தமிழாற்றுப்படை:
தமிழர்களும், பிறமொழியாளர்கள் ஏன் தமிழ் பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தின், கிரேக்கம், ஐரோப்பிய, ஆரிய நாகரிகங்களுக்கு இணையான அல்லது சற்றே மேம்பட்ட திராவிட நாகரிகம் தெளிவதற்கும், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மூதாதையரோடு உரையாடுதற்கும், இந்த பூமியின் பழைய காற்றையும் வெப்பத்தையும் உள்ளும் புறமும் உணர்வதற்கும், கருத்துக் கருவியாகிய மொழியை ஓர் இனம் கலைக்கருவியாக்கிய கலாசாரம் காண்பதற்கும், ஒரு தென்னாட்டு இனக்குழு கிறித்துவுக்கு முன்பே உலகப்பண்பாட்டுக்கு அள்ளிக் கொடுத்த அறிவுக்கொடை துய்ப்பதற்கும், மனிதகுலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியை நம் தொப்புள்பள்ளம் உணர்வதற்கும், அந்த பெருமிதத்தில் நிகழ்காலம் நிமிர்வதற்கும், எதிர்காலம் நிலைப்பதற்கும் ஒரு மாந்தன் தமிழ் கற்கலாம்.
– வைரமுத்து
Kathir Rath –
தமிழாற்றுப்படை
கவிஞர் வைரமுத்து
இந்த புத்தகத்திற்கு தனியாக அறிமுகம் தேவையா? அல்லது எழுத்தாளருக்குத்தான் தேவையா? ஊர் நடுவில் இருக்கும் உயர்ந்த கோபுரத்திற்கு வழிகாட்ட வேண்டுமா?
தமிழாற்றுப்படை வரிசையாக தமிழ் புலவர்களை, தமிழறிஞர்களை ஒவ்வொரு மேடையாக ஏறி கவிஞர் அறிமுகப்படுத்திய காலத்திலேயே இந்த நூல் வந்தால் படித்து விட வேண்டும் என்று இருந்தேன். குறிப்பாக ஆண்டாள் பிரச்சனை வந்த பொழுது எங்கே நூல் வெளியீடு ரத்தாகி விடுமோ என்று கூட பயந்தேன். இந்நூல் சென்னையில் வெளியாகும் பொழுது அதே ஊரில் இருந்தும் நிகழ்ச்சிக்கு போக முடியாத சூழல், ஊரெங்கும் போஸ்டர். ஆற்றாமை தாளாத தினம் அது.
கவிஞரின் அனைத்துப் புத்தகங்களையும் போல இதுவும் விலை சற்று அதிகம்தான். கிண்டிலில் வந்த பிறகு வாசித்துக் கொள்ளலாம் என்றுதான் இருந்தேன். எதிர்பாராத விதமாக ஒரு தோழியின் பரிசாக கிடைத்தது. அகமகிழ்ந்தேன். அனைத்து புத்தகங்களையும் விரைவாக வாசிக்க விரும்புபவன் இதை மட்டும் மிக மெதுவாக ரசித்து படிக்க திட்டமிட்டேன்.
புத்தகத்தில் 24 தமிழ் ஆளுமைகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள். ஒரு நாளுக்கு ஒரு கட்டுரை மட்டும் படித்து விட்டு அந்த ஆளுமை தொடர்பாக வேறு ஏதாவது இணையத்தில் படிப்பதை வழக்கமாக கொண்டேன். அது நல்ல அனுபவமாக இருந்தது.
தமிழில் இப்படி ஒரு வரிக்கு வரி ரசிக்கத்தக்க மொழி அளுமைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை வந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் வந்த ஒரு வருடத்திற்குள் 10 மறுபதிப்பு கண்டு விட்டது. கவிஞர் சில விற்பனை தந்திரங்களை செய்யக்கூடியவர்தான். ஆனாலும் இந்த புத்தகம் மிக மிக அருமையாக இருந்தது.
தொல்காப்பியரில் தொடங்கி கவிக்கோ அப்துல் ரகுமான் வரை, நூற்றாண்டுக்கு ஒரு ஆளுமை.
இலக்கணத்திற்கு தொல்காப்பியர்
சங்க இலக்கியங்களுக்கு கபிலர், அவ்வையார்
காப்பியத்திற்கு இளங்கோவடிகள், கம்பர்
மொழி ஆராய்ச்சிக்கு கால்டுவெல்
சைவ வைணவத்திற்கு அப்பர் ஆண்டாள்
தனித்தமிழிற்கு மறைமலையடிகள்
அதற்கு விதையாக வள்ளலார்
புரட்சிக்கு பாரதி, பாரதிதாசன்
புதுக்கவிதைக்கு கவிக்கோ
திராவிடத்திற்கு பெரியார், அண்ணா, கலைஞர்
என இரண்டாயிரம் ஆண்டு தமிழ்/தமிழக வரலாற்றை ஒரு நூலுக்குள் அடைக்க பார்க்கிறார்.
இதற்காக அவர் செலவிட்ட காலம் 4 ஆண்டுகள். ஒரு ஆளுமையை பற்றி ஆய்வு செய்ய வேண்டுமென்றால் அவரின் படைப்புகள், அதற்கு வந்த விமர்சனங்கள் மதிப்புரைகள் என அனைத்தையும் வாசிக்க வேண்டும். இதற்காக செலவிட்ட உழைப்பில் பாட்டெழுதி இருந்தால் இதைவிட அதிகம் பொருள் ஈட்டியிருப்பார்.
அதேபோல் வைரமுத்துவை தவிர வேறு யாராவது இதை செய்திருந்தாலும் இந்தளவு மக்களை சென்றடைந்திருக்காது.
ஒவ்வொரு ஆளுமையை குறித்தும் கவிஞரின் பார்வையில் கவிஞரின் நடையில் வாசிப்பது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது.
தமிழை நேசிப்போர் அனைவர் வீடுகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.