துணையெழுத்து
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம். ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை. வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான முடிச்சுகளைக் கொண்டிருக்கிறது… மனிதர்கள் எத்தனை விதமான மனோபாவம் கொண்டவர்கள்… ஒரு கணம் மகிழ்ச்சியாகவும், மறுகணம் துயரமாகவும் மாறும் மனம்தான் எவ்வளவு ஆச்சரியமானது… இதுபோன்ற எண்ணற்ற எண்ணங்களை நமக்குள் எழுப்புகின்ற இந்தக் கட்டுரைகள் அனைத்தும், நம் நினைவில்..
Kodee –
துணையெழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
நான் இந்த புத்தகத்தைப் படித்து முடித்து ஐந்து நாட்களாகிறது. ஆனால், மதிப்பு சொல்ல முடியாத இப்படியொரு புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவது என்பது என்னளவில் மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு நாளில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி காட்சி தந்து.. மழை பொழிந்தால் கண்ணிலிருந்து மாயமாகும் தூரத்து மலைசிகரம் போலவே வார்த்தைகளும் என்னுள் வந்துவந்து மறைந்தது. ஓடும் துவைப்பான்(washing machine) மீது சீட்டுக் கட்டுகளை அடுக்குவது போல என்னுள் ஏற்படும் ஆச்சரியங்கள் மீதும் நினைவுகள் மீதும் என் எழுத்தை கோர்க்க முயல்கிறேன்.
எண்ணிக்கையற்ற ஒற்றையடி பாதைகளை, ஒரு தேசிய நெடுஞ்சாலை மறைத்து விடுவதைப் போன்று, பிரம்மாண்டம் என்ற ஒற்றை நிகழ்வு எத்தனையோ சிறு சிறு அழகியலை எளிமையாக மரணிக்கச் செய்துவிடுகிறது. திரையரங்கில் அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கியது, பேருந்தில் துண்டைப் போட்டு ஜன்னலோரம் இருக்கை பிடித்தது, மரமேறி மாங்காய் பறித்தது, பம்புசெட்டு குளியல் இப்படி பரந்து விரிந்து இருந்த ஆடுகளத்தை கை விரல்களுக்குள் சுருக்கியது தொழிழ்நுட்ப பிரம்மாண்ட வளர்ச்சின் முதல் வெற்றி. நம் எதிர்கால மனிதர்கள் நம்மை விட சுகமாக இருப்பார்கள்.. ஆனால், நம்மை விட மகிழ்ச்சியாக இருப்பார்களா? என்ற சந்தேகம் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டது.
எஸ்.ரா அவர்களை பற்றி நான் சொல்லுவதை விட நண்பர் kmkarthi kn இன் வார்த்தையில் சொல்லுவது தான் இங்கே சரியாக இருக்கும் “ஒண்ணு எழுதறதுக்காகவே எங்கயாவது அலைவார்.. இல்லைனா எங்கயாவது அலைஞ்சத எழுதுவார்”. ஆனால், இந்த புத்தகத்தில் தான் அலைந்ததை மட்டும் எழுதாமல், அலைந்து வந்த பாதைகளில் கண்ட மனிதர்களை, பெற்ற நண்பர்களை, கிடைத்த அவமானங்களை, கண்ட அதிசயங்களை , காண முடியாத அருவருக்கத்தக்க காட்சிகளை என்று தன் ஒவ்வொரு கட்டுரைகளில் புதுப்புது நிகழ்வுகளை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
நான் எந்த புத்தகத்தைப் படித்தாலும் அதில் புதியதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அந்த வகையில் இந்த புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் நிரம்பி இருந்தன. குறிப்பிட்டு சொல்லுவது என்றால்.. நைனிடால் நகரம், தஞ்சாவூர் அருகில் இருக்கும் நார்த்தேவன்குடிகாடு கிராமத்தில் நடக்கும் பிரகலாத சரித்திரம் கூத்து, மயில்ராவணன் பற்றி தேடி அலையும் நிகழ்வு, அங்கே சந்திக்கும் கலைஞர்கள் மற்றும் அவர்களில் நிலை, தன்னை கண்டதுண்டமாக வெட்டுவேன் என்ற வாசகருடன் எஸ்.ரா வின் சந்திப்பு , முக்கியமாக நான் வியந்தது வேட்டை என்று சொல்லப்படும் நூலகம் போன்ற பல்வேறு புத்தகச் சேகரிப்புக் கூடங்களில் இருந்து புத்தகளை திருடி கொண்டு வந்து கொடுக்கும் கலையைச் செய்யும் கலைஞர் சார்லஸை கண்டுதான். அவன் எஸ்.ரா வை அறையும் பகுதியை படித்தவுடன் எனக்கு “அன்பே சிவம்” படத்தில் நிதானமாக கோவப்படும் கமல்ஹாசனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஏழாவது கட்டுரையான “நதியிலொரு கூழாங்கல்” தன் தாயின் ஆசையை நிறைவேற்ற ரிஷிகேசத்துக்குக் கூட்டி வந்திருக்கும் ஒரு மகனுக்கும், தன்னை இங்கேயே விட்டு சென்றுவிடு என்று சொல்லும் ஒரு தாய்க்கும் நடக்கும் கண்ணீர் உரையாடல் கொண்ட பகுதி. ஒரு தாயின் ஆசைகளை பற்றி எஸ்.ரா ஒரு வரி எழுதி இருப்பார்..
