Putrilirunthu Uyirththal
தமிழ்நாட்டில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட அனுபவத்தை, பெண்கள் நூலாக இதுவரை பதிவு செய்ததாகத் தெரியவில்லை. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அனுபவத்தை கன்னடத்தில் பி.வி.பாரதி எழுதி, தமிழில் கே. நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் ‘கடுகு வாங்கி வந்தவள்’ என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. அதிலும்கூட நோய் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை. பெரும்பாலும், உணர்ச்சிபூர்வமான அனுபவமாகத்தான் அது இருக்கும்.
அறிவியலோடு அந்த அனுபவத்தைப் பதிவு செய்த மிக முக்கியமான நூல் ‘புற்றிலிருந்து உயிர்த்தல்’. வழக்கமாக கேன்சர் பற்றிய பதிவாக இருக்கும் நூல், நோயாளியின் பயங்களை, வலியை மீண்ட விதத்தை கழிவிரக்கத்தோடோ அல்லது துணிவூட்டும் வகையிலோ இருக்கும்; கேன்சர் பற்றிய அனுபவப் பூர்வமான தகவல்களை, பரிவுமிக்க ஆலோசனைகளை முன்வைக்கும். ஆனால், சாலை செல்வம் எழுதியுள்ள இந்த நூல், அதையும் கடந்து ஒரு மானுடவியலாளரின் மருத்துவ அனுபவமாக விரிகிறது.
தனது கேன்சர் கட்டியைக் கண்டுபிடித்தது, அதற்கு ஜிப்மர் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட ஓராண்டுக்கும் மேலான சிகிச்சை முறைகள், கீமோதெரபி, ரேடியேஷன், தனது இணையரின், அம்மாவின், மகளின், தோழிகளின் கவனிப்பு, தனது உணர்வு நிலைகள் என அனைத்தையும் எழுதியிருக்கிறார். கேன்சரை அறிவியல்பூர்வமாக புரிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகளும், அன்றாடம் சந்திக்கும் மருத்துவர்களைக் கேட்கும் கேள்விகளும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காகத் தன் உடலை, அதில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்கும் தன்மையும் வியக்க வைக்கின்றன.
‘நான் பார்க்கச் சென்ற ஒவ்வொரு மருத்துவரும் கேள்விகளைக் கேட்பர். பொறுமையாக பதில்களை சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல், அவர்கள் கேட்காமலேயே சொல்லிவிடப் பழகினேன். அது அவர்களுக்கு உதவியாக இருப்பதால் என்னை மதிப்பாகப் பார்த்தார்கள். பதில்களைச் சொல்வதுடன், வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் மருத்துவரிடம் நமக்குள்ள கேள்விகளையும் கேட்க வேண்டும்; நாம் உணர்வதைச் சொல்ல வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன். ஏதோ ஒரு பதிலைச் சொல்வது, தெரியாது என்று சொல்வதைக் கடந்து, உரையாடலில் ஈடுபட்ட சமயம், மருத்துவரைப் போலவே நானும் என் நோய்க்கு உதவினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த அனுபவம் நோயாளி நிலையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள உதவியது’ சாலை செல்வத்தின் இந்த வரிகள் முக்கியமானவை. நோயை, பார்வையாளரைப் போல பார்க்கும் தன்மையானது, அதைப் புரிந்துகொள்ள உதவும்.
ஒரு சென்டிமீட்டர் கூட இல்லாத கட்டியை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று தன்னைக் கேட்காத டாக்டர்களே இல்லை என்று சொல்லும் செல்வம், ஆரம்ப நிலையில் மருத்துவத்தை நாடும் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்பதால், மருத்துவர்கள் தன்னை வியப்புடன் கேட்டதாகத் தெரிந்து கொண்டேன் என்கிறார்.
தனது அறுவை சிகிச்சை திட்டத்தை கேட்டுத் தெரிந்துகொண்டு மருத்துவர்களிடம் விவாதிப்பது, கேன்சர் சிகிச்சையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவம் என்று சாலை செல்வம் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை.
‘கீமோ தெரபியால் ஏற்படும் பாதிப்பு தீவிரமாக இருக்க, நான் சந்தித்த கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் தலைமுடியைப் பற்றி பலவாறு கவலை கொள்வதையும் தங்களின் மண்டையை தாங்களே பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விக் வாங்கி அணிவதையும் பார்த்திருக்கிறேன். நான் சும்மா இருக்கும்போது தலையை தடவிக் கொள்வேன். அது எனக்குப் பிடித்திருந்தது. நிஜத்தை சுலபமாக எதிர்கொள்ள என்னால் முடிந்தது பற்றி எனக்கே பெருமையாகவும் இருந்தது. மருத்துவமனையில் எண்ணற்ற மொட்டை மண்டைகளுக்கு இடையில் நானும் ஒரு மொட்டை. அடையாளமற்றுப் போனவள்’ என்று எழுதுகிறார். தீவிர உடல் பிரச்சினை, அதற்கான சிகிச்சை பற்றிய கவலைக்கு இடையே பல பெண்கள் தங்கள் அழகையும், முடியையும் பற்றிக் கவலைப்படுவதை என்னவென்று சொல்வது?
‘உனக்கு என்ன செய்யத் தெரியுமோ, அதை செய்யாதே. எனக்கு என்ன தேவை என்று புரிந்துகொள். எனக்கு மற்றவர்கள் உதவ முன்வரும்போது, அவர்களுக்கு இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றும். உதவ எல்லோருமே தயாராக இருப்பார்கள். என்ன உதவி என உள்வாங்கிச் செய்வதில் சிக்கல் இருக்கும்’ என்ற அவரின் கூற்று, நோயாளிகளுக்கு உதவுபவர்களுக்கான அவசிய ஆலோசனை.
‘நோய் என்று வந்துவிட்டால் வீரவசனம் பேசாது, ரோசம் மானம் ஆகியவற்றை கைவிட்டு பிறரின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டியிருக்கிறது. நம் சமுதாயத்தில் ஓரளவுக்கு, நோயுற்ற முதியோரைப் பராமரிக்கப் பழகியுள்ளோம் என்றாலும், ஆண்கள் பராமரிக்கப்படுவது போல பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பெண் மற்றவர்களுக்கு பணிவிடை செய்பவள் ஆக அறியப்படுகிறார். அதனால், அவள் பணிவிடையை பெறுதல் என்பது சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.’ இந்த வரிகளில் உள்ள நிதர்சனம் முகத்தில் அறைகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமன்றி, அனைத்துப் பெண்களும், ஆண்களும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஒரு நோயாளியாக புற்று நோயை எப்படி எதிர்கொள்வது என்று மட்டுமல்ல, நோயாளிக்கு உதவுபவராக, நோயாளியின் உணர்வுகளை மதித்து அவர் தேவைக்கேற்ப எப்படி உதவுவது என்பதையும் சாலை செல்வம் அருமையாக விளக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.