வகுப்பறைக்கு வெளியே
“மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம். குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக், செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது…”
சீ.ப்பி. செல்வம் –
எங்க அம்மா ஒடம்பு எலும்பா இருக்கும் சார்….
புத்தகத்தின் உள்ளே சென்றால் ‘என்னோட அப்பா நான் சின்ன வயசா இருக்கும்போதே செத்துட்டாராம் சார். அப்புறம் எங்க அம்மா ஒரு அட்ட கம்பெனியில வேல பாக்குறாங்க சார். எங்க வீடு மண்சுவர் இருந்ததை மாத்தி, கொஞ்சம் செங்கல் வாங்கி சுவர் வச்சோம் சார். அப்ப எங்க வீட்டுக்கு வேலை பார்க்க ஒருகொத்தனார் அண்ணன் வந்தாங்க சார். பக்கத்து வீட்டுலயெல்லாம் கூட கொத்தனார் வேல முடிஞ்சதும் அந்த அண்ணன் எங்க வீட்டிலேயே தங்கிட்டாங்க சார். ஆனா அந்த அண்ணன தங்க கூடாதுன்னு எங்க பெரியப்பா சொல்லிட்டாங்க சார். எங்க அம்மாவும் எங்களைப் பாத்து கேக்குறாங்க சார், அந்த அண்ணன கல்யாணம் பண்ணிக்கலாமான்னு. என் அம்மா தெனமும் அட்ட கம்பெனிக்குப் வேலைக்கு போயி ஒடம்பு எலும்பா இருக்கும் சார். அந்த அண்ணன் எங்க அம்மாவ இன்னொரு குழந்தை பெத்துக்க சொல்றாங்களாம் சார். அவங்க உடம்பு தாங்காது சார்னு… அழுதுகொண்டே சொல்லும் அலமேலு ‘என்னோட தம்பிய ஆம்பள பசங்க படிக்கிற ஹாஸ்டல்லயும் எங்க அம்மா இந்த பள்ளிகூடத்துல பெண்கள் ஹாஸ்டலில் என்ன சேத்துட்டாங்க சார். எங்கம்மா இப்போ அந்த அண்ணன் கூட தான் எங்க வீட்டில இருக்காங்க சார். 12 வருஷமா எங்க அம்மா கூடவே இருந்தேனா… அதான் சார் எனக்கு என்னமோ போல இருக்கு… என்று வகுப்பறையில் மாணவி எழுதிய கடிதத்தை ஆசிரியர் ஆராய்ந்து பார்க்கும் போது தன்னுடைய சுமையை இறக்கி வைக்க நினைக்கும் அலமேலுவின் சுமை எவ்வளவு கனமானவை… குடும்ப சூழலில் சிக்கித்தவிக்கும் பிஞ்சுகளுக்கு விரல் பிடித்து எழுதச் சொல்லும் ஆசிரியர்களை விட எதிர்காலத்தைக் காட்டும் வழிகாட்டியாக இருப்பது அவசியமாகவும் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது…
#என்_பையனுக்கு_தானே_நான்_உசுரையே_வெச்சிருக்கேன்_சார்…
‘திருமண மண்டபத்தில் வேல பாக்குறேன் சார். ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி சார். சார் இந்த பரமசிவனோட அப்பா ஒரு பொம்பளையோட ஓடிப்போயி பத்து வருஷம் ஆச்சு, சொந்த வீடு இல்லை, என் தங்கச்சி வீட்டு பக்கத்துல ஒரு கொட்டகை போட்டு இருக்கு இருக்கேன் சார். என்னோட பையன விட்ராதீங்க சார்’. இவ்வாறு சொன்ன பரமசிவனுடைய அம்மா குப்பை ஏற்றிய டிராக்டரின் பின் சக்கரம் ஏறி காலை உடைத்துக் கொண்டு வீட்டிலை படுக்கையாக கிடக்கிறார். பள்ளிக்கூடம் வராமல் இப்ப பரமசிவம் பெயிண்ட் வேலைக்கு போயி ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி வாங்குகிறான். இப்ப பள்ளிக்கூடம் வரவில்லை… பாயாசம் பரமசிவம் என்று கேலி செய்யும்போது அழுத பரமசிவம் அப்போது மட்டும்தானா அழுதுகொண்டு இருந்தான்… உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போதும்.. சம்மட்டி தூக்கி அடிக்கும் போதும் அவன் அழுதிருப்பான் தானே…
