3 reviews for குற்றப் பரம்பரை
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹450.00.₹430.00Current price is: ₹430.00.
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது. கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறபடுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது. நான் ஒரு மனிதன் மனித தன்மையுள்ள எதையும் எனக்கு தொடர்பற்றதாக கருதவில்லை என்பது கார்ல் மார்க்சுக்கு மிகவும் பிடித்தமான வாசகம். வாழ்வில் காணும் சொற்ப அழகாய் மிகை படுத்தி பேரழகாய் காட்டும் போது அழகியல் வெற்றியடைகிறது. மேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகாய் பிரதி பலிப்பதொடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது. அதிலும் கொடூரமும் மூர்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
குற்றப் பரம்பரை
வேல ராமமூர்த்தி
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்க்கையை தலைமுறைகளின் வாழ்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும்.
அருப்புக்கோட்டை, கமுதி, பெருநாழி பகுதிகளில் மக்களின் வாழ்வியல் பதிவுகள் அழகு
கள்ளர் இன மக்களின் பொருளியல் நிறைந்த வாழ்வு எத்தகையகதாக இருந்தது
தனது சமூகத்தில் ஒருவனை காவல்துறை அதிகாரியாக்கி அவரால் ஏற்படும் சமூக மாற்றங்கள் அழகியல் மிகுந்தது
கதைக் கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறப்படுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்குத் தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதைக் கருவை உருவாக்கி வாசகனுக்குத் தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்கப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகைப் பிரதிபலிப்பதொடு
வேல ராமமூர்த்தியின் கலை நின்று விடுவதில்லை!
அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும், நம்மால் உணர முடிகிறது.
அதிலும் கொடூரமும் மூர்க்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார்
கள்ளர் இன மக்கள்
வரலாற்றின் மைல்கல் இந்நூல்
ஒரு சமூகம்,
பண்பாட்டிலும்,
வாழ்க்கை முறையிலும்,
தன்னை மேம்படுத்திக்கொள்ள, தனக்குள்ளேய ஒரு போராட்டத்தை நடத்துவதை விவரிக்கிறது இந்நூல்!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்,
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
Sumi Hari –
ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் இனத்தைத் துரத்தும் போலிஸ்,(அப்போதைய சர்க்கார்)பலரையும் கொன்று குவிக்கிறது சர்க்கார்.வேறு வழியே இல்லாத நிலையில் சம்பங்கி ஆற்றில் குதித்து சிலர் மட்டுமாய் கரை ஒதுங்குகிறது கள்ளர் கூட்டம்.இப்படித் துவங்குகிறது கதை.
அந்த கூட்டத்தின்தலைவர் வேயன்னா,தம் மூத்த பிள்ளை சேதுவையும் போராட்டத்தில் தொலைத்துவிட்டு, கொம்பூதி என்ற கிராமத்தில் தம் மக்களோடு அடுத்த வாழ்க்கையை தொடங்குகிறார்.பெருநாழி,கொம்பூதி,பெரும்பச்சேரி ,இந்த மூன்று கிராமங்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் ஒவ்வொன்றும் நம்மை நடுங்கச்செய்யும்.துருவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை,சர்க்கார் அதிகாரிகளை பழி தீர்ப்பது என எல்லாமே .கள்ளர் கூட்டம் கொள்ளையடிக்கும் பொருள் எல்லாவற்றையும் உணவுக்கும் கள்ளுக்கும் மட்டுமாய் உபயோகிப்பதும்,பொருளின் மதிப்பறியாது,ஏமாற்றப்படுகிறோம் என்பதனையும் அறியாது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்ன என்றும் தெரியாமல் இருக்கும் அவர்களின் வாழ்வியல் அனுதாபத்தையே உருவாக்குகிறது.
கிளைக் கதையில் வரும் வஜ்ராயினியும் மனதைத்தொடும் பாத்திரப்படைப்பு.தொலைத்த மகனாலேயே முடிவடைகிறது வேயன்னாவின் வாழ்க்கை.வாசித்து வெகுநாட்களுக்கு பின்னும் கதையிலிருந்து வெளியேற முடியாது.அருமையான புத்தகம்.
DHIVAKAR J –
வாசிப்பு அனுபவம்..
நூல் : குற்றப் பரம்பரை
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வகை : நாவல்
ஏன் எதுவுமே எழுதத் தோன்றவில்லை?
ஒரு நூல் வாசித்து முடித்தவுடன் அதன் வார்த்தைகளின் லயிப்பில் – அந்த நூலின் செய்திகளின் பிரம்மிப்பிலிருந்து தன் வாசகனை மீள விடாமல் இத்தனை தூரம் கட்டிப்போட ஒரு புத்தகத்தால் இயலுமா? இயலும். இதோ கண்முன் சாட்சியாய் குற்றப் பரம்பரை நூல் வாசித்த பலருண்டு என்னைப்போல்.
களவு, கொள்ளை, கொலை இவற்றையே தொழிலாகக் கொண்டவர்கள் வேலுச்சாமி என்கிற வேயன்னாவைத் தலைவராகக் கொண்ட கொம்பூதி மக்கள். கொள்ளையடித்த பொருளை பச்சமுத்து எனும் ஏமாற்றுக்கார வணிகனிடம் அப்படியே ஒப்படைத்து அவன் தரும் தானிய, தவசங்களால் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் அப்பாவிக் கூட்டம். கொள்ளையையே தொழிலாகக் கொண்டவர்கள் அப்பாவிகளா என்ற வினா எழலாம். அவர்கள் கன்னம் வைத்து கொள்ளையடிப்பது இல்லாதப்பட்ட ஏழைகளின் வயிற்றில் அல்ல. பெட்டி நிறைய பணமிருந்தும் இல்லாதோருக்கு கிஞ்சித்தும் கொடுத்துதவாத கொழுத்த பணக்காரர்களிடமே.
