இன்று ஏப்ரல் 11, மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாள்…
(குறிப்பு:- 1851-ஆம் ஆண்டு, பூனாவில் மகர், மங் சாதிப் பெண்களுக்கென ஒரு தனிப்பள்ளி திறக்கப்பட்டது. ஜோதிராவும், சாவித்திரிபாயும், பாத்திமா ஷேக் என்பவரின் துணையோடு இப்பள்ளியை நடத்தி வந்தார்கள். 1856-ஆம் ஆண்டு வரை இப்பள்ளி நடைபெற்று வந்தது. இத்தருணத்தில் சாவித்திரிபாய் நோய்வாய்ப் பட்டதால் உடல் நலம் தேற தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சாவித்திரிபாயின் சகோதரர் பாயு அவர் உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொண்டார். அந்நேரத்தில் தன் கணவருக்கு சாவித்திரிபாய் எழுதிய கடிதம் இது.)
10, அக்டோபர், 1856
உண்மையின் உருவான எனது ஜோதிபாவிற்கு
சாவித்திரிபாயின் பணிவான வாழ்த்துக்கள்!
பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இறுதியாக எனது உடல்நலம் முழுமையாக சுமூகநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எந்தவிதச் சோர்வுமின்றி பாயு என்னைக் கவனித்து வருகிறான். உண்மையில், என்மீது அவன் வைத்துள்ள பாசத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. எனது உடல்நலம் முழுவதும் தேறியவுடன், விரைவில் பூனா திரும்பிவிடுவேன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இல்லாதது பாத்திமாவிற்குப் பெரும் இடையூறாய் இருக்கும். ஆனால், நிலைமையை அவர் புரிந்து கொள்வார் என்பதோடு, அதற்காகக் குறைபட்டுக் கொள்ளமாட்டார் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
நானும், என் சகோதரனும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது, பாயு பின்வருமாறு சொன்னான்: “உன்னையும், உனது கணவரையும் சமூகவிலக்குச் செய்திருப்பது நியாயம்தான். இதன்மூலம் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பது உறுதி. நமது குடும்பப் பெயரை நீ நாசம் செய்துவிட்டாய். நீங்கள் நமது சாதியின் வழக்கப்படியும் பார்ப்பனர்களின் கட்டளைப்படியும் நடந்து கொள்ளுங்கள்” என்று அறிவுரை சொன்னான். கண்மூடித்தனமான, பொறுப்பற்ற இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கேட்டு அம்மா வௌ¤றிப் போனாள். மற்றபடி பாயு கருணையுள்ளம் கொண்டவன்தான். ஆனால் முழுக்க, முழுக்க அவன் குறுகிய சிந்தனைப் போக்கு கொண்டவனாகவே இருக்கிறான். நம் இருவர் மீதும் குற்றஞ்சாட்டவும், திட்டவும் அவன் தயங்குவதேயில்லை. ஆனால், அவன் நேருக்கு நேராகத்தான் குற்றம் சாட்டுகிறான். இதைப் பார்த்து அம்மா மிகவும் வேதனைப்பட்டாள். அதற்காக அண்ணனை அவள் திட்டவில்லை. மாறாக, அவனைச் சமாதானப்படுத்துவதற்காக அவனுடன் வாதாட முயற்சி செய்தாள். “இனிமையாகப் பேசுவதற்கான திறமையை கடவுள் உனக்கு அருளியிருக்கிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துவது உன் தகுதிக்குப் பொருத்தமில்லை,” என அம்மா அண்ணனிடம் சொல்வாள். அம்மாவின் பேச்சைக் கேட்ட பாயு மிகவும் வெட்கப்பட்டான். அம்மாவிற்கு பதில் சொல்லாமல் இருந்தான். அண்ணனின் வாதத்திற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “பாயு, உன் கருத்து முழுக்க, முழுக்கக் குறுகிய நோக்கம் கொண்டது. மேலும், பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டு உன் அறிவு பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. பசு, வௌ¢ளாடு