தில் இருக்கும் செக்காவின் கதைகள் தாம் விவரித்துச் செல்லும் சமூகக்காட்சிகள் முலம் அவற்றை வலிமையான முறையில் சாடும் திறனையுடையவை. ஒரு சில மாற்றங்கள் செய்து பார்த்தால், அவற்றில் இடம் பெற்றுள்ள கதை மாந்தர்களில் பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். ஓரிரு இயல்புகள் நம்மிடமே இருப்பதைக் கண்டு வியப்போம்.
நகைச்சுவை இழையோடும் அவருடையக் கதைகள் சமூக அவலங்களைச் சாடவும் தயங்குவதில்லை. கதை வெளியாகி நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், இன்றளவும் தொடரும் அத்தகையச் சமூகக்கேடுகள் தான் அவருடையக் கதைகளை நவீனத் தன்மையுடன் எம்மொழியிலும் உலாவர உதவுகின்றன என்பதோர் அவல முரணாகும்.
செக்காவின் கதையினை வாசிப்பதோடு நிறைவடையாமல் அதன் பின் நண்பர்களுடன் பகிர்ந்து அது குறித்து விவாதித்துப் பாருங்கள். ஒவ்வொரு கதையிலும் அதில் புதைந்துள்ள பொருள் பொதிந்த பல செய்திகள் விளங்கும். மனித நேயம் ததும்பும் தன் கதைகள் மூலம் இதயத்தைத் தொடும் செக்காவ் தமிழ் வாசகர்களுக்கும் பலச் செய்திகளைத் தருகிறார்.
ப. தாணப்பன் –
#ஆன்டன்செகாவ்
#ஆகச்சிறந்தகதைகள்..
ஆன்டன் செகாவைக் கொண்டாடுவாம் என்ற மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையோடு துவங்குகின்றது கதைத்தொகுப்பு. நகைச்சுவை மிக்க படைப்புகளைத் தந்த செகாவின் வாழ்க்கைப்பாதை கரடுமுரடானதே. எல்லா எழுத்தாளர்களுடைய வாழ்க்கைப்பாதையும் இவ்வாறு இருப்பது என்ன ஒற்றுமையோ என்ற விந்தைக்கு இன்னும் நமக்குத்தான் பதில் கிடைத்த பாடில்லை.
புதுமைப்பித்தன் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்த காலத்தில் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு நிறுத்தத்தில் வெத்திலை புகையிலையோடு புத்தகமொன்றை வாங்குகின்றார். அதே வெத்திலை புகையிலையை வாயில் இட்டுக் கொண்டு உடனே வாசிக்கத் துவங்குகின்றார். அது ஆன்டன் செகாவின் கதைகள் தொகுப்பு என்று சிதம்பர ரகுநாதன் கு.அழகிரிசாமிக்குச் சொல்ல அவர் தனக்குச் சொன்னதாக கிரா சொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்..
மொத்தம் 12 சிறந்த கதைகளின் தொகுப்பு இது.. ஒவ்வொரு கதையும் ஒன்றிலிருந்து மன்றொன்று மாறுபட்டது.
வீட்டில் என்றொரு கதை..டோமா எனும் பெயரில் 1887ல் நியூ டைம்ஸ் இதில் வெளி வந்ததாம். செகாவின் தொகுக்கப்பட்ட எல்லா கதைத் தொகுப்பிலும் இக்கதை கட்டாயம் இருக்குமாம். லியா டால்ஸ்டாய் மிக முக்கியமான கதை என்று இதனை சொல்கிறார்..
வாசித்துப்பார்த்தால் உணர நேரிடுகிறது. ஏழு வயது சிறுவன் அவன் சிகரெட் புகைக்கிறான். அம்மா கண்டு அப்பாவிடம் சொல்கிறாள். அப்பா வழக்கறிஞர். யைனோ சுட்டி, வரைவதில் வல்லவன். கேள்வி கேட்டால் தெளிவாகப்பதில் சொல்லக் கூடியவன். அழைத்து புகைக்கக் கூடாது என்கிறார். அவன் அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவன் போக்கில் போய் சொல்ல வேண்டும் என்று தெரிகிறது. எப்படி என குழம்புகின்றார். அவனாகவே இரவு படுக்கப் போகும் முன் கதை சொல்லக் கேட்கிறான். தோன்றுவதை கோர்வையாகச் சொல்லத் தெரிந்த அப்பா ராஜா கதை சொல்லி இளவரசன் புகைபிடிப்பதனால் இறக்கிறான். ராஜ்ஜியத்தை, அரண்மனையை, பூங்காவை, மக்களைப்பாதுகாக்க ஆளின்றி போகிறது என்று சொல்லி முடித்தவுடன் அப்பா..! இனி நான் புகைக்க மாட்டேன் என்கிறான் பையன். தன் வக்கீல் தொழிலோடு நினைத்துப் பார்க்கிறார். ஆதாம் காலத்திலிருந்தே முட்டாள்தனமான எண்ணமாக மனிதனிடம் இருந்து வருகிறது. இருந்தாலும் இயற்கையோடு ஒன்றி இருப்தாலும் சூழ்நிலைக்கேற்ற அனுகூலங்களையும் ஏமாற்றங்களையும் இயற்கையே தருவதால் வெற்றி கொள்கிறது என்று முடித்திருப்பார். இன்றளவிற்கும் பொருந்துவதில் வியப்பேதும் இல்லை.
