வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா?
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?
மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
மன்னர்களுக்கெதிராகச் சிறு முணுமுணுப்புக்கூட எழவில்லையா?
தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தில், அந்தப்புரங்களையும் போர்க்களங்களையும் தாண்டி எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் திருடிய செயலுக்காக உயர் பறிக்கப்பட்டாளே சங்ககாலப் பெண் ஒருத்தி.
தான் மேய்த்த மாடு பயத்தம் செடியை மேய்ந்துவிட்டதற்காகக் கண்ணைப் பறிகொடுத்தாரே மிஞிலியின் தந்தை.
வைதீத சமயத்தை எதிர்த்தமைக்காகக் கழுவில் ஏற்றப்பட்டார்களே எண்ணாயிரம் சமணர்கள்.
குடி நீக்கிய பிரம்மதேயங்களும், தேவதானங்களும் உருவாகத் தம் நிலத்தை இழந்தார்களே, பல உழவர்கள்.
பிரம்மதேயமாக மாற்றப்பட்ட கிராமங்களில் கள் இறக்கும் உரிமையை இழந்தார்களே ஈழவர்கள்.
‘வெண்கல் உடைத்து மண்கலம் உடைத்து’ என்ற விதிமுறைப்படி தம் வெண்கலப் பாத்திரங்களைச் சோழப் பேரரசின் சேவகர்களிடம் பறிகொடுத்ததுடன், தம் வீட்டு மட்பாண்டங்களையும் அவர்கள் உடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனரே சோழர்கால வேளாண்குடிகள்.
வீட்டின் முன்புறம் திண்ணை வைத்துக்கொள்ள, மாடிகட்ட, வெள்ளையடிக்கப் போராடித்தானே சோழர்கால இடையர்கள் இவ்வுரிமைகளைப் பெற்றார்கள்.
ஊதியமில்லாத கட்டாய வேலையை ‘வெட்டி’, ஊழியம் என்ற பெயர்களில் செய்து மாய்ந்துபோனார்களே நம் முன்னோர்.
தளிச் சேரிப் பெண்டிர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர்?
அழகான பெண்களைக் கவர்ந்துவந்தும், விலைக்கு வாங்கியும், அவர்களுக்கென ‘அம்முவீடு’, ‘மங்களவிலாசம்’, ‘கல்யாண மகால்’ என்ற இருப்பிடங்களை உருவாக்கிய மன்னர்கள் யார்?
இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை பெண்கள் மீது திணித்த மன்னர்கள் மற்றும் மேட்டிமை சாதியினர் யார்?
இக்கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்தனவா இல்லையா?
இவ்வாறு ஏராளமான கேள்விகளும் ஆய்வுக்குரிய செய்திகளும் தமிழக வரலாற்றிலும் உண்டு; இந்திய வரலாற்றிலும் உண்டு. அதிகாரப் பூர்வமான வரலாற்றுப் பாடநூல்களில் இவை இடம்பெறுவதில்லை.
வரலாறு என்பது மன்னர்கள் இல்லாமல் இல்லை என்ற கருத்து ஆதிக்கம் செலுத்துவதல்தான் வரலாற்று நாடகத்திற்குச் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி நம் பள்ளி மாணவர்கள் அலைகிறார்கள்.
உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மன்னர்களைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும்தான் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.
உணர்த்தப்பட்டிருந்தால் கலிலியோ என்ற விஞ்ஞானி கண்ணை இழந்ததும், புருனோ என்ற விஞ்ஞானி உயிருடன் கொளுத்தப்பட்டதும், மகத் என்ற ஊரின் குளத்து நீரை ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் சென்று அம்பேத்கர் பருகியதும், தஞ்சை மண்ணின் விவசாயிகள் சாணிப்பால் குடித்ததும், சவுக்கால் அடிபட்டதும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்ததும் வரலாற்று நிகழ்வுதான் என்பதை அறிந்திருப்பர்.
