1 review for தண்ணீர்
Add a review
You must be logged in to post a review.
₹90.00
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும்.
அசோகமித்திரன் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சி களையும் சம்பவங்களையும் பின்னிக் கதை எழுதும் படைப்பாளி, வேறு எந்த இந்திய மொழியிலாவது இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கச் சாத்தியமில்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.
இந்த பாஷையும், இந்தத் தேசமும் பெருமை கொள்ளத்தக்க இலக்கிய கர்த்தா அசோகமித்திரன்.
Delivery: Items will be delivered within 2-7 days
BOOK MARKS RAGAV –
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். சாகித்ய அகாடெமி விருது பெற்றவர். சென்னை தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இந்நாவலை எழுதியுள்ளார்.
தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரு நகரங்களின் சாபம். இன்றளவும் அது தீர்க்கமுடியாத பிரச்சனையே. தட்டுப்பாடு வரும்போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர்தான். கீழ்த்தட்டு மக்களுக்கு அவர்களுக்கு வரும் எத்தனையோ துன்பங்களில் இதுவும் ஒன்றாக எளிதாக கடந்துபோகக்கூடிய மனவலிமை பெற்றவர்கள்.
இக்கதையில் வரும் ஜமுனா, நடிகையாகி விடவேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறி பாஸ்கர் ராவிடம் தஞ்சமடைகிறாள். மரபுகளை கடந்து தன்னுடைய தற்சார்பை சீரழித்து கொள்கிறாள். இருந்தும் அவள் மேல் நமக்கு கோபம் வரவில்லை, அது எதனால், ஒருவேளை அவளின் மென்மையான குணமாக இருக்கலாம், அல்லது, அநியாயமாக ஒருவனை நம்பி தன் வாழ்வை சீரழித்துக் கொண்டாளே என்று அவள் மீது எழும் பச்சாதாபமா, இல்லை யார் எது சொன்னாலும், கேட்டாலும் அமைதியாக பதில் கூறும் அவளின் பணிவா, எதுவென்று தெரியவில்லை, கதைமுழுக்க அவள் நம்மை அவள் மீது பரிதாபப்படவைக்கிறாள். இவள் மட்டுமல்ல இக்கதையில் வரும் யார் மீதும் நமக்கு எந்தப் புகாரும் எழவில்லை, மாறாக இவ்வளவு கஷ்டமா சென்னை வாழ்வு எனவே எண்ண வைக்கிறது. ஜமுனா அவள் தங்கையிடம், “நீ ஹாஸ்டலுக்குப் போ, நான் ஊர் மேயப்போகிறேன்” என்று கூறுவாள். ஒரு பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தை வருவது என்பது சாமானியமான ஒன்றா, அதற்குப்பின்னால் எத்தனைக் காரணங்கள் இருந்திருக்கும், என அந்த ஒற்றை வார்த்தை யோசிக்கவைக்கிறது, பாவம்தான் பெண்கள். பாஸ்கர் ராவை அவளின் தங்கைக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும், அவன் தன்னை அவனின் காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறான் என்று அறிந்திருந்தும் அவனை ஒருபோதும் வெறுப்புடன் பார்க்காத ஜமுனா உண்மையில் பாவப்பட்டவள்தான்.
