தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும். அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது.
வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கபடுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல் போல தான் காதலும் . அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது. ஆனால் அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது.பிரிவே காதலை உணர செய்கிறது.
அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் வெண்ணிற இரவுகள் நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கின்றன.
– எஸ்.ராமகிருஷ்ணன்
Poonkodi Balamurugan –
இந்த புத்தகத்தை வாசித்து வார்ததைகளில் வெளிப்படுத்த முடியாத கனத்தை அடைந்ததாக நம் நண்பர்கள் பதிவிட்டிருந்தது உண்மைதான். இரவு நேரத்தில் படித்ததால் இரவு முழுவதும் கதையையும் வாழ்வின் சில பகுதிகளை ஒப்பிட்டுமே துயிலா இரவாயிற்று.
வாழ்வில் தாங்க முடியாத வலிகள் என்று தனிமையையும் , நிராகரிப்பையும் சொல்வார்கள். அப்படிப்பட்ட தனிமையை துணையாக கொண்ட இரு மனங்களின் கதைதான் இது. ஏன் இதற்கு வெண்ணிற இரவுகள் என்று பெயர் வைத்தார்கள் என்ற யோசனை. வெண்ணிற இரவுகளுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. உறங்கா இரவுகள். மற்றொன்று இரவிலும் சூரியன் ஔிரக்கூடிய இரவு. மிட் சம்மர் என்று சொல்லக்கூடிய ஜூன் மாதங்களில் மையப்பகுதியில் ரஷ்யாவின் பீட்டர்பெர்க் நகரில் நீண்ட பகல் நேர இருக்குமாம். காலை மூன்று மணி தொடங்கி இரவு பத்து மணி வரை பகல் நீளும். அதை விழாவாக கொண்டாடுவார்களாம். தஸ்தாயெவ்ஸ்கி அந்த நகரில் வசித்தவராகையால் அந்த நினைவில் இந்த நினைவில் வெண்ணிற இரவுகள் தலைப்பிட்டிருக்கலாம்.
கதையின் நாயகனே இந்த கதையை சொல்வதாக இருக்கிறது. நிறைய பேச நினைக்கின்ற ஆனால் யாருடனும் பேசாமல் கனவுலகில் வாழ்க்கையைத் தேடும் ஒரு இளைஞன். பகலில் தன்னை ஔித்துக்கொண்டு இரவில் நடமாடும் ஒருமனிதன். யாருடனும் பேசமாட்டான் ஆனால் நகரின் ஒவ்வொரு வீடுகளுடனும் அவன் உரையாடுவது போல் இரவில் நினைத்துக் கொள்வான்.உலகத்தையே நேசிப்பவன். ஆனால் தன் மீது யாருக்கும் நேசமில்லை என்று உள்ளே அழுபவன். யாருடனும் பேசாமல் ஒரு அடர்ந்த மௌனத்திற்குள் தன்னை ஆழ்த்திக்கொள்கிறான்.
ஓரிரவு அப்படி இரவு வலம் செல்கையில் தனிமையில் ஒரு பெண் நின்றுகொண்டு கால்வாயின் கரிய நீரைப்பார்த்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக தோன்ற மௌனமாய் அவளைக் கடக்க முயல்கையில் அவளின் மெல்லிய விசும்பலொலியில் திகைத்து நிற்கிறான். அவளுடன் பேச யத்தனிக்கையில் இவனைக் கண்டதும் நகர்ந்து கால்வாயைக் கடந்து எதிர்ப்பக்கம் சென்று அங்குள்ள நடைபாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டாள். தீடிரென்று ஒரு நீளமான கோட் அணிந்து வந்த நபர் ஒருவர் துரத்த கதையின் நாயகன் காப்பற்ற அவன் கைகளைப் பற்றிக் கொள்கிறாள். இப்போது அவன் கைகள் நடுங்கலாயிற்று. விந்தையாய் கேட்கையிலா இதுவரை இப்படி பூப்போன்ற மென்மையான கைவிரல்களை பற்றியதில்லை எனவும் எந்த பெண்ணிடமும் பேசியதில்லை என்கிறான். கூச்ச சுபாவம் பேசியதில்லை என்ற சொன்னவன் அதன் பிறகு அவன்மௌனம் கசியக் கசிய மடை திறந்த வெள்ளமாய் பேசுகிறான். இனியொரு இரவு வாழ்ககையில் வரப்போவதில்லை இன்றே அனைத்தும் பேசித் தீர்த்து விட வேண்டும் போலிருந்தது அவன் நீண்ட நெடிய உரையாடல்கள். அவன் மீது நம்பிக்கையும் , பரிதாபமும் கொண்ட பெண் மறுநாளும் அவனை சந்திப்பதாக உறுதி கொடுக்கிறாள்.