#எம்புள்ளையாவது_படிக்கட்டும்_கொஞ்சம்_பாத்துக்கங்க_சார்…
எப்போதும் நிறைய பணம் செலவு செய்யக் கூடிய வினோத் பள்ளிக்கூடம் வராமல் போக ஆசிரியர் அவனை தேடி சென்ற போது வினோத்தின் அப்பாவை சந்திக்கிறார். வினோத்தின் அப்பா இவ்வாறு சொல்கிறார் ‘வாட்ச்மேன் வேலை பாக்கறேன் சார். கட்டிட வேலை பார்க்கும் போது சாரம் சரிந்து என்னுடைய ஒரு கால் ஊனமாயிட்டு சார். அவ சித்தாள் வேலைக்கு போறா சார். என்னோட பையன் எப்படி சார் படிக்கிறான்… அவனுக்கு எந்த கஷ்டமும் தெரியாமல் படிக்க வைக்கிற சார். நான் தான் அப்பவே இரண்டாம் கிளாஸோட நிறுத்திட்டேன். என் பிள்ளையாவது படிக்கட்டு சார். கொஞ்சம் பாத்துக்கங்க சார்’. அதற்கு பிறகு இரண்டு மாதம் கழித்து பள்ளிக்கூடம் வராமல் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தியேட்டரில் டிக்கெட் விற்பதும் எவ்வளவு துயரமான காட்சி… குடும்பமும் குடும்பம் சார்ந்த இந்த சூழலும் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறது என்பதை விட கஷ்டத்தின் உடும்பு பிடியில் குடும்பத்தோடு தன்னையும் ஐக்கியமாக்கி கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது இந்த குழந்தைகளுக்கு…
#கடவுள்_வுட்டபடி_ஆவட்டும்_சார்…
பள்ளிக்கூடத்திற்கு லேட்டா வந்த இருசப்பனிடம் காரணம் கேட்டபோது ‘மணல் வண்டி ஓட்டும்போது சக்கரத்துக்கு கீழே காலுமாட்டி அப்பாவுடைய எலும்பு உடைஞ்சட்டு சார். மாவுக்கட்டு போட்டு இருக்காங்க. நடக்க ஆறு மாசம் ஆகும்னு சொல்றாங்க சார். அம்மா கள வெட்ட போறாங்க சார். அக்கா பத்தாங்கிளாஸ் படிச்சிட்டு தய்யல் கிளாஸ் போகுது சார். ஸ்கூல் முடிஞ்சு சாயங்காலம் வண்டி பூட்டி ஆத்துல மணல் எடுத்து வந்து நைட்டுல வீட்டில நிறுத்திடுவேன் சார். அடுத்த நாள் காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்திருச்சு வண்டி பூட்டி டவுனுக்கு போயி அந்த மண்ணை வித்துட்டு வேகமாக வந்து ஸ்கூலுக்கு வருவேன் சார்’ ன்னு சொல்லும் இருசப்பனின் சூழலை புரிந்து கொண்டு வீட்டிற்கு சென்று, இருசப்பனின் அப்பாவிடம் கேட்கும்போது ‘என்னோட கால் உடைஞ்சு போச்சு சார். வண்டி ஓட்டி தான் வயித்த கழுவுறோம் சார். உழைக்கிற மாட்டுக்கு தீணி வேற சார்.ஒரு வயசு பொண்ணு இருக்கு, அதை கரை சேக்கனுமே சார். வாங்க சார் பார்த்துக்கலாம்…கடவுள் வுட்டபடியே.. ஆவட்டும் சார் என்று முடிக்கிறார் அவர். இனிமேல் இருளப்பன் பள்ளிக்கு வரமாட்டான் என்று முடிவுக்கு வருகிற அந்த தருணம் இனி இதுபோன்ற நிலை குழந்தைகளுக்கு வரவே கூடாது என்று எண்ண வைக்கிறது.