ஆகிய மிருகங்களைக்கூட நீ நேசிக்கிறாய். நாகபஞ்சமி போன்ற நாட்களில் நீ நச்சுப் பாம்புகளைப் பிடித்து, அதற்குப் பால் வார்க்கிறாய். ஆனால், உன்னைப் போன்ற சகமனிதர்களான மகர், மங் மக்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதிவருகிறாய். இதற்கு ஒரு நியாயமான காரணத்தை உன்னால் தர முடியுமா? பார்ப்பனர்கள் ‘புனித’ ஆடைகளோடு இருக்கையில், உன்னைப் போன்ற ஆட்களைக்கூட அவர்கள் தீண்டத்தகாதவர்களாகத்தான் கருதுகிறார்கள். நீ அவர்களைத் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடுமென்று அச்சப்படுகிறார்கள். ஒரு மகரைப் போலத்தான் உன்னையும் அவர்கள் நடத்துகிறார்கள்.” என் பதிலைக் கேட்டவுடன் சிவந்த முகத்தோடு என்னை அவன் திருப்பிக் கேட்டாள், “மகர், மங் சாதியினருக்கு நீங்கள் ஏன் கல்விகற்றுத் தருகிறீர்கள்? இதற்காக மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போதும், சபிக்கும் போதும், உங்களுக்கு இடையூறு செய்யும் போதும் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” ஆங்கிலம் கற்பதால் மகர், மங் சாதியினருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை நான் அவனுக்கு எடுத்துச் சொன்னேன். “படிக்காமல் இருப்பது முழுக்கவும் காட்டுமிராண்டித்தனமானது. பார்ப்பனர்கள் பெற்றிருக்கும் உயர்ந்த அந்தஸ்திற்குக் காரணம் அவர்களின் கல்வியறிவுதான். கல்வி யறிவுக்குப் பெரும் மதிப்பு கிடைக்கிறது. கல்வியறிவில் நிபுணத்துவம் பெறும் ஒருவர் தன் தாழ்ந்த அந்தஸ்தைக் கைவிட்டுவிட்டு, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். எனது ஆசிரியர் (ஜோதிராவ் – மொர்) கடவுள் போன்றவர். உலகத்தில் யாரும் அவருக்கு ஈடாக முடியாது. எனது சுவாமி ஜோதிபா கோழைத்தனமான பார்ப்பனர்களின் எதிர்ப்பை எதிர்கொள்கிறார். அவர்களோடு போராடி வருகிறார். மகர், மங் சாதி மக்களும் மனிதர்கள் தான் என அவர் நம்புவதாலும், மற்றவர்களைப் போல அவர்களும் வாழ முயற்சிக்க வேண்டும் என்பதாலும், அம்மக்களுக்குக் கல்வி கற்றுத் தருகிறார். அம்மக்கள் கல்வி கற்க வேண்டும். அதற்காகத்தான் நானும் அவர்களுக்குக் கல்வி கற்றுத் தருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆமாம், நாங்களிருவரும் சிறுமிகளுக்கும், பெண் களுக்கும், மகர், மங் சாதியினருக்கும் கல்வி கற்றுத் தருகிறோம். இதனால், தங்களுக்குத் தொல்லைகள் வரும் என்று கருதிய பார்ப்பனர்கள், இச்செயலை ‘அவக்கேடானது’ எனக் குற்றம் சாட்டுவதோடு எங்களைப் பழித்தும், உன்னைப் போன்ற நபர்களின் சிந்தனையை நச்சுப்படுத்தியும் வருகிறார்கள்……”
“மாபெரும் இந்தப் பணிக்காக என் கணவரைப் பாராட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததையும், அதன் மூலம் இந்த இழிவான மனிதர்களை வெட்கப்படச் செய்ததையும் நிச்சயமாக நீ நினைவில் வைத்திருப்பாய். வெறுமனே கடவுளின் பெயரை முணுமுணுத்துவிட்டு, புனித யாத்திரை செல்லும் உன்னைப் போல் என் கணவன் இருக்கமாட்டார். கடவுள் செய்ய வேண்டிய சொந்த வேலையை அவர் செய்து வருகிறார். அப்பணியில் நான் அவருக்கு உதவியாய் இருந்து வருகிறேன். இந்த மகிழ்ச்சியான பணியைச் செய்வதில் நான் அளவிட முடியாத ஆனந்தத்தைப் பெறுகிறேன். மேலும், ஒரு மனிதனால் சாதிக்க முடிகின்ற இலட்சியங்களையே இப்பணி காட்டுகிறது”.