“தாயின் ஆசைகள் வெளிப்படாதவை.
அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகுதான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போலத்தான் அம்மாவின் ஆசைகள் அவை வெளிப்படாமலே ஒளிந்து கிடக்கின்றன..”
இந்த வரிகளைப் படிக்கும் போது ஐந்து வருடத்துக்கு முன் என்னைத் தனிமைப்படுத்திச் சென்ற என் தாயின் உள்ளே நான் காணாமல் விட்ட கூழாங்கற்கள் எவ்வளவு இருந்தனவோ என்ற வேதனை, புத்தகத்தை தூக்கி எறிந்து விட்டு அரைமணி நேரம் தலையணையை என் கண்ணீரில் நனைக்கச் செய்தது.
“புத்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சாலைகள்” என இந்த புத்தகத்தில் வரும் எஸ்.ராவின் வார்த்தையைப் போல இந்த புத்தகம் என் வாழ்க்கையை எதை நோக்கி செலுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான முடிவை என்னை எடுக்க வைத்துள்ளது. இனி அதை நோக்கி நத்தையைப் போல தொடங்கி, யானையைப் போல தொடர்ந்து, விதையைப் போல முடியும் என் பயணத்தை தொடங்க ஆயத்தம் ஆகின்றேன். என் தலையெழுத்தின் ஆரம்ப எழுத்து இந்த துணையெழுத்து..!!
✍️ கோடி
Kmkarthikn –
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்.
#எஸ்_ரா
எனக்கு ஒரு சந்தேகம் இந்த லாக்டவுன் நாட்கள்ல இந்த மனுஷன் என்ன பண்ணிட்டு இருப்பார். எப்படி எங்கயும் போகாம, யாரையும் பாக்காம, பேசாம இந்த மனுஷனால வீட்டுக்குள்ளயே அடைஞ்சு இருக்க முடியுது. ஒன்னு எழுதறதுக்காகவே எங்கயாவது அலைவார் இல்லைனா எங்காயாவது அலைஞ்சத எழுதுவார்.
நடிகர் பார்த்திபன் தேசாந்திரி பதிப்பகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் இவரைப்பத்தி சொன்ன ஒரு விஷயம் – ஒருமுறை என்னோட படத்துக்கு கதை விவாதத்துல பங்கெடுக்கறதுக்காக எஸ்.ரா என் வீட்டுக்கு வந்திருந்தார். இருவரும் காபி குடித்தோம். காபி குடிச்சுக்கிட்டே நான் என் படத்தோட கதையச் சொன்னேன். ஒக்காந்து அமைதியா கேட்டுட்டு இன்னொரு நாள் சந்திக்கலாம்னு கெளம்பி போயிட்டார். திரும்ப ஒருநாள் மீண்டும் சந்திக்கும் போது கதையப்பத்தி ஒன்னுமே சொல்லலையேனு கேட்டேன். அப்போ அவர் நான் காபி குடிச்சிக்கிட்டே சொன்ன கதையை விட்டுட்டு நான் காபி குடிச்சதையே ஒரு கதையா சொன்னார்னு வேடிக்கையா சொல்வார். அந்தளவுக்கு கண்ணில் கண்ட எதையுமே எழுத்துக்குள்ள நிறுத்தற இவரும் ஓவியருக்கு நிகரானவரே. ஒவியர் காட்சியை வண்ணங்களால் படிய வைப்பார் இவர் நிகழ்ந்தவைகளை வார்த்தைகளால் படிய வைக்கிறார். அதற்கு இவர் துணையாய் அழைத்துக் கொள்வது எழுத்தை மட்டுமே.
எழுத்தே துணை – துணையெழுத்து.
