அர்த்தம் தெரியாமல் இந்த உலகத்தில் பல காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அர்த்தம் இல்லாமலும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.
பூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக புறப்பட்ட பயணத்தைத் தள்ளி வைக்கிறவர்கள் உண்டு. பல்லி விழுந்து விட்டது என்பதற்காக பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறவர்கள் உண்டு.
பகுத்தறிவு சிந்தித்துச் செயல்பட வைக்கும். என்ன செய்கிறோம் என்பதை தெளிய வைக்கும். ஏன் செய்கிறோம் என்பதையும் புரிய வைக்கும்.
அளவுக்கு மீறின சகுன நம்பிக்கைகள் இருக்கிறது பாருங்கள்… அதோடு பயமும் சேர்ந்து கொள்ளுமானால் அவ்வளவுதான். மனிதனின் மனநிலை பாதிக்கப்படும். இது மனவியல் நிபுணர்களின் கருத்து.
ஒருத்தருக்கு ஏழாம் நம்பர்தான் ராசியான நம்பராம். ஏழாம் தேதிதான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பார். ஏழு எழுத்து வருகிற மாதிரி பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஏழு மணிக்குத்தான் தினமும் எழுந்திருப்பார். ஏழாம் நம்பர் வீட்டில்தான் குடியிருப்பார். கல்யாணம்கூட ஏழாம் தேதிதான் பண்ணிக் கொண்டார்.
அவர் ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போனார். குதிரைகளின் பெயரையெல்லாம் பார்த்தார். ஒரு குதிரையின் பெயர் ஏழு எழுத்தில் இருந்தது. ஏழுதானே இவருக்கு அதிர்ஷ்ட நம்பர். அதனால் உடனே அந்தக் குதிரையின் மேல் பணத்தைக் கட்டினார். பந்தயம் நடந்தது. அவர் சொன்னார் சோகமாக: நான் பணம் கட்டின அந்தக் குதிரை ஏழாவதா வந்து சேர்ந்தது!
இப்படி சகுணங்களும், மூட நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மைக் கோமாளிகளாக்கி விடுகின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அருமை நண்பர் மஞ்சை வசந்தன் அவர்கள் சம்பிரதாயங்கள் பற்றி அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலிலே ஆய்வு செய்து தந்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.