தெலங்கானா விவசாயிகளின் எழுச்சியை மையப்படுத்திய இந்தக் கதைகள் குறித்து எழுதத்தொடங்கும் இவ்வேளையில் இந்திய உழைக்கும் மக்களது போராட்ட வரலாற்றின் தீரமிகு அத்தியாயத்தை எழுதுவதற்காக நாட்டின் தலைநகரில் லட்சோபலட்சம் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அன்றாடம் படுகிற அவதிகளை ஒப்பிடும்போது இந்த உறைபனியும் கடுங்குளிரும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற உறுதியை வெளிப்படுத்தியவாறு அவர்கள் நாடெங்குமிருந்து வந்திருக்கிறார்கள். வேளாண்துறை எதிர்கொண்டு வரும் இன்னல்கள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்கிற கோரிக்கை முழக்கத்தை டெல்லியெங்கும் நிறைத்தபடி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நலிவுற்றுவரும் விவசாயத்தை நம்பி வாழமுடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பெருகிவரும் அபாயகரமானச் சூழலில், தற்கொலை தீர்வல்ல- வாழ்வதற்காகப் போராடுவோம்- சாவதென்றாலும் போராடிச் சாவோம் என்று அவர்கள் களமிறங்கியுள்ளனர். துயர்மிகுந்த தங்கள் வாழ்வு குறித்து அவர்கள் பொதுவெளியில் வைத்திருக்கும் முறையீடுகள், சமூகத்தின் மனச்சான்றை உறுத்தி கவனிக்கச் செய்திருக்கிறது. அதனாலேயே அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதற்காக நாடெங்குமிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், பொறியாளர்கள், பொருளாதார அறிஞர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலதிறத்தாரும் அணிதிரண்டிருக்கிறார்கள். ஊரக, நகரக உழைப்பாளி மக்களின் இந்த ஒற்றுமையை, போராட்டக் குணத்தை கவனித்துவருகிறவர்கள், தெலிங்கானா விவசாயிகளின் எழுச்சி குறித்த இந்தக் கதைகளை வாசிப்பார்களேயானால், தாமே நேரடியாக போர்க்களத்தில் நிற்பதான உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆளாகக்கூடும்.
***
ஆட்சியாளர்களின் ஊதாரித்தனத்திற்கு உதாரணமாக உலகின் உயரமான சிலையெனும் வெற்றுப் பெருமிதமாய் வல்லபாய் படேல் நின்று கிடக்கிறார். சுதந்திரமடைந்த இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்து தனியாக இருந்த சமஸ்தானங்களை தனது இரும்புக்கரத்தாலும் அதைவிட இறுகிய மனத்தாலும் இணைத்தவர் என்று அவர் புகழப்படுகிறார். உண்மையில் அவரது இரும்புக்கரமும் மனமும் யாரை ஒடுக்கியது என்பதற்கான பதிலை இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் துள்ளத்துடிக்கப் பேசி அம்பலப்படுத்துகின்றன.
இரு நாடுகளாகப் பிரிந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்ற தருணத்தில் இரண்டில் எதனோடும் சேராமல் தனது சமஸ்தானம் தனித்திருக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஹைதராபாத் நிஜாம். காமன்வெல்த் அமைப்பின் கீழ் தனி அந்தஸ்துள்ள நாடாக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மவுண்ட்பேட்டன் மேற்கொண்டிருந்தார். நிஜாம் ஓர் இஸ்லாமியர். பிரிட்டிஷாருக்கு தாரைவார்த்தது போக எஞ்சியிருந்த அவரது ஆளுகைப்பரப்பான தெலங்கானாவின் குடிமக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியரால்லாதார். இவர்களில் பெரும்பான்மையர் தெலுங்கையும், அடுத்தபடியாக இருந்தவர்கள் மராத்தி, கன்னடத்தையும் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சமஸ்தானத்தின் ஆட்சிமொழியாக உருது இருந்துவந்த நிலையில், அதற்க கொடுக்கப்பட்டுவரும் முன்னுரிமையால் தங்களது மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக இவர்களுக்குள் ஒரு நியாயமான குமுறல் இருந்துவந்தது.
