எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன்.
பொள்ளாச்சி சாலையில் அதிகாலை நேரம் ஒரு ஆண் சடலம் சாலையோரம் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகிலுள்ள காமாட்சிபுரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, அங்கிருந்து எஸ்.ஐ அபு மற்றும் பாலு இருவரின் கள விசாரணையிலிருந்து கதை துவங்குகிறது.
இறந்தவன் யார்? மரணத்துக்குக் காரணம் கொலையா, விபத்தா? போஸ்ட்மார்டம் அறிக்கை, மகஜர், மேன் மிஸ்ஸிங் தகவல், கொலைக்கான பின்னணி, சந்தேகிக்கும் நபர்கள், அவர்களுடனான முன்விரோதம் என விசாரணைகளின் கோணத்திற்கு ஊடாக காவலர்கள் அபு, பாலு இருவரது துறைசார்ந்த அனுபவங்கள், போலீஸ் வாழ்க்கை, குற்றங்களை அணுகும் விதம் என க்ரைம் நாவல் தன்மையோடு விரைவாக பக்கங்கள் தீர்கின்றன. இந்த இடங்களில் கதைசொல்லலின் நேர்கோட்டு காக்கித் தன்மையிலான பார்வை அப்படியே மாற்றமடைந்து இரண்டாம் பாகம் வேறு தளத்திற்குள் புகுகிறது.
கொங்கு மண்டல ரேஸ்கார ஜமீனின் வாரிசாக, சாதி சங்கத் தலைவராக, உள்ளூர் அதிகார வர்க்கமாக தலையெடுக்கும் மனோகரின் வாழ்வும், அவர் வளர்ந்த சாதி, வர்க்க பேதமுள்ள சூழலும், விவசாயப் பாசனப் பிரச்சனைகளால் தென்னையும், மில்களும், கோழிப் பண்ணைகளும் உருவாகத் தொடங்க ஊரின் மாற்றத்துக்கு இடையே சாதி சங்கம் எப்படி அமைப்பாக உருவாகிறது என்பது நாவலின் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப் படுகிறது.
இந்த கொலை வழக்கு முன்விரோதமா? காதல் தகராறா? தலித் வன்கொடுமையா என்ற கோணத்தோடு உண்மை அறியும் குழு ஒன்று மூன்றாம் பாகத்தில் களமிறங்குகிறது
விவசாயிகள் செத்தால் செய்தியாவது வருகிறது. தறி ஓட்டியவன் நிலையை யார் கண்டுகொள்கிறீர்கள் என்று அத்தொழிலின் பிரச்சனைகளை விவரிக்கிற இடங்களும், அரசதிகாரம் எல்லாவற்றையும் எப்படித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது என்கிற உள்ளீடுகளும் பிரசாரமின்றி கதைப் போக்கில் வெளிப்படுத்துகிறார்.
இந்நாவல் ஆணவக்கொலையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதை மையக் கருவாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், நவீன அடிமைதனத்தின் ஒரு பகுதியாக சிறு மற்றும் பெரு நகரங்களுக்கு அருகில் செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள், தவிர்க்கமுடியாத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அதன் தொடர்ச்சியாய் மையம் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் என எல்லாவற்றையும் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.