தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.
தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.
என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!
எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.
சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.
ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.
இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.
இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.
ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.
திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.
நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.
இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.
நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.
இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.
Reviews
There are no reviews yet.