அப்போதைய கணக்கின்படி 82,698 சதுரமைல் பரப்பளவுள்ள இந்தச் சமஸ்தானத்தில் 5 கோடியே முப்பது லட்சம் ஏக்கர் அளவுக்கு விளைநிலமிருந்தது. இந்த விளைநிலத்தின் ஒருபகுதி நிஜாம் வசமும், பெரும்பகுதி தேஷ்முக், ஜாகீர்தார், மேக்தேதார் போன்ற ‘தொரை‘களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இந்து ஆதிக்கச்சாதியினராகிய இந்த நிலவுடையாளர்கள் ஒன்னரை லட்சம் ஏக்கர் வரைகூட நிலம் வைத்திருப்பதற்கும், கடீ என்கிற கோட்டை கட்டி வட்டார அளவில் ஆதிக்கம் செலுத்திக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இஸ்லாமியரான நிஜாமுக்கு இணக்கமாகவே இருந்தனர். இஸ்லாமியர் உள்ளிட்ட குடிமக்களில் பெரும்பாலானோர் நிலமற்றவர்களாகவும் குத்தகை விவசாயிகளாகவும் இருந்தனர். இவர்கள் மேற்சொன்னவர்களின் நிலங்களில் கூலியின்றி வெட்டிவேலை செய்தாக வேண்டுமென்ற கட்டாயமிருந்தது. தாங்கள் குத்தகைக்கு எடுத்து ஓட்டிய நிலத்தின் விளைச்சலில் பெரும்பகுதியை அவர்களிடம் குத்தகையாக இழந்துவந்தனர். மட்டுமல்லாது அரிசி, காய்கறி, கோழி, ஆடு போன்றவற்றை திரட்டி நிலவுடைமையாளர்களின் குடும்ப விசேடங்களுக்கு இலவசமாகத் தந்தாகவும் வேண்டியிருந்தது. இவர்களது குடும்பத்துப் பெண்களில் எவரை வேண்டுமாயினும் அவர்கள் தூக்கிப் போகும் நிலையும் இருந்துவந்தது. இதுபோன்ற அட்டூழியங்களுக்கு பட்டேல், பட்வாரிகள் என்கிற பெயரிலான உள்ளுர்மட்டத்து அரசு ஊழியர்களும் உடந்தையாயிருந்தனர்.
கடுமையான வரிவிதிப்பு, ஒடுக்குமுறை, உழைப்புச்சுரண்டல், உருதுமொழிக்கு தரப்படும் முன்னுரிமையால் கல்வி வேலைவாய்ப்பு கலைஇலக்கிய வளர்ச்சி போன்றவற்றில் தங்களது மொழிக்கும் பண்பாட்டுக்குமுரிய இடம் மறுக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஏற்பட்டுவந்த அமைதியின்மையை இஸ்லாமிய எதிர்ப்புணர்வாக திருப்பி விடும் முயற்சியில் இறங்கியது ஆர்ய சமாஜம். ஆனால் தங்களது பிரச்னைக்கு மதவழியாக தீர்வைத் தேடிட முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்த மக்கள் அதிலிருந்து நகர்ந்து ஆந்திர ஜனசங்கம், ஆந்திர மகாசபை என்கிற நிலைகளை நோக்கி முன்னேறியுள்ளனர். நிஜாம் ஆட்சியும் சமூக நிலவரமும் அகவயமாகவும், பிரிட்டிஷ் காலனியாட்சிக்கு எதிராக சமஸ்தானத்துக்கு வெளியே நடைபெற்றுவந்த விடுதலைப் போராட்டம் புறவயமாகவும் ஏற்படுத்திய அழுத்தம் ஆகியவற்றால் தெலுங்கானா மக்களின் கோரிக்கையிலும் போராட்டங்களிலும் பண்புரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்களின் உள்ளுறையாக கம்யூனிஸ்ட்டுகள் இயங்கியிருக்கிறார்கள்.