ஒரு நாள் ஒரு பிராமண முதியவள் ஒரு தவலையில் தண்ணீர் எடுத்து வந்தாள் அப்போது நிலைதடுமாறி விழ இருந்தாள், பார்த்ததும் ஜமுனா ஓடிப்போய் அவளித்தாங்கி, கீழே விழுந்த தவலையை எடுக்கப்போனாள், அந்த நிலையிலும் ‘அதைத்தொடாதே ‘என்று ஆச்சாரத்தை காப்பாற்றிக்கொண்டு எழுந்தவள் அந்தத் தவலையில் இருந்த மீதி தண்ணீரையும் கீழே கொட்டும்போது, அந்தக்கிழவியின் தன்னிச்சையோ, ஆச்சாரமோ தன்னிடம் இல்லையே என்று தன் மீதே பரிதாபப்பட்டுக்கொண்டாள், வருத்தப்படவும் செய்தாள். பொக்கிஷமாக நினைக்கக்கூடிய தண்ணீர் போனாலும் பரவாயில்லை தன் ஆச்சாரம் போய்விடக்கூடாது என்று நினைத்த அந்தக்கிழவியை நினைத்து தன் நிலையை ஒப்பிட்டுக்கொண்டாள். தங்கை தன் மீது கோபித்துக்கொண்டு போய்விட்டாள் என்பதை அவளால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தங்கையின் பிரிவும், தான் கர்பமடைந்ததும் அவளிடம் ஒரு வெறுமையை ஏற்படுத்துகிறது. “தூங்காமல் படுத்துக்கொள்ள இனி எந்நாளும் அவளால் முடியப்போவதில்லை, சாயா இருந்தாலும் இல்லாவிட்டாலும்” என்று எழுதுகிறார் அசோகமித்திரன். நிம்மதியின்றி தவித்தாள், அப்போதுதான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறாள். அதுவும் வீட்டுக்காரம்மாவால் தடுக்கப்படுகிறது. வீட்டுக்காரம்மாள் அவளை வீட்டை விட்டுப் போகச்சொல்கிறாள். அதற்கு முன்னால் அவளுக்குத் தேவையான குழாயை கடையில் சென்று வாங்கிவரச்சொல்வாள். யாரெல்லாம் எப்படியெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ அப்பிடியெல்லாம் ஒரு பெண்ணாகப்பிறந்து அனுபவிக்கிறாள். எல்லாம் இழந்த நிலையில், புத்தனுக்கு போதி போல, காந்தியடிகளுக்கு ஒரு தொரூ, ஒரு டால்ஸ்டாய் போல, விவேகானந்தருக்கு பரமஹம்சரைபோல,, காஸ்யபருக்கு புத்தரைப்போல ஜமுனாவுக்கு டீச்சரம்மாவின் அறிவுரைகள் கைகொடுக்கின்றன. புது மனுஷியாகிறாள். சாயாவிற்கும் பாஸ்கர் ராவுக்கும் இடையில் மோதல் வந்த போது இருவருக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்தவள் இந்த சம்பவத்திற்குப்பின் பாஸ்கர் ராவை உறுதியாக விலக்குகிறாள். கதை முழுதும் சலனமிக்க மனதுடையவளாக ஜமுனாவைக் காட்டிய அசோகமித்திரன் இறுதியில் உறுதியானவளாக காட்டுகிறார்.
சாயா, ஜமுனாவின் தங்கை, ராணுவவீரனை மணந்து, முரளி என்ற ஒரு குழந்தைக்குத் தாய். மகனை தாய்மாமன் வீட்டில் விட்டுவிட்டு தனியாக வாழ வீட்டைவிட்டு வெளியேறியவள். ராணுவத்திலிருந்து கணவன் சென்னைக்குத் திரும்பும்போது அவளும் குழந்தையும் சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டவள்.ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறவள். அக்காவிடம் பாசம் கொண்டவள் ஆனால் , பாஸ்கர் ராவ் அக்காவுடன் தொடர்பில் இருப்பதை முற்றிலும் வெறுக்கிறாள். பாஸ்கர் ராவ், அவனுடைய காரியத்திற்காக அக்காவை பயன்படுத்திக்கொள்கிறான் என்று அறிந்து அவன் மீது அடங்காச் சீற்றம் கொண்டவள். தன் அக்கா கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அக்காவின் எதிர்காலத்தைப்பற்றி கலங்குகிறாள். ஒரு நாள் ஜமுனாவும், சாயாவும் அவர்களின் அம்மாவைப் பார்க்கப்போகிறார்கள். அம்மா சுயாதீனம் இல்லாமல் இருக்கிறவள். வீட்டிற்குள் நுழைந்ததும் மாமா முரளியைப்பார்த்து உன் அம்மா வந்திருக்கிறாள் என்று கூறுகிறார், அந்தக்குழந்தை எந்தவித சலனமுமில்லாமல் மாமாவின் வேட்டி நுனியைப் பிடித்து நிற்கிறான், சாயா அவனை வம்படியாக எடுத்துக்கொள்கிறாள், மாமாவின் மகள் வந்ததும் அக்கா என்று கூறியபடியே சாயாவிடம் இருந்து சாய்ந்து சசியிடம் தஞ்சமடைகிறான். ஒரு தாய் தன் மகனிடமிருந்து எவ்வளவு அந்நியப்பட்டுப் போயிருக்கிறாள் என்பதை அசோகமித்திரன் நுட்பமாக கூறுகிறார். சாயா உடனிருப்பதை ஜமுனா விரும்புவதைப்போன்றே சாயாவும் அக்காவுடன் இருப்பதை விரும்புகிறாள்.