கொஞ்சம் அதிகம் என்றொரு கதையை சவடால் விடும் அரசு அதிகாரியின் பயணத்தினை சொல்லி வண்டிக்காரனின் மூலம் நகைச்சுவையையும் அள்ளித் தெளிக்கின்றார்.
கலைப்பொருள் எனும் கதையில் தன்னைக் காப்பாற்றியதற்காக சிறுவன் ஒருவன் டாக்டருக்கு அன்பளிப்பு ஒன்றைத்தருகின்றான். கலையம்சம் கொண்டிருந்தாலும் அதனை வீட்டிற்குள் வைக்க யோசித்து வக்கீல் நண்பரிடம் கொடுத்து அவர் நாடக நண்பரிடம் கொடுத்து பின்பு அந்த பையன் அம்மா நடத்தும் பழைய கடைக்கே திரும்பி வருவதும் அதுவே முன்பு கொடுத்ததன் ஜோடி என மருத்துவரை மீண்டும் பார்க்க வர..
இக்கதையில் சிரித்து மீள இயலவில்லை.
அசடு என்றொரு கதையினில் நாம் எவ்வாறு வேலை செய்யும் இடங்களில் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை இயல்பாகச் சொல்லியிருக்கின்றார். பதற்றத்தில் தான் அணிந்திருந்த ஆடையின் மடிப்புகளை இழுப்பதும் விடுவதுமாக.. இப்படித்தானே தொன்று தொட்டு நாம் செய்கின்றோம். இந்த உலகில் அடக்கி ஆள்வது சுலபம் என்ற முத்திரையோடு முடித்திருப்பார்..என்னே ஒரு அனுபவப்பதிவு…
முதல் வகுப்புப்பயணிகள் எனும் கதை…மிகச்சிறந்த வேதியல் துறையியலாளர். புத்தகங்களில் அவர் பெயரைக் காணலாம். ஒரு பாலத்தைக்கட்டிய பொறியலாளரும் கூட.. பெரிய நகரங்களில் கூப்பிட்டுப் பேசவும் வைத்திருக்கின்றார்கள். இருப்பினும் அவரைத் தெரியவில்லை என அங்கலாய்க்கிறார். ஆனால் நான் விரும்பி கூட்டிக்கொண்டு போகும் நடிகையின் பூர்வீகத்தையே தன்னைவிட அதிகமாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றார். தவறான மனிதர்களைத் தெரிந்து வைத்திருக்கும் உலகம் ஒரு இலக்கியவாதியையோ எழுத்தாளரையோ, கவிஞரையோ தெரிந்து வைத்திருப்பதில்லை என்ற வேதனையுறும் போது உடன் பயணிப்பவர் ஒரு பெயரைச் சொல்லி தெரிகிறதா எனக் கேட்கிறார்.. தெரியாது என்று சொல்லும் போது அவர் தாம் தான் என்றும் 35 வருடங்களாக பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்கிறேன் என்று சொல்வதாக முடித்திருப்பார்.1886ம் ஆண்டே அப்படித்தான் எனும் போது தற்போதும் அவ்வாறு இருப்பது வேதனையா இல்லையா.?நாம்தான் சொல்ல வேண்டும்.
ராஜதந்திரி..எனும் கதை..