நிலப்பிரபுத்துவக் கொடுமைகள், குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றம், கெடுபிடி வரிவசூல், கட்டாய வெட்டிவேலை ஆகியவற்றுக்கு எதிராகவும் தாய்மொழிக்கு உரிய இடம் கோருவதாகவும் தொடங்கிய தெலங்கானா விவசாயிகளின் போராட்டம் நிஜாமின் படைகளையும், சுதந்திர ஹைதராபாத்தை காப்பாற்றப் போவதாக சொல்லிக்கொண்டு காஸிம் ரஜ்வி என்பவரால் உருவாக்கப்பட்ட ரஜாக்கர்கள் என்னும் கொடிய அடியாள் பட்டாளத்தினரையும் நிலப்பிரபுக்களின் அடியாட்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விஷ்னூரு தேஷ்முக் சலவைத்தொழிலாளியான அய்லம்மாவின் நிலத்தைப் பறிப்பதை தடுத்திட மேற்கொண்ட போராட்ட வடிவம், அவனது குண்டர்படையால் தொட்டி குமரய்யா 1946 ஜூலை 4 அன்று கொல்லப்பட்டயதையடுத்து வேறு வடிவத்திற்குப் பாய்ந்தது. நிஜாமின் படைகளும் ரஜாக்கர்களும் அன்றாடம் கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டேயாக வேண்டும் என்ற நிலையில் ஆயுதப்பயிற்சி பெற்ற கெரில்லாக் குழுக்களை அமைக்க வேண்டியதாயிற்று என்கிறார் தோழர் பி.சுந்தரய்யா. உள்ளுர் மட்டத்தில் அமைக்கப்பட்ட ‘சங்கம்’ ஒருங்கிணைப்பில் எதிர்ப்பு நடவடிக்கை என்பது கையில் சிக்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிர்கொள்வது என்கிற நிலையிலிருந்து ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் படையாக மாறுவது, தலைமறைவுத்தாக்குதலில் ஈடுபடுவது என்கிற வளர்நிலைகளை இப்படியாக எட்டியது. இந்திய ராணுவத்திலிருந்து வெளியேறி வந்த மேஜர் ஜெய்பால் சிங் இவர்களில் பலருக்கு முறையான ஆயுதப்பயிற்சி அளித்ததையும் அவர்கள் ஆயுதங்களை கையாள்வதில் வெளிப்படுத்திய தீரத்தையும் நாடு அழைத்தது என்கிற தனது நூலில் தெரிவித்துள்ளார்.
பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது, நிலப்பிரபுக்களின் அதிகப்படியான நிலங்களை கைப்பற்றி நிலமற்றோருக்கு பகிர்ந்தளிப்பது, வெட்டி வேலையை ஒழிப்பது, பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பது, மறுமணங்களை நடத்துவது, போராட்டங்களிலும் தலைமைப் பொறுப்புகளிலும் சாதி/ பாலினப் பாகுபாடுகள் அற்ற நிலையை உருவாக்குவது, பாடசாலைகளைத் தொடங்குவது எனத் தீவிரமடைந்துவந்த போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆந்திர மகாசபையும் கம்யூனிஸ்டுகளும் உழுபவர்க்கே நிலம் சொந்தம் என முழங்கினர். இதற்கு இணையாக எழுந்த மற்றொரு முழக்கம், நிஜாம் ஹைதராபாத் சமஸ்தானத்தை சுதந்திர இந்திய ஒன்றியத்துடன் இணைக்கவேண்டும் என்பது.
விவசாயிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலவீனப்பட்டுக் கொண்டிருந்த நிஜாமை பணியவைப்பதற்கு இதுவே உகந்த தருணம் என்கிற கணிப்பில் தெலங்கானாவுக்குள் 1948 செப்டம்பர் 13ஆம் நாள் மேஜர் ஜே.என்.சவுத்ரி தலைமையில் இந்திய ராணுவம் அனுப்பப்பட்டதிலிருந்து நிலைமை முற்றாக மாறியது. ஆபரேஷன் போலோ என்ற பெயரில் நுழைந்த இந்திய ராணுவத்திடம் சையத் அகமது எல் எட்ரோஸ் தலைமையிலான நிஜாம் படைகளும் காஜிம் ரஸ்வியின் ரஜாக்கர்களும் ஐந்து நாட்கள்கூட தாக்குப் பிடிக்கவில்லை. செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 5 மணியளவில் டெக்கான் ரேடியோவில் பேசிய நிஜாம் இந்திய ராணுவத்திடம் சரணடையுமாறு தனது ராணுவத்தினரை கேட்டுக்கொண்டார். இந்தச் சரணாகதி மறுநாள் முழுமையடைந்தது. ராஜ் பிரமுக் என்கிற பட்டத்தையும், தனது உடைமைகளுக்கான பாதுகாப்பையும் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு வேண்டப்பட்டவராகிவிட்டார். ரஜாக்கர்களின் தலைவனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள். விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து கிராமங்களை விட்டோடிப் போன தேஷ்முக்குகளும் ஜமீன்தார்களும் கதர்குல்லாய் மாட்டிக் கொண்டு உடனேயே காங்கிரஸ்காரர்களாகிவிட்டார்கள். விவசாயிகளின் எழுச்சியால் தாங்கள் இழந்ததையெல்லாம் மீட்டுக்கொள்வதற்கு இந்த அரசியல் வேடம் இவர்களுக்கு அவசியமாயிருந்தது. இவர்களுக்காகவும், தெலங்கானாவுக்கு வெளியே போராட்டம் பரவாமல் தடுப்பதற்காகவும் கம்யூனிஸ்ட்டுகளையும் ஆந்திர மகாசபையினரையும் சங்கத்தினரையும் அழித்தொழிக்கும் பொறுப்பை இந்திய ராணுவம் எடுத்துக்கொண்டது.
இந்திய ராணுவத்திடம் காணப்படுவதாக இப்போது குற்றம்சாட்டப்படும் மனிதத்தன்மையற்ற போக்குகள் அனைத்திற்குமான கெடு வித்து அப்போதே ஊன்றப்பட்டிருந்தது என்பதை வரலாறு தெரிவிக்கிறது. படுகொலைகள், சித்திரவதைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொள்ளயடிப்பு எனத் தெலங்கானாவில் இந்திய ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை ஆய்ந்துரைக்க அமைக்கப்பட்ட பண்டிட் சுந்தர்லால் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது. 1948 நவம்பர் 9 முதல் டிசம்பர் 21 வரை தெலங்கானாவிற்குள் கள ஆய்வை மேற்கொண்டு அக்குழு தயாரித்தளித்த அறிக்கையை அரசு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக வைத்திருந்தது. இப்போது இணையத்தில் காணக்கிடைக்கும் அவ்வறிக்கை எப்படி குறைத்துப் பார்த்தாலும் இந்திய ராணுவத்தினரால் அந்த 5 நாட்களுக்குள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கக்கூடும் என்கிறது. ஆனால் இந்த அழித்தொழிப்பு அதற்குப் பின்னும்- அதாவது, ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைக் கைவிடுவதாக 1951 அக்டோபரில் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தப் பின்னும்கூட வெவ்வேறு அளவிலும் வடிவிலும் நீடித்தது. (ஆயுதரீதியாக மட்டுமல்லாது கருத்தியல்ரீதியாகவும் மக்களை நிர்க்கதியாக்குவதற்கான இணைமுயற்சியாக ஆச்சார்யா கிருபளானி 1951 ஏப்ரல் 18 அன்று போச்சம்பள்ளி கிராமத்தில் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். உழுபவர்க்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கையின் நியாயத்தையும் அது தருகிற ஆவேசத்தையும் நிலத்திற்கான போராட்டத்தையும் மழுங்கடிக்க முயற்சித்தார்.)
சுதந்திரமடைந்து சிலமாதங்களேயான ஒரு நாடு தனது ராணுவத்தைக் கொண்டு நடத்திய இந்த அழித்தொழிப்பை உலகின் கவனத்திலிருந்து மறைப்பதற்காகவே இந்த ராணுவ நடவடிக்கை போலிஸ் ஆக்ஷன் என்று குயுக்தியாக சுட்டப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய கம்யூனிஸ்ட்களையும் போர்க்குணமிக்க விவசாயிகளையும் இஸ்லாமியர்களையும் கொன்று குவித்த வல்லபாய் படேலின் கொடுங்கோல் மனம் இரும்புமனிதர் என்கிற பட்டத்தால் திருநிலைப்படுத்தப்பட்டது. அந்த படேல்தான் இப்போது 3000 கோடி ரூபாயை முழுங்கிய சிலையாக நின்றுகிடக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளாமல் இக்கதைகளை வாசிக்க முடியாது.
