புகழோடு தோன்றுக!

Publisher:
Author:

Original price was: ₹90.00.Current price is: ₹83.00.

புகழோடு தோன்றுக!

Original price was: ₹90.00.Current price is: ₹83.00.

புகழோடு வாழ்ந்திடுக !
விழியன்.

(கதிர்ராத்தின் ‘புகழோடு தோன்றுக’ புத்தகத்திற்கான முன்னுரை)

மனப்பாடமாய் எதனை வைத்தாலும் நம்மாட்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிடுவோம். அது எத்தனை சுவையானது,
தேவையானது, உண்மையானது என்றாலும் அந்த தெறிப்பும் வெறுப்பும் தானாகவே வந்துவிடும். செய்யுள்கள் பலவும் அப்படியே நம்மை
சின்ன வயதில் ஓடவைத்துள்ளன. திருக்குறளும் அப்படியே. ஈரடி என்றாலும் மனப்பாடம் என்றதால் அவை மீது மிகப்பெரிய வெறுப்பே
மிஞ்சின. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது தான் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்ததும் தான் திருக்குறளினை உலகமே எப்படி
கொண்டாடுகின்றது என்று புரிந்தது. ஆனாலும் ஒரு பெரும் பிரச்சனை திருக்குறளை தினசரி வாழ்க்கையுடன் பொருத்திப்பார்ப்பது தான்.
இசைக்கவி இரமணனின் திருக்குறள் வகுப்புகள் பெரும் தெளிவினையும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தின. ஒரு குறளினைப்பற்றி விளக்க
இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்வார். எல்லாம் சொல்லி முடித்த பின்னர் குறளினை வாசிப்பார். ஒரு வீடியோ காட்சிபோல அந்த
குறள் ஓடும். ‘விருந்தோம்பல்’ அதிகாரம் பற்றிய அந்த வகுப்புகள்தான் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றோம்,
அதனை இன்றும் எப்படி தினசரி வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்வது என்ற தெளிவினை கொடுத்தது.

திருக்குறளினை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அது உலகப்பொதுமறை. இன்றும் அதில்
சொல்லப்பட்டிருப்பவை உயிர்ப்புடனே இருக்கின்றது. வெறும் குறளினையும் உரையினையும் வாசித்தால் எல்லோருக்கும் புரிந்துவிடாது
என்பதே நிதர்சனம். சில சமகால புலவர்கள் திருக்குறளினை அவர்களின் வார்த்தைகளில் சொல்ல முயன்றுள்ளார்கள். குழந்தைகளுக்கு
கார்ட்டூன் வடிவிலும் திருக்குறளினை கொண்டு சேர்க்கின்றார்கள். பெரும்பாலும் வலிந்து திணித்திருப்பதாகத் தோன்றும். மேலும்
புகழ்பெற்ற சொல்லிச் சொல்லி பழகிப்போன குறளினை ஒட்டியே கதைகளும் கதாகலாட்சேபமும் அமைந்திருக்கும்.

கதிர் ராத்தின் ’புகழோடு தோன்றுக’ புது மாதிரியாக திருக்குறளை மக்களின் மத்தியில் கொண்டு செல்லும் முக்கியமான முயற்சியை
மேற்கொண்டுள்ளார். இவை கட்டுரைத்தொகுப்பா என்றால் முழுக்க முழுக்க கட்டுரைகள் அல்ல, பல கதைகள் உண்டு, உரையாடல்கள்
வழியே கதைகள் உண்டு, நம்மை கேள்விகள் கேட்டே நம்மிடம் இருந்து விடைகள் பெற்றே திருக்குறளிடம் நம்மை நகர்த்துகின்றார்.
அனைவருக்கும் கைவந்திடாத உத்திகள் இவை. கதிருக்கு அது கச்சிதமாக கைவந்திருக்கின்றது.

புத்தகம் வாசிக்க வாசிக்க திருவள்ளுவர் என்ற ஆளுமை உயர்ந்துகொண்டே செல்கின்றார். கூடவே கதிரும் தான். திருக்குறளினை கதைகளாக கட்டுரைகளாக மாற்றும் பாதையில் கதிர் என்ற ஆளுமையும் வெளிப்படுகின்றார். கூர்மையாக நோக்கும் பார்வை, சமகால உலக நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், சமகால எழுத்துக்களின் வாசிப்பு, கண்ணுக்குத்தெரியாத எளிய மனிதர்களின் கவலைகள், எளிய மனிதர்களின் வலிகள், பலதரப்பட்ட ஊர்களில் பலதரப்பட்ட மக்களினை எழுத்திற்குள்ளே லாவகமாக கொண்டு வருகின்றார். ஒரு தெளிந்த ஓடைபோல சலசலவென்று வாசிப்பு செல்கின்றது.

‘புகழோடு தோன்றுக’ புத்தகத்தினை வாசிக்கையில் பல கதைகளுக்கு நடுவே வந்ததும் எப்படி திருக்குறளோடு இதனை முடிச்சுப்போடப்போகின்றார் என்ற ஆவலுடனே மீதிப்பகுதியும் வேகமாக ஓடிவிடும். அனாவசியமாக முடிச்சிபோட்டு திருக்குறளை தொடர்புபடுத்துகின்றார். இது தான் இந்த புத்தகத்தின் சிறப்பசமாக கருதுவது. இல்லாத ஒன்றினை நம்மால் எளிதாக கற்பனை செய்து பார்க்க இயலாது. கணிதம் ஒரு நல்ல உதாரணம், சூத்த்ரங்களை நாம் பார்க்க முடியாது, செய்து பார்க்க முடியாது, தொட்டுப்பார்க்க முடியாது, ஆனால் அறிவியல் அப்படியல்ல பெரும்பாலும் பார்த்தோ, செய்துபார்த்தோவிடலாம். திருக்குறள் நமக்கு வெகுதொலைவில் இருந்ததற்கு காரணம் நம் தினசரி வாழ்வில் அதனை தொடர்புபடுத்தி பார்க்கமுடியாமை தான். இந்த புத்தகம் அந்த வெற்றிடத்தினை நிச்சயமாக நிரப்புகின்றது.

அப்படிவே மெல்ல மெல்ல எல்லா குறள்களுக்கும் கதைகளையும் கட்டுரைகளையும் கதிர் ராத் உருவாக்கிவிட வேண்டும். அதற்கு காலமும், சூழலும் வாய்த்திட வேண்டும்.

இந்த புத்தக முயற்சியினை மேற்கொண்டுள்ள ‘கலக்கல் டிரீம்ஸ்’ நண்பர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும், எழுத்தாளர் என எல்லோரும் புகழோடு வாழ்ந்திட வாழ்த்துக்களும் அன்பும்.

விழியன்
துண்டலம், சென்னை77
மே,9,2018

Delivery: Items will be delivered within 2-7 days