#துணையெழுத்து
50க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. எஸ்.ரா அவர்கள் வாழ்வில் கண்ட, கடந்த பல நிகழ்வுகளைத் தொகுத்திருக்கிறார். இந்த புத்தகத்தின் மீது எனக்கு ஆர்வம் வரக் காரணமாக இருந்தது ஒரு யூடியூப் புத்ததக விமர்சகரோட வார்த்தை தான். என்னோட இலக்கியப் பயணத்தை துணையெழுத்துக்கு முன் துணையெழுத்துக்குப் பின் அப்டீனு பிரிக்கலாம்னு கூறியிருந்தார். அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்காக வாங்கி வாசிக்கப்பட்ட புத்தகம் தான் இந்த துணையெழுத்து.
தஸ்த்யேவ்ஸ்கியை வாசிக்கும் போது ஒரு பிரமிப்பு உருவாகும். எப்படி இவரால இப்படி யோசிக்க முடியுது. அந்த சிந்தனையை வாசிப்பவரின் மனசாட்சிகளை கிழித்தெறியும் வகையில் எப்படி எழுத முடியுதுனு நினைக்கத் தோணும். தஸ்த்யேவ்ஸ்கியை வாசிச்சிட்டு நம்ம பெயரை நாம எழுதவே கை நடுங்கும் அந்தளவுக்கு எழுத்தோட வலிமையைச் காட்டியிருப்பார் தஸ்த்யேவ்ஸ்கி. அப்படியே இதற்கு நேர்மாறாக இருப்பவர் தான் எஸ்.ரா. எழுத்தின் எளிமையை சொல்கிறார். ஒரு சாதாரண நிகழ்வை அதைவிட மிகச் சாதாரணமான வார்த்தைகளால் கோர்க்கிறார். இதில் உள்ள கட்டுரைகள் எல்லாம் நாமும் கடந்த வந்த நினைவுகளை ஞாபகப் படுத்துவதே இதனின் சிறப்பு. அதையும் ஒரு ஆசிரியரைப் போல் அல்லாமல் நம் தோள்மீது கைபோடும் ஒரு நண்பனைப் போல் சொல்வது அதனினும் சிறப்பு.
தனிப்பட்டு என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிய கட்டுரை 29வது கட்டுரையான (வளர்ப்பு மிருகங்கள்).
ஒரு பொதுவெளியில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடுவதையோ, கட்டிப்பிடிப்பதையோ பார்த்த மாத்திரத்தில் விமர்சிக்கும் சமூகம் அதே ஒரு பெண் நடுரோட்டில் தாக்கப்படுவதை மௌனமாக வேடிக்கை மட்டும் பார்க்கப் பழக்கியிருக்கிறது. அடிப்பது கணவன் தான் என்று தெரிந்துவிட்டால் இதுவும் ஒரு அன்றாட நிகழ்வு என்பதைப் போல சமூகம் பாராமுகம் காட்டுவது ஏன் எனச் சாடுகிறார். வழக்கம் போல் இதற்கும் காதைப் பொத்தி கடமை ஆற்றிவிட்டேன்.
(நிறமில்லாதொரு குடும்பம்) கடன்கேட்டு தன் பிள்ளைகளை வீடுவீடாக அனுப்பும் குடும்பம். தேஜஸ் அந்த வீட்டின் மூத்தவள். 10 வயது. ஒவ்வொரு வீட்டின் வாசலையும் நெருங்க அவள் அடையும் கூச்சத்தையும், அடைந்ததும் கிடைக்கும் அவமானங்களையும் மீறி தன் அப்பாவுக்கு 10, 20 என கடன் பெற்றுத் தருகிறாள். ஒருபோதும் கடனை திருப்பித் தந்ததேயில்லை. இறுதியில் அந்த குடும்பம் வீடு மாறிப் போன பிறகு அந்த வீட்டுச் சுவற்றில் யாரிடம் எவ்வளவு வாங்கியிருக்கிறோம் என தேஜஸ் எழுதி வைத்திருக்கிறாள் என்ற ஒரு கட்டுரையைப் படித்தவுடன் என் கண்ளையும் சேர்த்து பொத்திக் கொண்டேன்.
(காற்று எழுதிய காவியம்) என்ற கட்டுரையில் கவிஞர் பிரமிள் அவர்களின் கல்லறையைப் பற்றியும், (முத்திரையிடப்பட்ட நாட்கள்) எனும் கட்டுரையில் புதுமைப்பித்தனின் இறுதி நாட்களையும், (நீரில் மிதக்கும் நினைவுகள்) எனும் கட்டுரையில் பென்னிக்குக்கின் தன்னலம் சாராதா செயலையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார்.
