FRENCHIYAR KAALA PUDUCHERRY:MANNUM MAKKALUM(1674-1815)
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில், இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும், மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது. ஐதர் அலி, திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை; இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே. பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும், ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின. இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது, பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன. ஆயினும், புதுச்சேரிப் பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர். அத்துடன் ஃபிரான்சின் காலனி வேட்டை முற்றுப்பெற்றது. கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள், ஆட்சியரின் துணையுடன் இந்தியச் சமூகத்தின்மீது தொடுத்த உளவியல், உடலியல் தாக்குதல்களால், மதமாற்றம் சற்று மந்தமாகவே தொடர்ந்தது. இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும், கையாண்ட உத்திகள், கண்ட போர்க்களங்கள், பகடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இயலாமை, போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள், அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்களின் ஊடாக இந்நூல் பயணிக்கிறது.
Reviews
There are no reviews yet.