நூலின் முன்னுரையில் : ஆ.சிவசுப்பிரமணியன் (பக்: 13-15)
ART Nagarajan –
வரலாறும் வழக்காறும்
ஆ.சிவசுப்ரமணியன்
காலச்சுவடு
நன்றி: தோழர்.முத்துநாகு
“ஆனை துரத்தினாலும் ஆனக்காவில் ஒண்டாதே”
என்கிற இந்தப் பழமொழி
சைவ, வைணவ, சமயங்களில் பகையுணர்ச்சி
நிலவிய காலத்தில்
பேசப்பட்டு வந்தது!
ஒருவனை யானை துரத்தும் நிலையில் கூடத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஆனைக்காவில் ஒதுங்கக் கூடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
இங்கு ஆனைக்காவு என்பது திருவரங்கம் அருகிலுள்ள “திருவானைக்கா” என்ற ஊரைக் குறிக்கும். இது சைவர்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று.
திருவரங்கத்தில் வாழும்
கடுத்த வைணவர்கள் இத்தலத்தை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பதுடன்
அதை வெறுக்கவும் செய்தார்கள்.
எனவே யானை தன்னைத் துரத்தும் இக்கட்டான சூழலில் கூடத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறையாக சைவத்தலமான திருவானைக்கா ஊருக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதனை இப்பழமொழி வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த
சைவ, வைணவ மோதல்களின் ஆழத்தை இப்பழமொழியின் வாயிலாக அறிய முடிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென் மேற்கு கரையில் உள்ள கிராமம் திருக்குறுங்குடி. இது வைணவர்களின் புண்ணியத்தலம்.
இங்குள்ள கோயில் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது
வைணவ சமயத்தின் தலைவராக விளங்கும் ஜீயர்களில் ஒருவர் இங்கு வாழ்கிறார். இக்கோவிலுக்கும் மடத்துக்கும் உரிமையாக வளமான நிலங்கள் ஏராளமாக உள்ளன.
இத்தகைய சமயச் சிறப்பு மிக்க ஊரை மையமாக கொண்டு
‘’தின்பவன் தின்பான் திருக்குறுங்குடியான் தெண்டமிறுப்பான்’’
என்ற பழமொழி மாவட்டத்தின்
பல பகுதிகளிலும் வழக்கில் உள்ளது.
தனக்கு தொடர்பில்லாத ஒரு செயலுக்கோ, ஒரு மனிதனுக்கோ,
தன்னுடைய பொருளைச் செலவழிக்கும் சூழலில் மனம் நொந்து போய் இப்பழமொழியைக் கூறுவர்.
இப்பழமொழிக்குள் சமயத்தின் பெயரால் நிகழ்ந்த சுரண்டல் குறித்த செய்தி மறைந்துள்ளது.
ஜீயர் மடத்துக்கான உரிமையான நிலங்களுக்குரிய பங்கு நெல்லை வாங்குவதற்கு அரசு முத்திரையிட்ட மரக்காலை பயன்படுத்தும் வழக்கம் இந்த மடத்திற்கு கிடையாது. மாறாக அதிக நெல் பிடிக்கும் மரக்காலையே பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு முறைகேடாக பெற்ற நெல்லால்
“மூட முழங்கை நெய்வடிய” பிராமணர்கள் மட்டும் மடத்தில் அறுசுவை உணவருந்துவர்
இது கண்டு நொந்து போன விவசாயிகள் இப் பழமொழியை உருவாக்கியுள்ளனர்.
ஒரு உழைப்புச் சுரண்டலை இந்தப் பழமொழி
வெளிப்படுத்துகிறது.
“கள்ளமரக்கால்” தற்போது மறைந்துவிட்டாலும்
இப்பழமொழி மட்டும் வழக்கில் உள்ளது!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை
31.03.2020.
Thangam –
Sivasubramaniyam ayya noolgal anaithum vasaikanum. Varalarum vazhakkarum mukkiyamana book