எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.
பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.
கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே. முகிலின் இந்தப் புத்தகம், கிளியா, கழுகா என எளிதில் கண்டறிய முடியாத ஒரு வினோதப் பெண்ணின் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.
ART Nagarajan –
கிளியோபாட்ரா
முகில்.
கிழக்கு.
எகிப்தின் மாபெரும் பேரரசியாக,
மயக்கும் பேரழகியாக, ஆகச்சிறந்த காதலியாக,
வரலாறு கொண்டாடி மகிழ்கிறது!!
காலமெல்லாம்
“நைல் நதி” காத்திருந்தது
கிளியோபாட்ராவின்
காலடி நனைப்புக்குத்தான்,
கிளியோபாட்ராவும், ஸீஸரும், நைல் நதிப் பயணத்தின் அடையாளமாக கிளியோபாட்ரா கருவுற்றதாக எகிப்து வரலாறு கூறுகிறது.
ஸீஸர் தன் வாளின் மூலம் கிளியோபாட்ராவின்
வயிற்றை கிழித்து
தன் மகனை பிறக்கவைத்தார்,
ஸீஸரால் பிறந்ததால்
“ஸிஸேரியன்”.
இன்றும் அறுவை சிகிச்சை பிரசவத்தை “ஸிஸேரியன்”
என்று அழைப்பதற்கு காரணம் இதுதான்.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும் எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா தனக்காக கண்டுபிடித்தவையே!
ஆச்சர்யங்களும், சர்ச்சைகளும் நிறைந்தது கிளியோபாட்ராவின் பேரழகு,
ரோமப் பேரரசின்
ஆகச் சிறந்த தலைவர்களான
ஜூலியஸ் ஸீஸரையும்,
மார்க் ஆண்டனியையும்,
தன் கண்ணசைவில்,
காலில் விழ வைத்தவர்
பேரழகி கிளியோபாட்ரா.
ரோமப் பேரரசின்
இறுகிய பிடிக்குள்
எகிப்து இரையாகாமல் தப்பியதற்கும்,
எகிப்து இரையானதற்கும்,
ஒரே ஒரு அழகிய காரணம் கிளியோபாட்ராவின்
பேரழகு மட்டுமே!!
இருபத்தியோரு வயது கிளியோபாட்ராவின்
கைவிரல் பட்டதும்,
ஐம்பத்திரண்டு வயது
ஜூலியஸ் ஸீஸரின்
முதுமைச் சுவடுகள்
காணாமல் போனதில்
“எனக்கும் கூட” ஆச்சர்யமில்லை!
கிளியோபாட்ராவின் இறுக்கத்தில்
மார்க் ஆண்டனி எனும் மாவீரன் கிளியோபாட்ராவுக்குள் தொலைந்து போனான்.
ஸீஸருக்கு கிளியோபாட்ராவின் மீது தீராத காதல்,
கிளியோபாட்ராவிற்கு ஆண்டனி மீது காதல்.
நேற்று கிளியோபாட்ரா, என்னையும் அழைத்துக்கொண்டு நைல்நதியையும், எகிப்தின் பேரழகையும், சுற்றிக்காட்டியதில்
பேரானந்தம் கொண்டேன்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.