வெறும் நான்கு இரவுகளும் ஓர் பகலும் மட்டுமே கதைக்களமாக வருகிறது. அடுத்த இரவில் அவள் பெயரை அறிகிறான். நாஸ்தென்கா…ஆஹா ..பேரை சொல்லிப்பார்ப்பதிலேயே தித்திப்பு அடைகிறான். நாதென்காவின் கதையும் இவனைப் போலவே தனிமைத் துயர் நிறைந்தது தான். கண்தெரியாத ஒரு பாட்டியின் நிழலில் வாழும் பெண். பாட்டியைத் தவிர தனிமை மட்டுமே அவளுக்குத் துணை. பாட்டி தன்னை விட்டு அவள் போகாமல் இருக்க அவளின் உடையுடன் சேர்த்து தன் உடையை ஒரு ஊசி வைத்து பிணைத்துக் கொள்கிறாள். அவள் தனிமயை உடைக்கவும் ஒருவன் வருகிறான். அவள் வீட்டு மாடியில் குடியிருக்கும் ஒரு இளைஞன். இவள் தனிமையை அறிந்து கொண்டு புத்கங்கள் கொடுக்கிறான். புத்தகங்கள் மூலம் அவள் வெளி உலகம் காண்கிறாள். தன்னை மீட்க வந்த மீட்பராகவே அவள் கனவு காண்கிறாள். சூழ்நிலையால் அவன் பிரிந்து சென்று விட ஓராண்டு கழித்து அவளைச் சந்திப்பதாகச் சொன்ன வாக்குறுதியின் பேரில் காத்திருப்பாகச் சொல்கிறாள். அவளை காதலிக்க தொடங்கியிருந்த அவனுக்கு அந்த செய்தி திடுக்கிடலாக இருந்தாலும் அவளை காதலுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான். இறுதியில் என்னவாயிற்று என்பதுதான் கதை.
இந்ந கதையில் வரும் கனவுலகவாசியும், நாஸ்தென்காவும் காதலின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காதலே தங்களுக்கான விடுதலையைத் தரக் கூடியது என்று தீர்க்கமாய் நம்புகிறார்கள். இரவினில் அடங்கமறுக்கும் பகல் போல தான் காதலும். ஆனால் அது மனிதர்களை நிம்மதியற்று போகவைக்கிறது. ஆனால் அந்த வலியும் அலைக்கழிப்பும் காதலுக்கு அவசியம் தான் போலும்.வலியில் காதல் வளர்கிறது. பிரிவே காதலை உணரச் செய்கிறது. கண்டிப்பாக இந்த கதையை படித்தால உங்கள் இரவுகளும் வெண்ணிற இரவுகளாய் மாறும் என்பதில் வியப்பேதும் இல்லை.
Kathir Rath –
கொஞ்ச வருசத்துக்கு முன்ன சிவாஜி நடிச்ச “கர்ணன்” படத்தை டிஜிட்டலைஸ் பண்ணி ரீரிலிஸ் பண்ணிருந்தாங்க, அப்ப தியேட்டருக்கு போய் படம் பார்த்தவங்களை பேட்டி எடுத்து போட்டுருந்தாங்க, அதுல ஒருத்தர்
“நடிகர் திலகம் மாதிரி வருமா? பொறாமை புடிச்ச தொப்பித்தலையன் குருப்பும் போட்டிக்கு அவன் படத்தை ரிலிஸ் பண்ணிருக்காங்க, ஆனா ஈ காக்கா கூட பாக்க போகலை” ன்னு சொல்லிருந்தார்.