டீச்சரம்மா, நரகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவள், நோயாளியான எதற்கும் உதவாத கணவன், இவளுடைய சம்பாத்தியத்தில் சொகுசாக இருந்துகொண்டே தினமும் இவளை கரிச்சுக்கொட்டும் மாமியார், வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் ஒண்டி ஆளாகப் பார்த்துக்கொண்டே பள்ளிக்கும் செல்லவேண்டியவள். எந்த நேரமும் தனது வேலைகளுக்கு ஜமுனாவைப் பயன்படுத்திக்கொண்டாலும், ஜமுனாவிடம் அன்பாக நடந்துகொள்பவள். ஜமுனாவின் போதிமரம். இவளின் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட அனைத்து சோதனைகளையும் தான் எப்படி எதிர்கொண்டாள் என்று ஜமுனாவிற்கு எடுத்துரைத்து ஜமுனாவை ஒரே நாளில் உறுதியான மனுஷியாக மாற்றியவள். டீச்சரம்மா ஜமுனாவிற்குகூறிய அறிவுரைகள் அவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளார் அசோகமித்திரன்.
மேலும் இக்கதையில் மாமூலை அதிகாரமாகக் கேட்டுப்பெறும் தண்ணீர் லாரி டிரைவர், அமைச்சருக்கு பெட்டிஷன் போட்டு அலுங்காமல் அரசு இயந்திரத்தை வேலைவாங்கிய வேலாயுதம், சதா மற்றவர்களுக்கு உழைத்துக்கொள்வதாகக் கட்டிக்கொள்ளும் மாமி, சற்று பாசமாகவுள்ள மாமா, ஆச்சாரத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்தவள் மாதிரியிருக்கும் பாட்டி, இரவில் வண்டி கிடைக்காமல் டக்சிபிடித்து வரும் கோடிவீட்டுக்காரனும் இப்படியெல்லாக் கதைமாந்தர்களையும் செதுக்கியுள்ளார் அசோகமித்திரன்.
தெருவில் உள்ளத் தண்ணீர் குழாயை மெயின் குழாயுடன் இணைப்பதற்காக மூணு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, தோண்டிய மண்ணை குவியலாகப் போட்டும், பள்ளம் தோண்டியதால் தெரு விளக்கு கேபிள் கட் ஆனதினால் தெரு இருட்டடைவதும், அப்போது பார்த்து மழை விழுந்து தெருவே சதுப்பாக மாறுவதும், இப்படி ஒவ்வொன்றையும் சித்திரப்படுத்தியுள்ளார் அசோகமித்திரன்.
அசோகமித்திரன் சீரியஸ் ஆன ஆள் இல்லை. சரியான நக்கல் பார்ட்டி. வாசிக்கப்போதே நம் இதழ்களில் வளைவுகளை எளிதாக ஏற்படுத்திச்செல்கிறார். நின்று நிதானமாக வாசித்தால் இந்நாவல் ஒரு பொக்கிஷம்.
இந்த நாவல் படித்து முடிக்கும்வரை நானும் அந்தத்தெருவில்தான் வாழ்ந்தேன். சக மனிதர்களின், அதுவும் நகர வாழ்க்கையின் அவலங்களையும் தெரிந்து கொள்ளமுடிகிறது.
நன்றி:
பெ. அந்தோணிராஜ்
தேனி.