கணவனைப் பிரிந்து வாழும் மனைவி இறந்து விடுகின்றாள். தற்செயலாக விளைந்த மோகத்தால் பிரிந்த அவளிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டும் மன்னிக்காதவள் அவள். அவளின் இறப்பைச் சொல்லச் செல்லும் இராணுத்தளபதி.. எப்படி அந்த துக்கச் செய்தியைச் சொல்கிறான். சொல்ல அவன் படும் வேதனைகள்.. அதற்கு படும் பாடுகள்..அவள் கணவனின் பிரதிபலிப்பு பின் அடையும் மயக்கம்..கடைசியில் சொல்ல இயலவில்லை என்று வருந்தும் அதே ராணுவத்தளபதி…கண்களை குளமாக்கியது இக்கதை…1885ம் ஆண்டு எழுதிய கதை இன்னமும் நம் கண்களை குளமாக்குகிறது என்றால் அந்த எழுத்து செகாவைத்தவிர வேறு யாருக்கும் வசப்படாது என்றே எண்ணத் தோன்றுகிறது..
#ஆன்டன்செகாவ்
#ஆகச்சிறந்தகதைகள்…
#தமிழில்..
#சுஆவெங்கடசுப்புராயநாயகர்..
#தடாகம்வெளியீடு
விலை: ரூ.100
பக்கங்கள்: 104
Poonkodi Balamurugan –
புத்தகம்:ஆன்டன்செகாவ் ஆகச்சிறந்த கதைகள்.
தமிழாக்கம்:சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர்.
செகாவின் மீது பனிபெய்கிறது என்ற எஸ்.ரா அவர்களின் நூலைப் படித்ததுதான் செகாவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். செகாவின் எழுத்துக்கள் மிகவும் நகைச்சுவை மிக்கவை. சிறுகதைகள் எழுதுவதன் முன்னோடி செகா என்றால் மிகையாகாது. சொல்லப்போகின்ற விஷயத்தை கூர்மையாய் நுண்ணுணர்வு கலந்து சுருக்கமாக சொல்வது தான் சிறுகதை . அது செகாவின் கதைகளில் நிறைந்திருப்பதை ஒவ்ீவாரு கதையிலும உணர முடிகிறது.
12 சிறுகதைகளின் தொகுப்புதான் இந்நூல். முதல் சிறுகதையே அட்டகாசமா இருக்குது. பேச்சாளர் கதையோட தலைப்பு. வருமானவரித்துறை ஆய்வாளர் கிரிஸ் இவாநோவிச் இறந்து போய்விடுகிறார். தற்போது நாட்டில் பரவலாக உள்ற இரண்டு நோய்களால் அவர் மாண்டு விடுகிறார்.ஒன்று குடிப்பழக்கம் . மற்றொன்று சண்டை போடும் மனைவி என ஆரம்பத்திலேயே ஹாஸ்யமாய் ஆரம்பிக்கிறார். இது நகைச்சுவை போல தோன்றினாலும் எவ்வளவு உண்மை. எப்போதும் சண்டை பிடிக்கும துணையால் நிம்மதியிழந்து ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்பது எவ்வளவு உண்மை. அந்த நகரில் ஒரு பழக்கம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சொற்பொழிவு ஆற்றுவது. சொற்பொழிவாற்ற சாப்போய்க்கின் என்ற நபரை அவனது நண்பன் அழைத்து வருகிறான். அவன் எப்பேர்ப்பட்ட நிகழ்ச்சியிலும் முன் தயாரிப்பின்றி மடை திறந்த வெள்ளம் போல் பேசுவானாம். சவ ஊர்வலம் மெதுவாகசெல்வதால் வழியில் மூன்று இடங்களில் மதுபானக் கடைக்குள் சென்று வருகிறார்களாம் இருவரும். மயானத்தில் இறுதிசடங்குகள் தொடங்குகின்றன..
இறந்த மனிதனைப் போன்று உண்டா ? அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாததது; நல்லவர் ; வல்லவர் என்று அடுக்குமொழி பேச்சால் அனைவரையும் கட்டி இழுக்கிறான். அவர் நேர்மையானவர் என்றும் , பிரம்மசாரியாய் வாழ்ந்தவர் என்ற சொல்கின்ற போது கூட்டத்தில் சிறு சலசலப்பு .எப்போதும் முகச்சவரம் செய்து க்ளீனாக இருப்பார் ப்ரோகோசி ஓசிபிக் என்ற போது அனைவருக்கும் உண்மை புரிந்தது.அவன் முன்னாள் ஆய்வாளரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறான் என..அந்த குறிப்பிட்ட நபரும் அதே இடத்தில் இருக்கிறார்..ஒரு குடிகாரன் எவ்வளவுசமார்த்தியமாய் உயிரோடு இருப்பவனைப் புதைத்துவிட்டானே…இந்த கதையை கற்பனையில் ஓட்டிப் பார்க்கும் போு நம்மால் சிரிப்பை அடக்கவேமுடியாது..