நாவலின் தொடக்கத்தில் காவலர்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் வேலுச்சாமியின் கூட்டத்தினரில் அவர்களால் மறிக்கப்பட்டு, கொல்லப்பட்டோர் போக மீதியுள்ளோரை பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனான வையத்துரை காப்பாற்றுகிறான். இதில் வழிதவறி தப்பிச் செல்லும் வேலுச்சாமியின் மூத்த மகன் சேது ஓர் ஆங்கில அதிகாரி வீட்டில் வளர்கிறான்.
கொம்பூதி மக்களும், பெரும்பச்சேரி மக்களும் வேறு வேறு சாதியினராய் இருப்பினும் தங்களுக்குள் அண்ணன், தம்பியாய் பழகி வருகின்றனர். அதனைக் குலைத்து தனது தொழில் லாபத்திற்காக அவர்களுக்குள் பகையை மூட்டி அதில் குளிர் காய்ந்து லாபம் ஈட்டும் பச்சமுத்து போன்ற கயவர்களை நாளும் நாம் காணத்தான் செய்கிறோம். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உழைக்கும் மக்களை சுரண்டும், அவர்களுக்கிடையில் தீ மூட்டி உண்டு கொழுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கான முடிவு என்னவென்பதையும் நாவலில் உணர வைத்துள்ளார் நூலாசிரியர் திரு. வேல ராமமூர்த்தி அவர்கள்.
பெருநாழி கிராமத்தைச் சேர்ந்தோர் ஊர் கிணற்றில் நீர் எடுக்கக் கூட பெரும்பச்சேரி மக்களை அனுமதிப்பதில்லை. உயிர்போகும் நிலையில் ஒரு குடம் நீரெடுக்கும் ராக்காயியின் கணவன் துருவனுக்கு பெருநாழி ஊர் மக்கள் தரும் தண்டனை கொடுமையின் உச்சம். கொம்பூதி மக்களின் ஆதரவிலும், பாதுகாப்பிலும் பெரும்பச்சேரி மக்கள் கிணற்றில் நீரெடுக்க வருகையில் அதில் மலத்தைக் கொட்டி வைத்திருப்பதெல்லாம் மனிதத் தன்மையிலேயே சேர்த்தியில்லை.
கொம்பூதி வேயன்னாவினை அடக்க வெள்ளையருக்கு தங்கள் ஊரில் கச்சேரி அமைக்க அனுமதியளிக்கின்றனர் பெருநாழி மக்கள். காவலர்கள் வேயன்னாவைப் பிடித்தனரா? அவர்களின் கொள்ளையை அவர்களால் தடுக்க முடிந்ததா? என்பதெல்லாம் மீதிக்கதை.
அதிகாரத்தால் திருத்தமுடியாதவர்களை ஒரே ஒரு சத்தியத்தால் திருத்த முயற்சிக்கின்றான் வழிதப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரியாய் திரும்பும் வேயன்னாவின் மகன் சேது. ஆனால் வேயன்னாவால் பலனடையும் பச்சமுத்து போன்றோர் அதை முறியடிக்க முயற்சிக்கின்றனர். வேயன்னா கூட்டத்தாருக்கு களங்கம் கற்பிக்கின்றனர்.
வேயன்னாவின் இளைய மகன் வில்லாயுதம், நாகமுனியால் நரபலியிட வளர்க்கப்படும் வஜ்ராயினி, அவளை வளர்க்கும் அலி ஹஸார் தினார், வில்லாயுதத்தின் மாப்பிள்ளைக்காரி சிட்டு, வேயன்னாவின் மகள் அன்னமயில், பெரும்பச்சேரியைச் சேர்ந்தவனாய் இருந்தாலும் கொம்பூதி மக்களிலேயே ஒருவனாகிப் போன வையத்துரை, பெருநாழியின் கார்மேக ஆசாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதை விட்டு நீங்காமல் வலம் வருகின்றனர்.
அதிலும் வேயன்னாவின் ஆத்தா கூழானிக்கிழவி தன் செய்கைகளாலும், அனுபவ அறிவாலும் தன் கூட்டத்தை வழிநடத்துவதில் நம்மைக் கவர்கிறார்.
இறுதியில் வேயன்னா தன் மகனான சேதிவின் கையாலேயே துரோகிகளின் வஞ்சனையால் சுடப்பட்டு இறக்கும் போது நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறது.
இந்நூலாசிரியரின் மற்றொரு நூலான பட்டத்து யானை வாசித்துவிட்டு அவரிடம் பேசிய போது, “நீங்கள் குற்றப் பரம்பரை வாசித்து இருக்கிறீர்களா? இல்லையெனில் வாசியுங்கள். அதுதான் மாஸ்டர் பீஸ்” என்றார். உண்மையில் குற்றப் பரம்பரை நூல் ஒரு Master piece தான். வாசியுங்கள். வாசிப்பில் உங்களையே நீங்கள் மறப்பீர்கள்.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ
26/06/20