எனக்கு ஆச்சர்யம், என்னா எம்ஜிஆர், சிவாஜி ரெண்டு பேரும் இறந்த பிறகு நடக்கற சம்பவங்கள் இது, மனுசங்க எப்படில்லாம் அவங்களுக்கு பிடிச்சவங்களை கொண்டாடறாங்க, ஆனா இது மாதிரி வாசகர்கள் தங்களுக்கு பிடிச்ச எழுத்தளார்களை அவங்களோட படைப்புகளை கொண்டாடுனா எவ்வளவு நல்லாருக்கும்னு தோணுச்சு
எனக்கு அப்ப தெரியலை, அப்படில்லாம் கொண்டாடுவாங்கங்கறது எனக்கு அப்ப தெரியாது.
ஆனா நாளாக நாளகத்தான் இரஷ்ய இலக்கியங்கள் பத்தின அறிமுகங்கள் கிடைச்சது, அதுக்கு உலகம் முழுக்க இருக்க வரவேற்பு பத்தி தெரிஞ்சது
இன்னமும் உலகின் தலைசிறந்த நாவல் டால்ஸ்டாயோட “போரும் அமைதியும்” ஆ அல்லது தஸ்தவ்ஸ்கோயோட “குற்றமும் தண்டனையும்” ஆ ன்னு விவாதம் போயிட்டுருக்கு, ரெண்டும் வந்து 100 வருசத்த தாண்டிருச்சு
அதே மாதிரி இரண்டாவது இடத்துக்கும் இவங்களுக்குள்ளதான் போட்டி, மூன்றாவது இடத்துக்கும் அவங்க நாவலேதான் போட்டிக்கும் வரும்
அப்படிப்பட்ட படைப்பாளிகள் இருவரும், அதுவும் தஸ்தயேவ்ஸ்கிய வாசிக்கனும்னா கொஞ்சம் சாதாரண மனநிலையில்லாதவங்களோட பழகிருந்தாதான் புரியும்
தமிழ்ல பிரசாந்த் நடிச்சு “ஹலோ” ன்னு ஒரு படம். பிரசாந்துக்கு பிரண்ட்ஸ் கூட விசேச நிகழ்ச்சிகளுக்கு போக பிடிக்காம சொல்ற பொய்தான் படத்தையே வேற பக்கம் திருப்பும். அப்ப ஒரு கேள்வி வரும், இது என்ன சப்பையா ஒரு காரணமுமே இல்லாத பிரசாந்த் கேரக்டர்ல பொய் சொல்லுதுன்னு
ஆனா என்னால அதை புரிஞ்சுக்க முடியும், ஏன்னா நான் அந்த கேரக்டர்தான், எந்த பிரண்ட்ஸ் வீட்டு விசேசத்துக்கும் போக முடியாது, அதை அவாய்ட் பண்ண நிறைய பொய் சொல்லுவேன். இதை நான் என் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னப்ப இப்படில்லாம் யாராவது இருப்பாங்களான்னு தான் கேட்டாங்க
தஸ்தவ்ய்ஸ்கி எழுத்துல வரவங்களும் இப்படித்தான், நாம நார்மல்னு நினைக்கற மனநிலைல இருக்க மாட்டாங்க
ஒரு புத்தகத்தை பத்தி சொல்றேன்
பீட்டர்ஸ்பர்க்னு ஒரு நகரம், அது ரஷ்யால வட துருவத்துல இருக்கு, கோடை காலத்துல அங்கே நைட்டு 10 மணிக்கு சூரியன் மறைஞ்சு காலைல 3 மணிக்கு உதிச்சுரும், இடைப்பட்ட காலத்துலயும் வானம் முழுசா இருட்டிடாது, இதை குறிப்பிடற மாதிரியும் தனிமைங்கறத குறிப்பிடற மாதிரியும் white nights னு ஒரு குறுநாவல் எழுதறார். தமிழ்ல அது #வெண்ணிற_இரவுகள் னு வருது
ஒரே இடம்,
4 இரவு ஒரு பகல்
ஒரு பெண், இரு ஆண்கள்
அவ்வளவுதான் கதைக்களம்
மனுசனை ரொம்பவும் பயமுறத்தற ஒரு விசயத்தால பாதிக்கப்பட்டவன்தான் கதையின் நாயகன், அந்த விசயம் என்னன்னு யூகிச்சிருப்பிங்க, தனிமை. அவங்கூட யாரும் பழகறதில்லை, அவனாலயும் யார் கூட பழக முடியலை, ரொம்பவும் கூச்ச சுபாவம், தனக்குத்தானே மனசுக்குள்ள தன்னோட உணர்வுகளை புத்தகம் எழுதற மாதிரி எழுதி வச்சுக்கற கேரக்டர், உன் மனசுல இருக்கறத சொல்லுன்னு கேட்டா ஒரு புத்தகத்தை பார்த்து வாசிக்கற மாதிரிதான் சொல்லுவான்
பேசறதுக்கு மனுசங்க யாருமில்லாததால கண்ல படற அத்தனை விசயங்களோடயும் பேசிக்கற குணம். ஒரு வீட்டை பார்த்தா, அந்த வீடு “நண்பா என்ன ஒரு வாரம் இந்த தெரு பக்கம் வரலை, எனக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சுட்டாங்க பார்த்தியா, நல்லாருக்கா?” ன்னு கேட்கறதா இவனுக்கு தோணும்.