மற்றபடி பெரும்பாலான கட்டுரைகள் எளிய மனிதர்களைப் பற்றியே சுழன்றிருக்கிறது. அதன் ஒவ்வொரு சுழற்சியும் உலகைப் பற்றிய நமது பார்வையை விசாலமாக்குகிறது. மனதின் கசடுகள் நீங்கி எல்லோருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுகிறது.
இதன் ஒவ்வொரு கட்டுரைகளும் உங்களுக்கானதல்ல உங்கள் மனசாட்சிக்கானது.
#Kmkarthikeyan_2020-29
Kavitha. S –
ஆனந்த விகடனில் தொடராக வந்த துணையெழுத்தை எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். இந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றதன் மூலமாக இதன் வெற்றியை அறியலாம்.
பல விதமான பூக்களை கொண்டு, நேர்த்தியாக அழகான கதம்ப மாலையை தொடுப்பதை போல, அனைத்து விதமான உணர்ச்சிகளும் கலந்த கலவை இந்த புத்தகம். ஆம், இதில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் முடிக்கும்போது ஆசை, கோபம், அழுகை, துக்கம், பொய், காதல், இயலாமை, பாராட்டு, அங்கீகாரம், நன்றி என நீள்கிறது பட்டியல்.
நம் ஒவ்வொருவருக்கும் நம் கடந்த காலங்களே அனுபவமாகிறது. ஆசிரியர் தனக்கு ஏற்பட்ட தன் சொந்த அனுபவங்களையே தொகுத்து உள்ளார். சிலது நம்முடைய அனுபவங்களுடன் ஒத்து போகிறது. ஆனால் அவர் பார்க்கும் பார்வை வித்தியாசனவை. இவையெல்லாம் வெறும் அனுபவங்களாக இல்லாமல் வாழ்வியலையும் அழகாக சேர்த்து சொல்லுவதே துணையெழுத்தின் சிறப்பாகும்.
புத்தகத்தில் பலரையும் அறிமுக படுத்துகிறார். பிரமிள், பென்னி குக், புலமை பித்தன், கிருஷ்ணரின் சமையல்காரர், காதலில் தோற்றவர், வேலை இல்லாதவன், பரம்பரை வீட்டை இழந்தவன், புத்தக திருடர், மன நலம் பாதிக்கப்பட்டவர் இன்னும் நிறைய.. அவர்களுடன் சேர்த்தே பயணிப்பது போல உள்ளது அவரின் எழுத்துக்கள்.
நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்கள் பயணம் செய்கிறார். அவை சிற்பமோ ஓவியமோ புத்தகமோ இல்லை மனிதர்களா என்பதில் பிரச்சினையில்லை. தன்னை திட்டி கடிதம் எழுதிய வாசகனையும் தேடி செல்வது என்ன ஒரு மனநிலை.
இதை படித்தவுடன், இயற்கையோ, மனிதர்களோ அதை அப்படியே ஏற்று கொண்டு நேசிக்கும் மனநிலை வேண்டும் என்ற வேட்கையை
தூண்டுவது துணையெழுத்தின் சிறப்பு.
என்னை கவர்ந்த வரிகள் சில
சாவை விடவும் வலியது காணாமல் போய் விடுவது.
பயத்தை ஏற்று கொண்டு கடந்து போவது மட்டுமே அதை வெல்லும் ஓரே வழி.
இழந்து விட்டோம் என்று கவலைப்படாமல் மீண்டும் விரும்பியதை உருவாக்கி கொள்வதே வாழ்வின் சாரம்.
கடலை எப்படி விவரிக்க முயன்றாலும் இயலாமை மட்டுமே மிஞ்சுகிறது.
காதலிப்பவரை தவிர வேறு எவரால் சுடு மணலில், வெட்ட வெளியில் கையில் சுடு மணலை ஏந்தி சுவாரசியமாக பேசமுடியும்.
கையில் காசு இல்லாமல் போவது இத்தனை அவமானகரமான விசயமா.
பசி, இவ்வுலகில் நமக்கு இருவருக்கும் மட்டுமான பிரச்சினையா என்ன?
சத்தம் போடாமல் இருங்கள் என்று நாம் நாள் முழுவதும் கத்தி கொண்டு இருக்கும்போது குழந்தைகள் எப்படி சாந்தமாக இருக்கும்.
நம்மை விட பலவீனர்களின் மீது வன்முறை செல்லுவதற்கு நாம் விருப்பத்துடன் தயாராக இருக்கிறோம்.
உலகின் ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு அங்கீகாரத்துக்கு காத்து கொண்டிருக்கிறது.
முடிந்தால் வாசியுங்கள். அன்பினை விதைப்போம்.
நன்றி