பாயும், அம்மாவும் நான் சொல்வதைக் கூர்மையாகக் கேட்டார்கள். பாயு தன் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்ததோடு தன்னை மன்னித்துவிடும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டான். “சாவித்திரி, உன் நாவில் சரஸ்வதி கடவுளே உட்கார்ந்து பேசியிருக்க வேண்டும். உனது அறிவைக் கண்ட நான் அளவில்லாத திருப்தி அடைகிறேன்,” என அம்மா சொன்னாள். அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டு நான் திக்குமுக்காடிப் போனேன். இதிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். பூனாவைப் போலவே இங்கும், மக்களிடம் உங்களுக்கு எதிராகப் பலர் விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இம்மாதிரியான நபர்களுக்குப் பயந்து நாம் ஏன் பணியைக் கைவிட வேண்டும்? இதற்குப் பதிலாக நாம் இன்னும் ஆழமாக அப்பணியில் ஈடுபட வேண்டும். எதிர்காலத்தில் வெற்றி நமக்கே!
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
மிகத்தாழ்மையுடன்
உங்கள் சாவித்திரிபாய்
நன்றி – மாதவ் கட்டா
ART Nagarajan –
மகாத்மா ஜோதிராவ் புலே
தனஞ்செய்கீர்
தமிழில்.வெ.கோவிந்தசாமி
மகாத்மா காந்தியால் உண்மையான மகாத்மா
என்றழைக்கப்பட்டவரும்,
சமூக புரட்சியின் தந்தை
என அம்பேத்கரால்
வர்ணிக்கப்பட்டவரும்,
ஜோதிராவ் புலே.
அண்ணல் அம்பேத்கர் புலேயின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பினார்.
சமூக சமத்துவத்தை நிலைநாட்டாமல்
பொருளாதார சமத்துவத்தை நிலைநிறுத்த முடியாது
என்று போராடியவர் புலே.
வகுப்பு வாதத்தைவிட
“சாதியம் அபாயகரமானது”
என்று உறுதிபட கூறியவர் மகாத்மா புலே.
தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப் பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை,
காலங்காலமாக
கல்வியறிவு பெற்று வந்த
தலைமுறையில் பிறந்த
பார்ப்பன மாணவர்களோடு
ஒப்பிடுவதே “தகுதி” என்று
மிக நுட்பமாக தந்திரவாதம் பேசியவர்களை
அடையாளம் காட்டியவர்
மகாத்மா ஜோதிராவ் புலே .
ஆங்கிலத்தை கற்றுக்கொள்வது தீட்டு ஏற்படுத்தும் என்பதோடு பார்ப்பனத் தன்மையை அகற்றிவிடும் என வைதீகர்கள் நம்பிவந்ததை அம்பலப் படுத்தியவர் ஜோதிராவ் புலே.
பிராமண விதவை பெண்களை மொட்டையடித்ததற்கு எதிராக தனது மனைவி “சாவித்திரி புலே” தலைமையில் போராட்டம் நடத்தி வென்றவர் புலே.
தானும், தனது மனைவி
சாவித்திரி பூலேவோடும் பல்வேறு கிராமங்களில் ஆதி சூத்திரப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கல்வி கற்பித்தவர் மகாத்மா ஜோதிராவ் புலே.
கல்வி கற்றுக்கொடுக்க செல்லும்போது இரண்டு உடைகளோடு செல்லும்
அம்மா சாவித்திரிமீது
மலத்தை வீசிய பிராமணர்கள் மீது கோபம்கொள்ளாமல் அவர்களையும் வென்றெடுத்தவர் ஜோதிராவ் புலே.
உண்மையில்
இந்திய பேரரசு இவர்களின் பிறந்த நாளையே
“ஆசிரியர் தினம்”
கொண்டாடியிருக்க வேண்டும்.
இவர்களின் வரலாற்றை ஒவ்வொரு ஆசிரியர் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும்
வாசிக்க வேண்டும்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும் !
புத்தக வாசல், மதுரை.
ART. நாகராஜன்