அவனோட கூச்சம்தான் அவனோட தனிமைக்கு காரணம், எந்தளவுக்கு கூச்சம்னா திடிர்னு முன்னாடியே சொல்லாம அவனை பாக்கறதுக்கு அவன் வீட்டுக்கு வந்த நண்பனை எப்படி வரவேற்கனும்னு தெரியாம திகைச்சு நின்னுருவான், பதறுவான், பேச்சு வராது.
அவ்வளவு தனிமைல இருந்தாலும் அவனுக்கும் மனிதர்களோட பழகனும், காதலிக்கனும்னு எல்லா ஆசையும் உண்டு
அந்த 26 வயசு வாலிபன் ஒரு நாள் இரவு ஒரு பெண்ணை சந்திக்கறான்
முதல் நாள் அறிமுகமாகறாங்க
இரண்டாம் நாள் தத்தம் கதைகளை பகிர்ந்துக்கறாங்க
மூன்றாம் நாள் அடுத்த கட்டத்தை திட்டமிடறாங்க
நான்காம் நாள் முடிஞ்சுருது
இந்த கதை வந்து 170 வருசமாகுது, இந்த கதைய ஹாலிவுட்ல 8 முறை படமெடுத்துட்டாங்க, ஹிந்தில 3 முறை, நம்ம தமிழ்ல இந்த கதையோட தாக்கத்துல பல படங்கள் வந்துருச்சு, ஆனா முழுக்க இந்த கதையோட ஜீவனை கடத்த முயன்றதுல ஓரளவு வெற்றி பெற்ற படம் ஒன்னுதான். அது நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும், தெரியாதவங்க இந்த கதைய படிச்சுட்டு யூகிக்க முயற்சி பண்ணுங்க.
ப.தாணப்பன் –
#வெண்ணிற இரவுகள்..
#ஃபியோதர்தஸ்தாயெவ்ஸ்கி…
காதல் என்றென்றுமே சுகமானது. சோகமானால் அது ஒரு சுகமான சுமை. எல்லோரின் மனதினிலும் ஆதிக்காதல் சிறுநெருஞ்சியாய் நிச்சயம் குத்திக்கொண்டிருக்கும். அந்த வலியினை உணரவே இயலும். உணர்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். சொல்ல எண்ணும் போதே முகம் அத்தனைப் பிரகாசம் அடையும்.
1848ல் எழுதப்பட்ட கதை. கிட்டத்தட்ட 172 ஆண்டுகளைக்கடந்து இன்னமும் நெஞ்சினைத் தைக்கிறதென்றால்…அநேகமாக தஸ்தாயெவ்ஸ்கியின் அனுபவமாகவே இருந்திருக்கக்கூடும். இல்லையெனில் இத்தகையதொரு உணர்வுப் பிராவகத்தை அத்தனை நேர்ததியாகப் படைத்திருக்க இயலாது.
