DEVADHAIKALIN DESAM
ட்யூஷன் சென்டர் தேவதைகளை காலை ட்யூஷன் தேவதைகள், மாலை ட்யூஷன் தேவதைகள் என்று இரண்டு பிரிவுகளாக என்னைப் போன்ற கல்வியாளர்கள்(?) பிரித்துள்ளனர். காலை ட்யூஷன் தேவதைகளை மேலும் இரண்டாக பிரிக்கலாம். காலை ஆறு டூ ஏழு ட்யூஷன் தேவதைகள் குளிக்காமல் தூங்கி வழிந்த முகத்துடன் வருவதால் கொஞ்சம் மங்கலாகத்தான் இருப்பர். ஏழு டூ எட்டு ட்யூஷன் தேவதைகள் குளித்து முடித்து, பளிச்சென்று வருவதால், அந்த ட்யூஷனுக்குதான் பசங்கள் கும்பல் அள்ளும். அக்காலத்தில் ட்யூஷனுக்கு வருபவர்கள் பெரும்பாலும் நன்றாக படிக்காதவர்கள்தான். எனவே டீச்சர், “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு” என்று சொன்னால் கூட, ‘அதெப்படி?’ என்று தேவதைகள் மலங்க மலங்க விழிக்கும்போது அக்கண்களில் தெரியும் களங்கமற்ற பரிசுத்தத்தை நீங்கள் .இமயமலை நதிகளிலும் காண முடியாது. சில டீச்சர்கள் தேவதைகளை எழுப்பி, “எய்ட் டிவைடட் பை டூ என்ன?” என்ற கடினமான கேள்வியை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கேட்பார்கள். அதற்கு பதில் தெரியாமல் அத்தேவதைகள் அவமானத்தில் கண்கலங்க தவித்தபோதுதான், நம் தேவதாபிமானமற்ற கல்விமுறையை மாற்றவேண்டிய அவசியம் குறித்து நான் முதன்முதலாக சிந்தித்தேன். . அப்போது ஒரு தேவதையிடம் பேசுவது என்பது ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசய சம்பவம். எப்போதாவது தைரியம் வந்து நெஞ்சு படபடக்க, “உங்க பேரு என்ன?” என்று கேட்பதற்குள் நாக்குக் குழறி, மூச்சுத் திணறி, வியர்த்து விறுவிறுத்துவிடும். இவ்வாறு எளிதில் அணுகமுடியாதவர்களாக அந்த தேவதைகள் இருந்ததே அவர்களுக்கு ஒரு காவியத் தன்மையை அளித்தது. நம் இளமைக்காலத்தின் மகத்தான தேவதைகள் இப்போது எங்கோ, யாரையோ திருமணம் செய்துகொண்டு, பிக்பாஸ் விளம்பர இடைவேளைகளில் ரிமோட்டைத் தேடிக்கொண்டோ, டீன்ஏஜ் மகள்கள் தூக்கத்தில் “சீ…” என்று வெட்கத்துடன் சிரிப்பதை திகிலுடன் பார்த்துக்கொண்டோ, புத்தகம் படிக்கும் கணவனின் கண்ணாடியைக் கழட்டி விளையாடிக்கொண்டோ அல்லது தினமும் குடித்துவிட்டு வரும் கணவனுக்காக கண்ணீருடன் காத்துக்கொண்டோ இருக்கலாம்.
Reviews
There are no reviews yet.