#ஆனா_ஸ்கூல_விட்டு_மட்டும்_நிறுத்திடாதீங்க_சார்…
இங்கிலீஷ் சரியா படிக்காத தமிழரசனின் அப்பாவை வரச்சொல்ல, அவனுடைய அப்பா பேசுகிறார் ‘அவனுக்கு இங்கிலீஷ் வராதது யார் தப்பு சார்?, மத்த எல்லா படத்தையும் நல்லாத்தானே படிக்கிறான். எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணனும் சார். எது வேணாலும் பண்ணுங்க, ஆனா ஸ்கூல மட்டும் விட்டு நிறுத்திராதீங்க சார்…’ என்று சொல்கிறார். 100 சதவீத தேர்ச்சிக்காக சில ஆசிரியர்களின் கீழ்மையான செயல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இப்பகுதி
#மழ_வந்தா_கூட_அத_நனயவிடமாட்டேன்_சார்…
குடும்பச் சூழலின் காரணமாக ஒரு வீட்டில் வேலை செய்துவிட்டு பள்ளிக்கூடம் வரும் சித்ரா ஒருமுறை காய்கறி வாங்கச் செல்லும் போது தான் வளர்த்து வந்த ஆட்டுகிடாவை கறிக்கடையில் வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்ததை நினைத்து வகுப்பறையில் அழுகிறார். அழும் காரணத்தை ஆசிரியர் கேட்கும்போது, ‘எங்க அப்பாவும் அம்மாவும் கூலி வேலை. எங்க அப்பா குடித்துவிட்டு எங்க அம்மா கிட்ட சண்டை போடும். எங்க மாமா தான் வீட்டு வேல பாக்க அனுப்பி வைச்சாங்க. வீட்டிலிருந்து கறி வாங்கும் போது நான் வளர்த்து வந்த ஆடு சார் அது. எங்க அப்பா ஒரு சந்தையில் வித்துட்டு போயிட்டாம் சார், என் அம்மா சொன்னது. நான் எப்போதும் மழவந்தாலும் அத நனய விட மாட்டேன் சார். என்ன பார்த்து கத்தும் சார். நான் பேசின அதுக்கு புரியும் சார். அது பேசினா எனக்கு புரியும் சார். இப்ப என் வீட்டு கறிகுழம்புல….’என்று சொன்ன சித்ராவை ஆசுவாசப்படுத்தி பிறகு… ஒருமாதம் சென்றவுடன் பள்ளிக்கு சித்ரா வரவில்லை. அந்த வீட்டு ஓனரிடம் கேட்கும்போது ‘அவர் பெரிய பிள்ளையா ஆயிட்டா, நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவோம். எங்கள் குழந்தைகளும் வெளியில படிக்கிறாங்க. அவ இங்க பாதுகாப்பா இருக்கிறதுக்கு முடியாது. அதனால அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டோம் சார்னு…’ சொல்லிட்டு சாதாரணமாக கடந்து போய்விட இப்போது நினைக்கத் தோணுது, சித்ராவை வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணாகத்தான் பார்த்து இருக்கிறார்களே தவிர சித்ராவை அவர்கள் குழந்தையாக பார்க்கவில்லை என்பதுமான கோபத்துடன் அந்தப்பகுதி நிறைவடைகிறது.
#நீங்க_எங்க_பள்ளிக்கூடத்துல_இருந்திருந்தா….
குடும்பத்தில் அப்பா அம்மாவுக்கும் பிரச்சினை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு பேருந்து நிலையத்தில் தம்பி இஞ்சிமொறப்பா விற்பதாகவும், தான் பூக்கடையில் வேலை பார்ப்பதாகவும் சொல்லக்கூடிய திவ்யா என்ற மாணவி, ஒருமுறை ஆசிரியரை தன் அத்தையோடு பார்க்க பள்ளிக்கூடம் வந்ததாகவும், ஆசிரியர் இடமே தற்போது நீங்க அந்த பள்ளிக்கொடத்துல இருந்திருந்தா எப்படியாச்சும் படிச்சிருப்போம் சார்… என்று சொல்லும் இடத்தில் மனம் இன்னும் ஒருபடி கணம் ஆகிறது… அந்த மாணவியின் நிலையைப் பார்த்து வருந்தும் ஆசிரியர் என இந்த நூல் முழுவதும் குடும்பச் சூழலின் காரணமாகவோ அல்லது ஆசிரியரின் கீழ்மையான செயல்களினாலோ அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் காரணமாகவோ மாணவர்கள் #இடைநிற்றல் என்ற சூழலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை நியாயப்படுத்துகிறார் ஆசிரியர் அவர்கள். கல்வி தான் இந்த சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு கருவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த கல்வியை எந்த பாகுபாடுமின்றி, எந்தவிதமான சங்கடத்தையும் ஏற்படுத்தாமல, எந்த ஒரு மனத் தடையையும் கொண்டுவராமல் மாணவர்களை வகுப்பறைக்கு கொண்டுவந்து எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு முழுமையான மனிதனாக வருங்காலத்தில் எதிர் கொள்ளக் கூடியவனாக நம் சமுதாயத்தில் கொண்டுவருவதுதான் ஒரு ஆசிரியருடைய கடமையாக இருக்கும். அதற்கு சமூகமும் குடும்பமும் பள்ளியும் குழந்தைகளுக்கு ஒரு தூணாக இருப்பது தான் சாலச்சிறந்தது நண்பர்களே. ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு புத்தகம்…
நூலின் பெயர்: வகுப்பறைக்கு வெளியே
ஆசிரியர்: இரா.தட்சணாமூர்த்தி வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்