நான்கு இரவு ஒரு பகலில் நடந்து முடிந்திடும் கதை. ஒரு பெண்..நாஸ்தென்கா..இரு ஆண்கள்.. பாட்டி வீட்டில் வாழும் நாஸ்தென்கா பாட்டியின் உடுப்பினில் இவள் உடுப்பினை ஊக்கினால் கட்டப்பட்டே இருக்கிறாள். அவளது வாழ்வினில் வரும் காதல். எதனை ஏற்கிறாள்.? என்பதே கதை.. நண்பனாக ஆனால் காதல் வயப்பட்டவனாக ஒரு கதாபாத்திரம். காதலிக்கப்படுபவனாக இன்னொரு கதாபாத்திரம். இரண்டு பெண் துணை கதாபாத்திரங்கள்.. அவ்வளவுதான்…கதா பாத்திரங்கள்.
“தனிரகமா.? தனி ரகமென்றால் கிறுக்கு ஆள். வேடிக்கையான ஆள் என்று அர்த்தம். இதைச் சொல்லி விட்டு அவளுடைய சிரிப்பிலே நானும் சேர்ந்து கொண்டு சிரித்தேன்.அது ஒரு தனிவகைக் குணச்சித்திரத்தைக்குறிப்பதாகும்.”
இப்படி ஒரு பத்தி வரும் இது ஒரு கதாபாத்திரம்.
ஐவன்ஹோ எழுதிய வால்டர் ஸ்காட்டையும் அதுபோன்றதொரு நூல்களை வாசிக்கும் வாசிக்கக் கொடுக்கும் கதாபாத்திரம்.
நமக்குத் துன்பம் ஏற்படும் பொழுதுதான் அடுத்தவருடைய துன்பத்தை நாம் மேலும் கூர்மையாக உணர முடிகிறது. அப்பொழுது நமது உணர்ச்சி மேலும் கூர்மையாகிறதே ஒழியக் குலைந்து போவதில்லை என்று ஒரு பத்தி வரும்.. அவனின் உணர்வுகளை சரியாக சரியான வார்த்தை இட்டு நிரம்பி நமக்குக் கடத்தும் கிருஷ்ணைய்யாவின் மொழிபெயர்ப்பு.
வலியினை உணர்த்த உபயோகித்த வரிகள் இவை..” மேற்கொண்டு சொல்ல வேண்டாம். புரிகிறது” என்றாள். பொல்லாதவள். திடுமென யாவற்றையும் புரிந்து கொண்டு விட்டாள். அப்படியே மாறும் இக்காட்சி..
டிஸ்கவரி பேலஸ் வெளியிட்ட இப்புத்தகத்தில் எஸ்ராவின் இந்நூலைப் பற்றிய அறிமுகம் ஒன்பது பக்கங்கள் இருந்தன. முதலில் வாசித்து கதைக்குள் சென்று மீண்டும் வாசிக்கையில் வெவ்வேறு உணர்வுகளைத் தந்தது அவ்வறிமுகம்.
மூன்று இரவு, ஒரு பகல் ஒரு பெண் இரு ஆண் என மூன்று கதாபாத்திரங்கள் மூலம் 96 (!!) பக்கங்களில் காதலைக் கடத்தி விடமுடிகிறதென்றால் அதுவே தஸதாயெவ்ஸ்கியின் மாபெரும் வெற்றி. காதலின் மகத்துவம் அப்படியா.? உணர்ந்தவனும் உணராதவனும் உணர்ந்துகொள்வர் வாசிப்பனுவத்தால்.
நின்காதல் நிழல்தன்னில்
நின்று மகிழ்வோம்
மின்னி மறையும்
கண்ணிமைப் பொழுதினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ.?
– இவான் துர்கேனேவ்
என்சிபிஹெச்சும் இதனை பதிப்பித்திருக்கிறது.
#வெண்ணிறஇரவுகள்..
#தஸ்தாயெவ்ஸ்கி…
#தமிழில்
#ராகிருஷ்ணைய்யா
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 80
பக்கங்கள்.96
designerrahavendra –
https://www.youtube.com/watch?v=H5iQs9Pt87s
இக்காணொளி பதிவு ‘வெண்ணிற இரவுகள்’ நாவலைப் பற்றியதாகும். இந்த நாவல் எப்படிப்பட்டது? இந்நாவலை ஏன் வாசிக்க வேண்டும்? என்பது பற்றிக் கூறும் காணொளிப்பதிவு.
காணொளியைக் கண்டு தெரிந்து, இந்நாவலை கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள்.
நன்றி