***
தனியுடைமைக்கு ஆதரவானதென சொல்லிக்கொள்ளும் ஒரு சமூகம் அதற்கேயுரிய நியாயத்தின்படி விவசாயிகளின் நிலத்தை அவர்களுக்கே உரியதாக விட்டுவைக்கத் தயாரில்லாத நிலை தீவிரமடைகிறது. உழுபவர்களுக்கு நிலத்தை நீதியாக பகிர்ந்தளிப்பதற்கும் முன்பாகவே அவர்களது கையில் இருக்கும் துண்டுத்துக்காணி நிலத்தையும் அபகரிக்கும் நிலை வந்துள்ளது. விவசாயத்திற்கு சற்றும் தொடர்பில்லாதவர்களின் முதலீட்டுக்களமாக மாறியுள்ளது நிலம். அவர்களால் வளைத்துப் போடப்படும் பெருநிலப்பரப்புகள் வேளாண்மை என்கிற பயன்மதிப்பு ஏதுமின்றி வெறும் சொத்தாக முடக்கப்பட்டுள்ளது. இதேபோல தொழில்மயமாக்கம், கனிமச்சுரங்கங்கள், சாலை விரிவாக்கம் போன்ற காரணங்களினாலும் விவசாயிகள் நிலத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு வருகின்றனர். மாற்று நிலமோ, உரிய நிவாரணமோ இன்றி ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாகக்கூட தங்களது சொந்த நிலத்திலிருந்து விவசாயிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இத்தகைய அடாவடியான நிலப்பறிப்புக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுகிறது அரசு. தத்தமது நிலத்தின் மீதான உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அரசிடம் நேரடியாக மோதியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவருகிற இன்றைய விவசாயிகள், உழுபவர்க்கே நிலம் சொந்தம் என்கிற முழக்கத்துடன் நடந்த தெலங்கானா விவசாயிகளின் மகத்தான எழுச்சி பற்றிய இக்கதைகளிலிருந்து தமக்கான படிப்பினைகளை அடையாளம் காணக்கூடும்.
அரும்பாடுபட்டு விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை 1064 ரூபாய்க்கு தான் விற்கமுடிகிறது ஒரு விவசாயி ஒருவரால். இந்தியாவில் விவசாய விளைபொருட்களுக்கு என்ன பெறுமதி உள்ளது என்பதை அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அவர் அந்தத் தொகையை பிரதமர் அலுவலகத்திற்கு பணவிடையாக அனுப்புகிறார். இவ்வாறு நேரடியாக அனுப்பப்படும் தொகையை தங்களால் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாதென்றும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துமாறும் தகவல் அனுப்புகிறார்கள். அவரது செய்கையின் உள்ளார்ந்த பொருளை விளங்கிக்கொள்ள முடியாத அல்லது விளங்கிக்கொள்ள மறுக்கிறவர்களால் இந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் நிறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. வெங்காயத்துக்கு மட்-டுமல்ல, வேறுபல விளைபொருட்களுக்கும் சற்றேறக்குறைய இதுதான் கதி. சாகுபடிச் செலவுகளை ஈடுகட்டும் அளவுக்குக்கூட வந்துசேர்வதில்லை என்பதால் அறுவடை செய்யாமல் வெள்ளாமைக்காடுகளை அழியவிடுகிறார்கள். விளைவித்தப் பொருட்களை, அவர்களது கோழிகளை, கால்நடைகளை அன்றைக்கு தேஷ்முக்குகள், ஜாகீர்தார்கள், பட்டேல்கள், பட்வாரிகள் அடாவடியாக பறித்துச் சென்றதும் இப்போது கட்டுப்படியாகாத விலைக்கு விவசாயிகள் விற்றுவிட்டுப் போகும் நிலையை அரசே உருவாக்கி வருவதும் சாராம்சத்தில் ஒன்றுதான்.