அடுத்து துறவி என்றொரு கதை. வாழ்க்கையை வெறுத்து ஆன்மீகத்தை வளர்க்க நினைக்கும்துறவிகள் நடுக்காட்டில் மடத்தைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தலைமைத் துறவி எப்போதும் ஆர்கன்இசைக்கருவி வாசித்துக் கொண்டிருப்பார் . அந்த இசைதான் அவர்களுக்கு ஒரு இளைப்பாறல்..ஒரு சமயம் வேட்டைக்கு வரும மனிதன் வழிதவறி மடத்துக்குவந்து விடுகிறான். நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கேட்டவுடன் அங்கிருப்பவர்களை சாத்தானின் பிடியிலிருந்து காப்பாற்றி வருகிறேன்னு பெரிய துறவி போறார்..போனவர் மூன்று மாதம் கழித்து வருகிறார். வந்தவர் சோகத்தோடு நகரத்தில் பார்த்தவற்றை வருணிக்கிறார். அங்கிருக்கிற மனிதர்கள் மதுவை அருந்தி போதையேறி பேசத் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள நடுவே அரை நிர்வாணமாய் ஒரு பெண்ணொருத்தி தன் அழகை காட்டி நடனமாடிக் கொண்டிருக்கிறாள் என்று வருணித்தேக்கொண்டிருக்கிறார். சாத்தான் ஆக்கரமித்தை அவர்களை திருத்தவே முடியாது என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய் தூங்கி விடுகிறார்..காலையில் எழுந்த பார்த்தா ஒரு துறவியும் இருக்கமாட்டாங்க.எல்லோரும் எங்கே போய்இருப்பாங்க? வேறெங்கே நகரத்தை நோக்கித்தான்…
வீட்டில் என்றொரு சிறுகதை. முதலில் டோமா என்ற பெயரில் வெளிவந்ததாம். இந்த கதை செகாவின் மிக முக்கியமான கதை என்று டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார். சிகரெட் புகைத்த சின்னஞ்சிறு மகனை வழக்கறிஞர் தந்தை திருத்த முயற்சிப்பது. என்ன சொல்லியும் திருந்தாத மகன் கதையின் வாயிலாக சொல்லும் போது திருந்துவதாக சொல்வது கதைசொல்லலின் முக்கியத்துவத்தை நமக்கு சொல்கிறது.
அடுத்து கலைப்பொருள் எனனறொரு சிறுகதை ..இதை படித்து பயங்கரமா சிரித்து விடுவோம். மருத்துவர் கோஷல் ஒரு ஏழைத்தாயின் ஓரே மகனன சாஷா ஸ்மிர்நோவை நோயிலிருந்து காப்பாற்றி விடுகிறார். அவருக்கு பரிசாக ஒரு வெண்கல கலைப்பொருளைத் தருகிறான். அது வெண்கல கொத்துவிளக்கு அதன் பீடத்தில் இரு பெண்கள்நிர்வாணமாய் நிற்பது போல இருக்கும். அதை அங்கு வைத்து கொள்ள சங்கடப்பட்ட மருத்துவர் வழக்கறிஞர் நண்பருக்கு தர அவர் நகைச்சுவை நடிகரான இன்னொரு நண்பருக்கு தர , அவரோ அதைய பழைய பொரூட்கள்வாங்கும்கடையில் விற்கிறான். அந்த கடை யாருடையதாக இருக்கும்னு நினைக்கிறீங்க? அந்த ஏழைத்தாயின் மகனுதுதான். அவனோமருத்துவருக்கு ஒத்தையாய் கொடுத்த விளக்குக்கு ஜோடியாய் இன்னொன்று கிடைச்சிருச்சுச்சுன்னு கொண்டு வந்து கொடுக்கிறான். செந்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் பூக்கூடையில் பாம் வைச்சு பரிசா கொடு்க்க சுத்தி சுத்தி கடைசியா செந்தில் கிட்ட வந்து சேர்ற காமெடி நினைவுக்குவரும் நமக்கு.
இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நுண்ணுணர்வைக்கொண்டிருக்கும். படித்தவுடன் மறக்கும் வகை கதைகள் அல்ல. கண்டிப்பாக நம் மனதில் பல சிந்தனைகளை கிளறி விடும் என்பது உண்மை…