THIRUKKURAL IRUVAR URAI
1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல-எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று-அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
கீர்த்தி உரை: ‘அ’ என்னும் எழுத்தே உலகிலுள்ள எழுத்துக்களுக் கெல்லாம் முதன்மையாக இருக்கிறது. அதுபோல் கடவுளே உலகின் முதல் பொருளாக இருக்கிறான்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
ப.உ: கற்றதனால் ஆய பயன் என்-எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல்தாள் தொழாஅர் எனின்-மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
கீ.உ: இறைவனின் தூய பாதங்களை வணங்காவிட்டால் அவன் என்னென்ன கற்றாலும் பயனொன்றும் இல்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
ப.உ: மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்-மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார்-எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
கீ.உ: மலரின்மேல் வாழ்கின்ற இறைவனின் திருவடிகளை நினைப்பவர்கள் இவ்வுலகில் நீடூழி வாழ்வார்கள்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
ப.உ: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு-ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல-எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
கீ.உ: விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்க்கு எந்த துன்பமும் நேராது.
Reviews
There are no reviews yet.