கனவு ஆசிரியர்
க. துளசிதாசன்
ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?அவருக்கான இலக்கணம் என்னவென்று வரையறுப்பது கடினம்.ஆனால் சமூக தளத்தில்,பண்பாட்டு வெளியில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைதல் சாத்தியம்.இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் இத்தொகுப்பு உருவாகியுள்ளது.
சீ.ப்பி. செல்வம் –
கனவு ஆசிரியர்
ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட 20 கல்வியாளர்களின் கனவு ஆசிரியர்களைப் பற்றிய ஒரு புத்தகத்தினை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியினுடைய முதல்வர் மரியாதைக்குரிய க.துளசிதாசன் அவர்கள் தொகுத்திருக்கிறார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பார். அந்த ஆசிரியர் தங்களை எவ்வாறு கொண்டு சென்றார்கள், அவர்கள் அதை செய்யவில்லை, எதை செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என இந்த புத்தகம் முழுவதும் வியாபித்து கிடக்கின்றன. இவர்கள் சொல்லக்கூடிய கனவு ஆசிரியர்களைப் பற்றி படிக்கும்போது ஒருவேளை நாம் வருங்காலத்தில் நல்லாசிரியர்களாக மாறலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது நண்பர்களே…
இந்த நூலில் ஆசிரியர்களை பற்றி பல ஆளுமைகள் இவ்வாறு கூறுகிறார்கள்…
#அசோகமித்திரன்
‘பல பரிணாமங்களில் உலகம் இயங்கி வருகையில் ஆசிரியர்கள் அவர்கள் மட்டும்தான் விமர்சனத்துக்கு உட்படுகிறார்கள் என்ற கழிவிரக்கம் கூடாது, கழிவிரக்கம் பிற்போக்கானது’
#பிரபஞ்சன்
‘ஆசிரியர்களின் கைகளில் விளக்குகள் இல்லை; அவர்களே தீபங்களாக இருக்கிறார்கள், என்கிறார்கள்’
#பொன்னீலன்
‘இதுவரை சேமிக்கப்பட்ட அறிவை தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றை தன்வயப்படுத்தி கொண்டு நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்த பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்’
#தியோடர்_பாஸ்கரன்
‘மக்களிடையே மத ரீதியில், மொழி ரீதியில், ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்களை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கலாம். அந்த புனித வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது. அதற்கு எந்தவிதமான வன்முறையும் தேவையில்லை’
#ஆர்_பாலகிருஷ்ணன்
‘நாளை அறிஞர்களை, விஞ்ஞானிகளை, தலைவர்களை, தொழில் வல்லுனர்களை உருவாக்கும் ஆசிரியர் ஒரு பெரிய அறிஞராக, தொழில்நுட்ப மேதையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் ஒரு நல்ல ஆசிரியராக, நல்ல மனிதராக இருந்தால் மட்டுமே போதுமானது’
#ச_மாடசாமி
‘நல்ல ஆசிரியர் என்பவர் நல்ல மனிதராக இருப்பவரே’
#இரத்தின_நடராசன்
‘பிற மனிதர்களை விட ஆசிரியர் என்பவர் உயர்ந்தவர்; உன்னதமானவர்; வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர்’
#ச_தமிழ்ச்செல்வன்
‘படித்த படிப்புக்கும் வாழும் சொந்த வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடு கொண்டவராக ஒரு ஆசிரியர் இருக்கவே கூடாது’
#பிரளயன்
‘மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சினேகமான, அண்மையான சூழல் நிலவுதல் வேண்டும்’
#பாமா
‘சுயமாக சிந்திக்க, சிந்தித்ததை துணிவுடன் வெளிப்படுத்த, சரி எது தவறு எது என்று பகுத்து உணர, எந்த சூழலிலும் உண்மையை மட்டுமே பேச, நீதிக்குக் குரல் கொடுக்க, அநீதியை எதிர்த்து நிற்க, மனிதர்கள் இடையே பாகுபாடு பார்க்காமல் மனிதத்தை நேசிக்க, சமத்துவ சமுதாயத்துக்கான விழுமியங்களை அறிந்து அவற்றை செயல்படுத்த, சமூகப் பொறுப்புடன் இயங்க, பெரியோரை மதிக்க, எளியோருக்கு இரங்க, எல்லாவற்றிலும் உள்ள எளிய அழகை ரசிக்க, மிக முக்கியமான வாழ்க்கையை ரசனையுடன் மகிழ்வுடன் வாழ, இப்படியாக நம்பிக்கை விதைகளை நிறையவே புதைத்துள்ளனர் என் ஆசிரியர்கள்’
