Theivam Enbathor
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. – முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன்
Kodee –
எல்லோரும் புத்தகங்களில் இருந்தும் தத்துவங்களில் இருந்தும் வாதங்களை வைத்துக்கொண்டிருந்த சூழலில் தமிழ்நாட்டுத் தெருக்களில், கோயில் வாசல்களில், பிரகாரங்களில், ஆற்றங்கரைகளில், கிணற்றடிகளில், சாவு வீட்டு முற்றங்களில், நாட்டார் தெய்வப் பீடங்களின் முன் நின்று தமிழ் மண்ணின் புழுதி படிந்த வார்த்தைகளில் தொ.ப. பேசினார்’ – இது, இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கருத்து. புத்தகத்தை வாசித்தால் உங்கள் கருத்தும் அதுவாகவே ஆகும்!
எல்லா இயக்கங்களிலும் பெரிய தலைவர்கள் மட்டுமே பேசப்பட்டு, அடிநாதமான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதுபோல… பெரிய தெய்வங்கள் மட்டுமே பூஜிக்கப்பட்டு சிறுதெய்வங்கள் புறக்கணிக்கப்படும் சூழல் தமிழ்ச்சமூகத்தில் உண்டு. அதைப் பற்றிய நுண்மையான ஆய்வுகளைச் செய்யக்கூடிய ஒரு சிலரில் தொ.பரமசிவன் முக்கியமானவர். ஆண் வாடையின்றி தனியாகத் தாய்த் தெய்வங்கள் அமர்ந்திருந்த காலத்தில் வைதீகப் பெருந்தெய்வங்கள் வந்து அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளிய சமூக நகர்வுகளை அங்குலம் அங்குலமாக தொ.ப. வர்ணிக்கிறார். தெய்வங்களையே இப்படிச் செய்திருந்தால் மனிதர்களை எப்படியெல்லாம் புறக்கணித் திருப்பார்கள் என்ற வேதனை துளிர்க்கிறது.
வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி மகுடம் கொண்டிருத்தல், நெற்றியில் பொட்டு அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வங்களின் தனி அடையாளங்கள் என்று வரையறுக்கும் தொ.ப., மாரியம்மன் தொடங்கி வெயிலுகந்தாள், கருக்கினிலமர்ந்தாள், வாள்மேல் நடந்தாள் என்ற தெய்வங்களின் பின்புலத்தை நமக்குத் தருகிறார். இவற்றை வெறுமனே கதையாடல்கள், பக்தி ரசம் சொட்டும் பனுவல்களாக மட்டும் இல்லாமல், அதன்மூலம் தமிழ்ச் சமூக அமைப்பை, பழக்க வழக்கங்களை வரையறுப்பதுதான் தொ.ப-வின் ஆய்வுப் போக்கு.
தமிழக ஆன்மிக வரலாற்றில் வள்லலார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவருக்கும் தரவேண்டிய இடம்குறித்த கட்டுரைகள் இதில் குறிப்பிடத்தக்கவை. இதன்மூலம், தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றை முழுமையாக அறிய முடிகிறது. உலகமயமாக்கல் பின்னணியில் நாட்டார் சமயங்கள் தனது வேர்களை இழந்து வருவதையும் உணர முடிகிறது. இதில் பெரியாரியலையும் தொ.ப. மென்மையாக இணைக்கிறார். ”ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து, ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டெழும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர்கொள்ளவில்லை. மாறாக, அதிகார மையமாகிய கோயில்களையும் அதை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்” என்கிறார்.
தெய்வங்களைப் பக்திமயமாக மட்டுமின்றி சமூக சக்தியாகவும் பார்க்கத் தூண்டும் புத்தகம்!