வாழ்வாதாரமாக இனியும் வேளாண்மையை நம்ப முடியாது என்று நிலத்தை விட்டு விவசாயிகள் வெளியேறும் நிலை அதிகரித்துவருவது குறித்து பிரமாதமான விளக்கங்கள் பலவுண்டு, ஆனால் தடுப்பதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவையாகிறது. விவசாயத்துறை எதிர்கொள்ளும் பொதுப்பிரச்சனைகளின்பால் மட்டுமல்லாது தனித்துவமான உள்ளூர் அளவிலான பிரச்னைகளையும் மையப்படுத்தி விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்கும் கோரிக்கைகளை உருவாக்குவதற்கும் போராட்டத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கும் தெலங்கானாவில் உருவாக்கப்பட்ட ‘சங்கம்’ போன்றவற்றை இப்போது முன்மாதிரியாகக் கொள்வதற்கான சாத்தியங்களை பரிசீலிக்க இக்கதைகள் உதவக்கூடும்.
இந்தியா என்கிற பரந்த நிலப்பரப்பை தமது சந்தையாகவும் சுரண்டல்களமாகவும் பாவித்துவருகிற ஆளும் வர்க்கமும் அதன் நலன் காக்கும் அரசும் ஒடுக்குமுறையின் எல்லா நுணுக்கங்களையும் குரூரங்களையும் பயின்று, நாட்டின் மூலைமுடுக்கையெல்லாம் இடையறாத கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளதை புறக்கணித்துவிட்டு எந்த மக்கள் இயக்கமும் இங்கு உருவாகிவிட முடியாது. மேலும் மேலும் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் பெருக்கிக்கொள்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமானது உழைப்பாளி வர்க்கம் குறித்த தனது அச்சத்தையே வெளிப்படுத்திவருகிறது என்றாலும் அதையும் கணக்கில் கொண்டே போராட்ட வடிவங்களை மக்கள் இயக்கங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நவீனப்படை, சாலை போக்குவரத்து, கருத்தியல்பலம் ஆகியவற்றுடன் உள்ளதாலேயே இந்த சமூக அமைப்பை யாரும் காப்பாற்றிவிட முடியாது. வரலாறு தேங்கி நிற்பதில்லை, அது தன்னையும் காலத்தையும் அசைத்தசைத்து மாற்றியமைத்தபடியே இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை முன்னுணரும் நுட்பம் வாய்த்த கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும் கூட இக்கதைகள் சொல்லும் செய்திகளுண்டு.
தன் காலத்தின் ஆகத்தீவிரமான இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் பார்த்தவர்களும் அதிலிருந்து பெற்ற தாக்கத்தால் அதேகாலக்கட்டத்தில் உடனுக்குடன் எழுதியவை இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள். அதிகாரத்திற்கு எதிராக எழுதப்பட்ட இக்கதைகளை வெளியிடும் தைரியமும் அறமும் பத்திரிகைகளுக்கு இருந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் விளைவுகளையும் இக்கதைகள் எவ்வாறு பேசியுள்ளன, அவற்றின் புனைவுத்தன்மையும் மொழியும் கட்டமைப்பும் எந்தளவுக்கு இலக்கியார்த்தமானவை என்பதையும், அன்றைய சூழலுக்குள் பொருத்திப் படிப்பதற்கு வாசிரெட்டி நவின் எழுதியுள்ள முன்னுரை போதுமானதாயுள்ளது. சமகால நடப்புகள் மீது கலைஇலக்கிய மனம் கொண்டிருந்த கரிசனத்தையும் வெளிப்பாட்டுணர்வையும் காட்டிச்செல்லும் இந்த முன்னுரையும் கதைகளும் நம்காலத்தின் நிகழ்வுகள் மீது நம்மை மனங்குவிக்கக் கோருகின்றன.
கண்ணியமிக்கதொரு வாழ்வுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நாம் எதை நாட்டின் விவாதப்பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை எழுப்புவதற்காகவேனும் இக்கதைகள் மறுபதிப்பாக வருவது அவசியமாகிறது.
– ஆதவன் தீட்சண்யா
Reviews
There are no reviews yet.