#ஞாநி
‘ஆசிரியர் வேலை மாணவர்களின் ரோல்மாடலாக இருக்க வேண்டிய வேலை என்பதுதான்’
#ஆயிஷா_நடராசன்
‘கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு ஒரு போதும் கற்பிக்காத குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும் அதுவே ஒரு ஆசிரியரின் பணி’ என்று தனது ஆசிரியர் சொன்னதாக குறிப்பிடுகிறார்
#ட்ராட்ஸ்கி_மருது
‘ஓவியராகத்தான் ஆக வேண்டும் என்று இருந்த என் ஆசைக்கு வழி காட்டியவர்கள் என் தந்தை மட்டுமல்ல, என் ஓவிய ஆசிரியரும் கூட’
#எஸ்_ராமகிருஷ்ணன்
‘நல்ல ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருப்பார்’
#த_வி_வெங்கடேஸ்வரன்
‘மாணவர்கள் தங்களது சுய விருப்பத்தை உளசார்பினை பரிசோதிப்பது சிறந்தது’ என என் ஆசிரியர் எனக்கு சொல்லியிருக்கிறார்
#இறையன்பு
‘ஆசிரியர் பணி என்பது வேலை பெறுவதற்கான இன்னொரு வாய்ப்பு அல்ல; அது ஒரு கனவாக, தரிசனமாக, இயக்கமாக, வேட்கையாக இருக்கவேண்டும். நேசத்துடன் அணுகி, கருணையோடு செயல்படுத்த வேண்டிய பொன்னான பொறுப்பு அது’
#கீரனூர்_ஜாகிர்ராஜா
‘இந்த இடத்தை என் எழுத்துக்களில் வாயிலாகவே நான் அடைந்திருக்கிறேன். இதற்கு ஆதார சுருதியாக இருந்தவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள்’
#பவா_செல்லதுரை
‘ஆசிரியர்கள் பழிவாங்கல் குணத்தை பெற்றவர்களாக எப்போதும் இருந்து விடவே கூடாது’
#க_துளசிதாசன்
‘சமூகத்தை கட்டுகிற ஆசிரியன். ஆசிரியன் மற்ற பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சமூக அமைப்பை புரிந்து கொண்டு, ஒவ்வொரு சமூகத்திற்கும் தேவையானவற்றை கொடுக்கிற சமூக சேவகன். ஒவ்வொரு குழந்தையின் மனதிற்குள்ளும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது ஆசிரியனுக்கு. குழந்தையின் விருப்பு, வெறுப்பு, பழகும் தன்மை, குடும்ப பின்னணி, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்புணர்ச்சி மிக்க சமூக ஆய்வாளனே ஆசிரியர்’
#ஆபிரகாம்_லிங்கன்
‘ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும், ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் என் மகனுக்கு சொல்லிக்கொடுங்கள் ஆசிரியர்களே’
இப்படி தன்னுடைய வாழ்நாட்களில் மறக்க முடியாத சில ஆசிரியர்களையும், என்னுடைய ஆசிரியர் இப்படி இருந்தால் அவர் சிறந்த #கனவு_ஆசிரியராக இருப்பார் என்பது பற்றிய பல்வேறு விஷயங்களையும், இன்றைக்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான பல்வேறு விஷயங்களை, உரையாடல்களை, விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள அவசியமான ஒரு நூலாக நான் இந்த புத்தகத்தை பார்க்கிறேன். அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த புத்தகத்தை படித்த பின்பு, குறைந்தபட்சமாவது இந்த புத்தகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில விஷயங்களையாவது ஒரு ஆசிரியராவது முன்னெடுப்பதன் மூலம் நிச்சயமாக அவர் வருங்காலத்தில் #நல்லாசிரியராக திகழலாம் என்பது என்னுடைய கருத்து நண்பர்களே.. வாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் தலைசிறந்த ஒரு நூலாக நம் கைகளில் தவழட்டும் இந்த #கனவு_ஆசிரியர்…
நூலின் பெயர்: கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்: க.துளசிதாசன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்